விரல் நுனியில் தொடர்ந்து தொழில்நுட்பத்தை அணுக இயலும் இன்றைய வேகமான, நவீன உலகில் அமைதியாக ஓய்வெடுப்பது என்பது சற்று சவாலான ஒன்று.
மின்னிலக்கத்தையும் தொழில்நுட்பத்தையும் சிறிது நேரம் துண்டித்து அதிலிருந்து விலகி இருந்ததால் தமது மன ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது என்றார் நா. ரேணுகா.
முழுநேர ஆசிரியராகப் பணிபுரியும் ரேணுகா, தனது வேலையின் காரணமாகத் தொடர்ந்து மின்னிலக்கக் கருவிகளை ஓய்வுநாள்களிலும் பயன்படுத்தினார். “இதனால் நான் தொடர்ந்து வேலையில் மூழ்கியிருந்தேன். எனக்கான நேரத்தை ஒதுக்க முடியவில்லை,” என்றார் அவர்.
மின்னிலக்கச் சாதனங்களிலிருந்து வேண்டுமென்றே விலகியிருப்பது வாழ்வின் மீதான கட்டுப்பாட்டை மீண்டும் பெறவும் தொழில்நுட்பத்தை ஆரோக்கியமான முறையில் பயன்படுத்தவும் உதவும்.
“மின்னிலக்கத்திலிருந்து விலகி இருக்கும்போது திறன்பேசிகள், கணினிகள் மற்றும் பிற மின்னணுச் சாதனங்களின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தலாம்,” என்றார் ரேணுகா.
“வாரத்தில் ஒருமுறையாவது நான் என் மின்னிலக்கச் சாதனங்களிலிருந்து விலகி இருப்பேன். அந்த நேரத்தில் புத்தகம் படித்தல், குடும்பத்துடன் நேரம் செலவழித்தல், தியானம் போன்ற நடவடிக்கைகளில் என்னால் கவனம் செலுத்த முடிகிறது,” என்று அவர் கூறினார்.
அண்மைய காலங்களில் தொழில்நுட்பத்தை அதிகம் சார்ந்திருக்கும் போக்கு அதிகரித்துள்ளது. திறன்பேசிகள் முதல் சமூக ஊடகத் தளங்கள் வரை தகவல் தொடர்பு, பொழுதுபோக்கு மற்றும் வேலைக்காக இந்தக் கருவிகளை ரேணுகா போன்ற பலரும் அதிக அளவில் சார்ந்திருக்கின்றனர்.
இதனால், கவனம் செலுத்தும் ஆற்றல் குறைகிறது; மன அழுத்தம் அதிகரிக்கிறது; ஒட்டுமொத்த உற்பத்தித் திறன் பாதிப்படைகிறது.
தொடர்புடைய செய்திகள்
ஒரு சராசரி சிங்கப்பூரர் ஒரு நாளைக்குச் சுமார் 3.7 மணி நேரம் திறன்பேசியில் செலவிடுகிறார் என்பதை ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. 2022ஆம் ஆண்டில், சிங்கப்பூரில் திறன்பேசியைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை சுமார் 5.57 மில்லியனை எட்டியது. இந்த எண்ணிக்கை, 2028ஆம் ஆண்டுக்குள் 6.16 மில்லியனுக்கும் அதிகமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர் தகவல்களை எடுத்துக்கொள்ளக்கூடிய நமது மூளை வெகுவிரைவில் சோர்வடையும் வாய்ப்புகள் உள்ளன. அத்துடன், தொழில்நுட்பத்திற்கு அடிமையாகும் தன்மை, அதனிடமிருந்து விலகி இருப்பதைச் சற்று கடினமாக்குகிறது.
எதுவாக இருப்பினும், அதிக அளவில் மின்னிலக்கப் பயன்பாட்டின் எதிர்மறையான தாக்கத்தை அறிந்துகொள்வது, நமது வாழ்வின் மீதான கட்டுப்பாட்டை மீட்டெடுப்பதற்கான முதல் படியாகும். மின்னிலக்கப் பயன்பாட்டிலிருந்து விலகி இருப்பது தொழில்நுட்பத்தை முற்றிலும் கைவிடுவது அல்ல. மாறாக, அவ்வாறு செய்வது ஓர் ஆரோக்கியமான சமநிலையைக் கண்டறிவதாகும்.
மின்னிலக்கச் சாதனங்களிலிருந்து விலகி இருப்பதால் ஏற்படும் நன்மைகள் என்ன?
மேம்படுத்தப்பட்ட கவனம் மற்றும் செரிவாற்றல்
மின்னிலக்கச் சாதனங்களிலிருந்து ஓய்வெடுப்பதன் மூலம் மூளைத்திறன் மேம்பட்டு அதிக கவனம் செலுத்துவதற்கு வழிவகுக்கும்.
மேம்படுத்தப்பட்ட வேலை - வாழ்க்கை சமநிலை
சாதனங்களிலிருந்து விலகிச்செல்வதன் மூலம் தெளிவான வேலை - வாழ்க்கை வரம்புகளை அமைத்து தனிப்பட்ட நேரத்துக்கு முன்னுரிமை அளிக்கலாம்.
சிறந்த தூக்கம் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியம்
திரையிலிருந்து வெளிப்படும் நீல நிற ஒளியானது இயற்கையான உறக்க முறைகளைச் சீர்குலைக்கிறது. உறங்குவதற்குமுன் மின்னிலக்கச் சாதனங்களிலிருந்து விலகி இருப்பதன் மூலம் உடலும் மனமும் ஓய்வுபெறுகிறது. இதன் விளைவாகச் சிறந்த தூக்கம் கிடைக்கும்.
மின்னிலக்கச் சாதனங்களிலிருந்து எப்படி விலகி இருப்பது?
உணவு நேரங்கள் அல்லது உறங்குவதற்குமுன் மின்னிலக்கச் சாதனங்களை ஒதுக்கி வைத்துவிட வேண்டும். இதுபோன்ற உறுதியான வரைமுறைகளை அமைத்துக்கொள்வதால் நம் நேரத்தைச் சரிவர வகுத்து மின்னிலக்கத்திலிருந்து ஓய்வுபெறலாம்.
புத்தகம் படிப்பது, உடற்பயிற்சி செய்வது அல்லது ஒரு பொழுதுபோக்கைக் கடைப்பிடிப்பது என எதுவாக இருந்தாலும், மின்னிலக்கத் தழுவல் இல்லாத செயல்களில் ஈடுபடுவது முக்கியமானது.
ஒப்புநோக்க, தொழில்நுட்பத்திலிருந்து ஓய்வெடுக்க அதே தொழில்நுட்பம் பயன்படுகிறது. மின்னிலக்கக் கருவிகளில் செலவிடும் நேரத்தைக் கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் திறன்பேசிகள் இப்போது பல அம்சங்களைக் கொண்டுள்ளன.
இந்தக் கருவிகளைப் பயன்படுத்துவதன் மூலம் மின்னிலக்கப் பழக்கவழக்கங்களைப் பற்றி அறிந்து, மின்னிலக்கச் சாதனங்களில் எவ்வளவு நேரம் செலவிடுகிறோம் என்பதற்குக் குறிப்பிட்ட வரம்புகளை அமைக்கலாம்.
வேண்டுமென்றே மின்னிலக்கம், தொழில்நுட்பத்திலிருந்து விலகி இருப்பதன் மூலம் நமது ஒட்டுமொத்த நல்வாழ்வையும் மேம்படுத்திக்கொள்ளலாம்.