மூப்படையும்போது ஒற்றைக் காலில் நிற்பது கடினமாக இருந்தாலும் அதற்குத் தக்க பயிற்சியை மேற்கொண்டால் ஒருவரின் உடல் வலிமையடைந்து, நினைவாற்றல் கூர்மையடைந்து, மூளை நன்கு செயல்படத் தொடங்கும்.
இளவயதில் ஒற்றைக் காலில் நின்று சமநிலையைப் பேணுவது எளிதாக இருக்கும்.
ஒருவர் தமது 30களில் இருக்கும்போது ஒற்றைக் காலில் நிற்கும் திறன் அதிகமாக இருக்கும்.
50 வயதுக்குமேல் ஆகிவிட்டால் ஒற்றைக் காலில் சில நொடிகள் நிற்பதுகூட, ஒருவர் எவ்வாறு மூப்படைகிறார் என்பதைக் கண்டறிய உதவும்.
ஒற்றைக் காலில் நிற்பது ஒருவருக்கு பல்வேறு நன்மைகளை வழங்குகிறது.
தடுமாறி விழும் ஆபத்தைக் குறைப்பது, நினைவாற்றலை வலுப்படுத்துவது, உடல் வலிமையை அதிகரிப்பது ஆகியவை அவற்றில் அடங்கும்.
‘சார்க்கோபேனியா’ எனப்படும் வயது தொடர்பான தசைத்திசு இழப்பு ஏற்படாமல் இருக்க மருத்துவர்கள் பலர் ஒற்றைக் காலில் நிற்கும் பழக்கத்தை வலியுறுத்தி வருகின்றனர்.
30 வயதிலிருந்து ஒவ்வொரு பத்தாண்டுக்கும் எட்டு விழுக்காடு வரை ஒருவரின் தசைத்திசு குறையத் தொடங்கும்.
80களை எட்டுமுன் 50 விழுக்காட்டு மக்களுக்கு சார்க்கோபேனியா கண்டறியப்படும் என்று நம்பப்படுகிறது.
ஒற்றைக் காலில் நிற்கும் பயிற்சியை மேற்கொள்பவர்களுக்கு சார்க்கோபேனியா என்னும் குறைபாடு ஏற்படும் அபாயம் மிகக் குறைவாக உள்ளது.
பார்ப்பதற்கு எளிமையாகத் தோன்றும் இந்த அசைவிற்கு தசை வலிமை, நெகிழ்வுத்தன்மை மட்டும் போதாது. கண்களிலிருந்து வரும் தகவல்களை ஒருங்கிணைக்கும் மூளையின் திறனும் அவசியம்.
ஒரு காலில் நிற்கும் திறன் மூளையின் முக்கியப் பகுதிகளின் அடிப்படை நிலை குறித்த பல தகவல்களை வெளிப்படுத்தக்கூடும்.
எதிர்வினை வேகம், அன்றாடப் பணிகளைச் செய்யும் திறன், புலன்களிலிருந்து வரும் தகவல்கள் எவ்வளவு விரைவாக ஒருங்கிணைக்கப்படுகின்றன போன்றவற்றுடன் தொடர்புடையவையும் அதில் அடங்கும்.
வயதாகும்போது அனைவர்க்கும் ஒரு குறிப்பிட்ட அளவு மூளைச் சுருக்கம் ஏற்படுகிறது.
ஆனால், அது மிக விரைவாக நடக்கத் தொடங்கினால், சுறுசுறுப்பாக இருப்பதையும் பிற்காலத்தில் நடமாடுவதற்குப் பிறர் உதவியின்றி சுதந்திரமாக வாழ்வதையும் தடுப்பதோடு கீழே விழும் அபாயத்தையும் அதிகரிக்கக்கூடும்.
ஒரு காலில் நிற்கும் பயிற்சியை முனைப்புடன் செய்வதன்மூலம் வயது தொடர்பான இப்பிரச்சினைகளின் அபாயத்தைப் பேரளவில் குறைக்க முடியும் என்று ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.
ஒரு காலில் நின்று சமநிலை பேணுவதற்கு மூளையின் முன்பகுதித் தூண்டப்படுகிறது. இதனால் பணிகளைச் செய்யும்போது அறிவாற்றல் திறன் அதிகரிக்கும்.
50 வயதுக்கு மேற்பட்டவர்கள் 10 நொடிகளாவது ஒற்றைக் காலில் நின்று பழக வேண்டும்.
பாத்திரம் கழுவும்போது அல்லது பல் துலக்கும்போது நிற்பது போன்ற அன்றாடச் செயல்பாடுகள் ஒரு காலில் நிற்கும் திறனைப் பயிற்சி செய்வதற்குச் சிறந்த நேரம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

