‘சோனா’ எனப்படும் நீராவிக் குளியல் பல நூற்றாண்டுகளாக மக்களால் அறியப்பட்டு வருகிறது. நன்மை பல தரும் அந்தக் குளியல் முறை அண்மைக் காலமாகத்தான் பரவலாகி வருகிறது.
இதய நலன்
வழக்கமான நீராவிக் குளியல் இதயத்திற்கு நன்மை பயக்கும் என்று பல ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. நீராவிக் குளியல் மனித உடலின் உயிரணுக்கள், இரத்தக் குழாய்களான தமனிகள், நரம்பு மண்டலம் ஆகியவற்றின் செயல்பாட்டைத் தூண்டி, இதய நலத்தை மேம்படுத்தும்.
பின்லாந்தில் ஆண்களிடம் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் நீராவிக் குளியல் மேற்கொள்வோருக்கு திடீரென இதயம் செயலிழக்கும் அபாயம் 63% குறைந்தது தெரியவந்தது.
ரத்த அழுத்தம்
நீராவிக் குளியல் தற்காலிகமாக இதயத் துடிப்பையும் ரத்த அழுத்தத்தையும் அதிகரித்தாலும், நீண்டகால நோக்கில் அது ரத்த அழுத்தத்திற்கு நன்மை பயக்கிறது.
உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு நீராவிக் குளியல் கைகொடுக்கும். உயர் ரத்த அழுத்தம் இல்லாதவர்களுக்கும் அது பிற்காலத்தில் உயர் ரத்த அழுத்தப் பிரச்சினை ஏற்படும் அபாயத்தைக் குறைக்கும்.
முதுமைக்கால மறதிநோய்
வழக்கமாக நீராவிக் குளியல் சென்று வந்தால் முதுமைக்கால மறதிநோய் மற்றும் அல்சைமர் நோயை உருவாகும் அபாயத்தைக் குறைக்கலாம். வாரத்திற்கு நான்கு முதல் ஏழு முறை நீராவிக் குளியல் செய்தால் ஆண்கள் நோய்வாய்ப்படும் அபாயம் பாதியாகக் குறைவதாக ஓர் ஆய்வு முடிவு காட்டுகிறது.
வலியைக் குறைக்கும்
நீராவிக் குளியல் தசைவலியைப் போக்கும். முடக்கு வாதம் மற்றும் முதுகுத்தண்டு அழற்சி (Ankylosing spondylitis) பாதிப்பு உள்ளவர்களுக்கும் நீராவிக் குளியல் பயனளிக்கிறது.
மன உளைச்சல்
நீராவிக் குளியல் ஒட்டுமொத்த மன அழுத்தத்தைக் குறைக்கும். கோர்ட்டசால் என்ற மன அழுத்தச் சுரப்புநீரின் அளவைக் குறைக்கும் என்று கூறுவதற்கான சான்றுகள் உள்ளன. மனச்சோர்வு உள்ளவர்கள் நீராவிக் குளியலுக்கு தவறாமல் சென்று வருவது பசியைக் குறைக்கும்.
தொடர்புடைய செய்திகள்
நச்சுகள் வெளியேறும்
சிலர் நச்சுநீக்கத் திட்டத்தின் ஒரு பகுதியாக நீராவிக் குளியலுக்குச் செல்கின்றனர். கன உலோகங்கள் போன்ற கொழுப்பிலுள்ள பொருள்களின் நச்சு நீங்குவதற்கு வியர்வை பயனுள்ளதாக இருக்கும்.
சிலர் போதைப் பொருள்களிலிருந்து வரும் நச்சுகளை நீக்குவதற்கு நீராவிக் குளியல் செய்கின்றனர். வியர்வை மூலம் அந்த வேதிப்பொருள்களை அகற்ற நீராவிக் குளியல் உதவக்கூடும்.
நல்ல உறக்கம்
நீராவிக் குளியல் உட்பட வெப்பம் தொடர்பான சிகிச்சை முறைக்குப் பிறகு இரவில் பலருக்கும் நல்ல உறக்கம் வருவதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

