சர்க்கரை பொதுவாக உடல்நலனுக்குத் தீங்கு விளைவிக்கும் பொருள் என நிபுணர்கள் எச்சரிக்கும் நிலையில், அதற்கான மாற்றாகப் பல பொருள்களும் சந்தையில் உலவுகின்றன.
சர்க்கரை வகைகள், மாற்றுப் பொருள்கள் ஆகியவை, செரிமான முறை, குடல் நலன், அதன் அமிலத்தன்மை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு மதிப்பிடப்படுகின்றன.
உடல், குடல் நலனைப் பொறுத்தமட்டில் வெள்ளைச் சர்க்கரை ஆக அதிக ஆபத்தானது. அதிகமாகச் சுத்திகரிக்கப்படுவதால், குடலில் உள்ள நல்ல நுண்ணுயிரிகளுக்குக் கேடு விளைவிக்கிறது.
‘அசிடிட்டி’, செரிமான மண்டல வீக்கம் ஆகியவற்றையும் ஏற்படுத்துகிறது. தொடர் பயன்பாடு கல்லீரலையும் பாதிக்க வாய்ப்புள்ளது.
இதற்கு மாற்றாகப் பலர் பழுப்புச் சர்க்கரை உபயோகிக்கின்றனர். இதில், வெள்ளைச் சர்க்கரையைவிட சற்று கூடுதலான தாதுப்பொருள்கள் இருந்தாலும், இதுவும் செரிமான மண்டலத்தைப் பாதிக்கிறது.
வேறு சிலரிடம் வெல்லம், நாட்டுச் சர்க்கரைப் பயன்பாடு பரவலாகியுள்ளது. குறைவான அளவு உட்கொள்வது நலம். ஆனால் அளவு அதிகமானால் வயிற்றுக்கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
சிறிதளவு மட்டும் இனிப்பு சேர்த்துக்கொள்பவர்களுக்கு தேன், ஓர் நல்ல மாற்று. அதிலுள்ள நோயெதிர்ப்பு சக்தி, குடலுக்கு நலன் பயக்கும். ஆனால், ‘ஃப்ரக்டோஸ்’ அளவு அதிகம் என்பதால், உட்கொள்ளும் அளவில் கவனம் அவசியம்.
சர்க்கரைக்கு மாற்றுப் பொருள்கள்
சர்க்கரை போன்றே ஏறத்தாழ 70 விழுக்காடு இனிப்புத் தன்மையுடன், சோளத்திலிருந்து தயாரிக்கப்படும் எரித்ரிட்டால், பொதுவான மாற்றாகச் சந்தையில் விற்பனையாகின்றன. இதில், கலோரிகள் இல்லை. இதனைப் பெரும்பாலும் சிறுகுடல் உறிஞ்சிக்கொள்வதால் குடல் மண்டலத்துக்குப் பிரச்சினைகள் வருவதில்லை.
தொடர்புடைய செய்திகள்
இது சர்க்கரை அளவை அதிகரிக்காவிட்டாலும், செரிமானக் கோளாறுகளுக்கு வழிவகுக்கலாம்.
ரத்தத்தில் சர்க்கரையை கலக்காமல், இனிப்புச் சுவையை வழங்கும் ‘ஸ்டீவியா’ தற்போது உடல்நலனில் அக்கறை கொண்டோர் மத்தியில் பிரபலமாக உள்ளது. இது, செரிமான மண்டலத்துக்கும் சிறந்தது.
இவற்றைச் சேர்த்த பானங்களில் இனிப்புச் சுவை கிடைத்தாலும், சற்றே மாறுபட்ட பிற்சுவை (Aftertaste) சிலருக்குப் பொருந்தாமல் போகலாம்.
சர்க்கரைக்கு சிறந்த மாற்றாகக் கருதப்படுவது ‘மாங்க் ஃப்ரூட்’. இது அசிடிட்டி உள்ளிட்ட எந்தவிதக் கோளாறுகளையும் ஏற்படுத்துவதில்லை. ஏறத்தாழ அனைத்து தரப்பினருக்கும் பொருந்துவதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.
ஒரு நாளின் மொத்த கலோரியில் 5 முதல் 10 விழுக்காட்டுக்குள் சர்க்கரை அளவு இருப்பது சிறந்தது என்று உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ளது. இது, வயது, உடலில் உள்ள சிரமங்களைப் பொறுத்து மாறுபடலாம்.
நிபுணர்கள், மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் சரியான மாற்றைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துவது இனிப்புச் சுவையைத் தவிர்க்காமல் சர்க்கரையைக் குறைக்க உதவும்.

