வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் நம்மை வளர்த்து, வழிநடத்தி, ஆதரித்துவரும் அன்னையின் தன்னலமற்ற அன்பு, அர்ப்பணிப்பு, தியாகத்தை அங்கீகரித்து அவர்களுக்கு நமது நன்றியைத் தெரிவிக்கும் நாள் அன்னையர் தினம்.
ஒவ்வோர் ஆண்டும் மே மாதம் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.
அவ்வகையில், இவ்வாண்டு மே 11 ஞாயிற்றுக்கிழமையன்று அன்னையர் தினம் கொண்டாடப்படும் நிலையில், அன்னையரை மகிழ்விக்க சில அர்த்தமுள்ள பரிசு யோசனைகள் இதோ!
உங்கள் தாய்க்கு உங்கள் நன்றியுணர்வை தெரிவிக்க நீங்கள் ஒரு தனிப்பயனாக்கப்பட்ட வாழ்த்து அட்டையை உருவாக்கலாம். நீங்கள் அவரிடம் நேரில் சொல்ல முடியாத உணர்வுகளை எழுத்துமூலமாகப் பகிர்ந்துகொள்ளலாம். ஆக எளிதான பரிசாக இது இருந்தாலும், பொருள்பொதிந்த பரிசு இது..
சொற்களால் விவரிக்க முடியாதவற்றைப் புகைப்படங்கள் மௌனமாக வெளிப்படுத்தும். உங்கள் தாயுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களைத் தேர்ந்தெடுத்து, பிற நினைவுப்பொருள்களுடன் இணைத்து, உங்கள் தாயுடன் நீங்கள் கழித்த, மறக்கமுடியாத நேரங்களை நினைவுபடுத்தும் வகையில் ஒரு நினைவுமலரை உருவாக்கலாம்.
நாள் முழுவதும் அயராது உழைத்து, ஆண்டு முழுவதும் உங்களை அக்கறையோடு கவனித்துக்கொள்ளும் தாயாருக்கு ஓய்வளிக்கும் வகையில், அவருக்கு ஒரு நாள் வேலையிலிருந்து விடுமுறை அளிக்கலாம். சமையல், வீட்டைச் சுத்தம் செய்தல் போன்ற வீட்டு வேலைகளை நீங்கள் செய்து, அவருக்கு ஓய்வுதரலாம். அவருக்குப் பிடித்த உணவு வகைகளை நீங்களே சமைத்து அல்லது கடையிலிருந்து வாங்கித் தரலாம்.
உங்கள் தாயார் வெகுநாள்களாகச் சுற்றுலா செல்ல நினைத்திருந்த இடத்திற்கு, அது உள்ளூரில் இருந்தாலும் வெளிநாட்டில் இருந்தாலும், அங்கு அவரை அழைத்துச் செல்லலாம். அச்சுற்றுலா அவரது மனத்திற்கு இதமளிக்கலாம்.
உடற்சோர்வைப் போக்கும் விதமாக ‘ஸ்பா நாள்’ அனுபவத்தைப் பரிசாக வழங்கலாம். உங்களது தாயார் செய்யும் அனைத்து கடின உழைப்புக்கும் பாராட்டு தெரிவிக்கும் வகையில், இது அவரது உடல், மனநலத்திற்கு உகந்த, புத்துணர்ச்சி அளிக்கும் ஒரு சிறந்த பரிசாக அமையலாம்.
தொடர்புடைய செய்திகள்
இத்துடன், நறுமண மெழுகுவத்திகள், முதுகு, கால்வலிக்கு நிவாரணம் தரும் ‘மசாஜ்’ கருவி, உடல்நலத்திற்காக வைட்டமின் மாத்திரைகள் போன்றவற்றையும் வாங்கித் தரலாம்
செடி வளர்ப்பதில் ஆர்வமுள்ள தாய்மார்களுக்கு வீட்டை அலங்கரிக்கும் வகையிலும் நறுமணம் அளிக்கும் வகையிலும் அழகிய மலர் அல்லது பழங்களைக் கொண்ட செடிகளை வழங்கலாம். இதனால், உற்சாகமான, மலர்ச்சியான சூழலை ஏற்படுத்துவதுடன் அந்தச் செடி இருக்கும் காலம்வரை அது தொடர்ந்து ஓர் அர்த்தமுள்ள, சிந்தனைமிக்க பரிசாகவும் இருக்கும்.
வீட்டுக்குத் தேவையான பொருள்கள் அல்லது வீட்டு வேலைகளைக் குறைக்கும் சாதனங்களைப் பரிசாக வாங்கி கொடுத்தால், அவை அன்னையர்க்கு மிகுந்த பயனளிக்கும். எடுத்துக்காட்டாக, அவர்கள் காய்கறி வெட்டும் நேரத்தைக் குறைக்க ‘டைசர்’களையும் ‘சாப்பர்’களையும் அல்லது அந்தப் பயன்பாட்டுடன் கூடிய ‘மிக்சி’களையும் வாங்கி கொடுக்கலாம்.
அமர்ந்து பேசுவதற்குக்கூட யாருக்கும் நேரம் கிடைக்காதபடி இன்றைய வாழ்க்கையைப் பரபரப்பாக ஆக்கிக்கொண்டுள்ளோம். எனவே, உங்களது தாயாரை மகிழ்விக்க அவருடன் அமர்ந்து பேசுங்கள், அவருடன் நேரத்தைச் செலவிடுங்கள். அதுவே, அவருக்கு ஆகச் சிறந்த பரிசாகவும் அமையலாம்.