அன்னையர் தினம் இவ்வாண்டு மே 11ஆம் தேதி நீண்ட வார இறுதி விடுமுறையுடன் இணைந்து வருகிறது.
அந்த நன்னாள் பரிசாகப் பலரும் தங்கள் அன்னையரை வெளிநாடுகளுக்குச் சுற்றுலா அழைத்துச் செல்ல எண்ணியிருக்கலாம். அவர்களுக்கு உதவும் வகையில், சிங்கப்பூரிலிருந்து குறுகிய நேரத்தில் செல்லத்தக்க சில சுற்றுலாத் தலங்கள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன.
பாலி, இந்தோனீசியா
உலகெங்கிலுமுள்ள சுற்றுப்பயணிகளின் விருப்பமான தீவுகள் பட்டியலில் தொடர்ந்து முதலிடம் வகிப்பது இந்தோனீசிய நாட்டின் பாலித் தீவுகள்.
வெண்மணற்பரப்புள்ள கடற்கரைகள் தொடங்கி, அமைதியான தங்குமிடங்கள்வரை பல்வேறு இடங்களையும் நடவடிக்கைகளையும் கொண்ட இடம் பாலித் தீவு. ஓய்வெடுக்க விரும்பும், மன அமைதியை நாடும், இயற்கைக் காட்சிகளை விரும்பும், கேளிக்கைகளைக் கண்டு இன்புற ஏற்ற இடம் பாலி.
தனா லாட் கடற்கரைக் கோயில், நெற்பயிர்கள், ‘துலாம்பென்’, ‘நூசா பென்னிதா’ உள்ளிட்ட கடல்சார்ந்த இடங்கள், விளையாட்டுப் பூங்கா, நடன நிகழ்ச்சிகள் எனப் பலதரப்பட்ட அம்சங்கள் கொண்ட பாலி, அன்னையர் தின சுற்றுலாவுக்குச் சிறந்த தெரிவாக அமையும்.
பேங்காக்
வானுயரக் கட்டடங்கள் ஒருபுறம், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த, நூற்றாண்டுகள் பழமையான ‘ரத்தனகோசின்’ காலத்துக் கோவில்கள் மறுபுறம் என அன்னையர் தினத்தில் பார்த்து மகிழ ஏதுவான இடமாக விளங்குகிறது தாய்லாந்துத் தலைநகரான பேங்காக்.
‘வாட் போ’ கோவில், இரவுச் சந்தை, பலவகை உணவுகள், பொருள்கள் என அன்னையரை மகிழ்விக்கும் அம்சங்கள் நிறைந்த இடங்களும் அங்குள்ளன.
பினாங்கு
பண்பாடு குன்றாது பொலிவுடன் திகழும் இடங்களை விரும்பும் தாய்மாரை அன்னையர் தின சுற்றுலாவாக அழைத்துச்செல்ல மற்றொரு சிறந்த தெரிவு மலேசியாவின் பினாங்கு நகரம்.
தொடர்புடைய செய்திகள்
யுனெஸ்கோவின் கலாசார முக்கியத்துவம் வாய்ந்த இடமான ‘ஜார்ஜ் டவுன்’, நெரிசலில்லாச் சாலைகள், கலைநயமிக்க கட்டடங்கள், ஆர்மீனியர் தெரு, கலை அம்சங்கள் எனக் கலைக்கண் கொண்டோர்க்கு விருந்தாக பினாங்கு நகரம் அமைந்துள்ளது.
‘கெக் லோக் சி’ கோவில், பாரம்பரிய உணவு வகைகள், தெருக்கடைகள் எனப் பகலிலும் இரவிலும் வெவ்வேறு நிறம் பூணும் நகரமாக விளங்குகிறது பினாங்கு.
ஹோ சி மின்
வியட்னாம் நாட்டின் ‘மேக்காங்’ நதியோரமாக அமைந்துள்ள ஹோ சி மின் நகரம், பிரெஞ்சுக் காலனி கட்டடங்கள், போர்க்கால நினைவுகளைக் காட்டும் தலங்கள், அழகிய காப்பிக்கடைகள் எனச் சுற்றிப்பார்க்க அழகிய இடங்கள் நிறைந்தது.
அரும்பொருளகச் சுற்றுலா, பாரம்பரியமான வியட்னாமியக் காப்பி என அன்னையர் தினத்தை மகிழ்ச்சியுடன் கழிக்க ஹோ சி மின் அருமையானதோர் இடம்.