வர்த்தகங்களையும் வாய்ப்புகளையும் இணைத்தது சனிக்கிழமை (செப்டம்பர் 20) நடைபெற்ற ‘பிஸ்ஸ்ஃபியர் 2025’ (BizSphere) வர்த்தக மாநாடு.
லிஷா பெண்கள் பிரிவும் லிஷாவும் இணைந்து ‘ஒன் ஃபேரர்’ ஹோட்டலில் ஏற்பாடு செய்த இம்மாநாடு வர்த்தக நோக்கத்துடன் மட்டுமன்றி அறக்கொடை நோக்கத்துடனும் நடைபெற்றது.
மாநாட்டில் திரட்டப்பட்ட நிதியிலிருந்து ‘பாத்லைட் ஆட்டிசம்’ வள நிலையத்திற்கு $5,000 நன்கொடை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், பெண் தொழில்முனைவர்கள் நால்வருக்கு விருது வழங்கிக் கெளரவிக்கப்பட்டது.
‘முன்னோடி’ (TrailBlazer) விருதைப் பெற்றார் ‘யு கேட்வே’ எனும் விநியோக நிறுவனத்தின் இயக்குநர் லிங் வோங். தென்கிழக்காசியாவில் 25 வணிகச்சின்னங்கள் (brands) கொண்ட பொருள்களை விநியோகித்த அந்நிறுவனம், கொவிட்-19க்கேற்ப மாற்றம் கண்டது. “சமூக ஊடகங்களில் அதிகமான போட்டித்தன்மை இருப்பதால் நிறுவனங்களுக்கு விநியோகிப்பதற்குப் பதிலாக நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு விநியோகிக்கத் தொடங்கினோம்,” என்றார் திருவாட்டி லிங்.
‘உயரும் நட்சத்திரம்’ விருதைப் பெற்றார் மெத்தாஸ், 22. ஆசிரியர்களின் நேரத்தைச் சேமிக்க உதவும் ‘செல்வி நோவா’ செயற்கை நுண்ணறிவு உதவியாளரை (https://noverseinc.com/) அவர் சக மாணவர் வசந்த்துடன் இணைந்து உருவாக்கியுள்ளார். இத்தளத்தில் ஆசிரியர்கள் வினா, விடைத்தாள்களைப் பதிவேற்றினால் அது திருத்தித் தரும். “16 வயதிலிருந்து துணைப்பாடம் கற்பித்துவந்ததால் ஆசிரியர்களின் சவால்கள் எனக்குப் புரிந்தன,” என்றார் மெத்தாஸ். இப்போது சில துணைப்பாட நிலையங்களில் இத்தளம் சோதிக்கப்பட்டுவருகிறது.
வர்த்த உன்னதத்துக்கான (business excellency) விருதைப் பெற்றார் ஷில்பா கர்க்கேரா. அவர் மைரா தொழில்நுட்பங்களின் குழுமத் தலைமை நிர்வாகியாகவும் ஃப்லோக் கேர் (Floc Care) நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாகவும் செயல்படுகிறார். இந்நிறுவனங்கள்வழி அவர் பல வகையான செயற்கை நுண்ணறிவுத் தீர்வுகளை வழங்குகிறார்.
“நான் முதலில் அறிவியலாளராகத்தான் இருந்தேன். உடற்குறையுள்ளோர் கண்ணால் நகர்த்தக்கூடிய வாகனத்தை உருவாக்கினேன். ஆனால் அது உலகெங்குமுள்ள உடற்குறையுள்ளோரைச் சென்றடையவில்லையே என்ற ஆதங்கத்தால்தான் தொழில்முனைவராக முடிவெடுத்தேன்,” என்றார் ஷில்பா. 2016ல் வாடிக்கையாளர்கள் நால்வருடன் இணைந்து ‘மைரா தொழில்நுட்பங்கள்’ நிறுவனத்தை அவர் அமைத்தார். தற்போது இந்நிறுவனம் 13 நாடுகளில் 11 துறைகளில் 2 மில்லியன் ஊழியர்களுடன் இயங்குகிறது.
தொடர்புடைய செய்திகள்
சிறுநீரகக் கோளாற்றால் 11 ஆண்டுகளாகச் சிரமப்பட்ட தன் தாயாரின் மன உறுதி தன் வர்த்தகங்களிலும் நிலைப்பதாகக் கூறினார் ஷில்பா.
‘வாழ்நாள் சாதனையாளர்’ விருதைப் பெற்றார் ‘சிங்கரங்கோலி’ நிறுவனர் விஜயலெஷ்மி மோகன், 66.
‘உலகின் ஆகப் பெரிய ரங்கோலி’க்காகக் ‘கின்னஸ்’ உலகச் சாதனை படைத்துள்ள அவர், 55 சிங்கப்பூர்ச் சாதனைகளையும் படைத்துள்ளார். மலேசியச் சாதனைப் புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளார்.
மனநல மருத்துவமனையில் அவர் ரங்கோலி, யோகா, பால்வுட் நடன சிகிச்சையும் வழங்குகிறார். முன்னர், சுவரில் செய்த ரங்கோலியை விற்று அதிபர் சவாலுக்கு நிதி திரட்டியுள்ளார். சென்ற ஆண்டு 20,000 அங்பாவ்கள் வைத்து ரங்கோலி செய்தார். எஸ்ஜி60க்காக 60 விதமான மூலப்பொருள்களுடன் ரங்கோலியைச் செய்யவுள்ளார்.
“ஆண்டுதோறும் இவ்விருதுகளை வழங்க விரும்புகிறோம். அடுத்த ஆண்டு மேம்பட்ட அளவில் வழங்கத் திட்டமிடுகிறோம்,” என்றார் லிஷா பெண்கள் பிரிவுத் தலைவர் எலிஷா வாணி பெருமாள்.
நிதியும் விரிவாக்கமும், நிலையற்ற சூழல்: கலந்துரையாடல்கள்
நிகழ்ச்சியில், ‘நிதியும் விரிவாக்கமும்’, ‘நிலையற்ற சூழலைக் கையாள்வது’ எனும் தலைப்புகளில் இரு கலந்துரையாடல்கள் நடந்தன. சிறப்பு விருந்தினரான ‘இஷ்தாரா ஜுவல்லரி’, ‘லூவினஸ் ஜுவல்லரி’, ‘மேஸ்ட்ரோ புரொடக்சன்ஸ்’ நிறுவனரும் நிர்வாக இயக்குநருமான பார்த்திபன் முருகையன் சில படிப்பினை அம்சங்களைப் பகிர்ந்தார்.
“பிராண்டிங் மிகவும் முக்கியம். அதனால்தான், என் தந்தை 1986ல் தொடங்கிய ‘இந்தியன் ஜுவல்லர்ஸ்’ நிறுவனத்தை, காலத்திற்கேற்ப 2015ல் ‘இஷ்தாரா ஜுவல்லரி’ எனப் புதுப்பித்தோம். கடையில் மக்கள் பொருள்கள் வாங்கும்போது பெருமைப்பட வேண்டும்.
“இந்தியர்களுக்கு அப்பால் பெரும்பான்மை மக்களைச் சென்றடைய ‘லுவினஸ் ஜுவல்லரி’ எனும் புதிய நிறுவனத்தைத் தொடங்கினோம். சாங்கி விமான நிலையத்தில் கடையைத் திறந்தோம். அங்கு நகை வாங்கும் சுற்றுப்பயணிகளை ஆராய்ந்தபோது ஹாங்காங்கில் நல்வாய்ப்புகள் உள்ளன என அறிந்து அங்கு விரிவுபடுத்தினோம். வர்த்தகத்தை விரிவாக்குமுன் சந்தையை நன்கு புரிந்துகொண்டு களமிறங்க வேண்டும்.
“குடும்ப வர்த்தகமாகவே இருந்தாலும் நிறுவனம்போல நடத்துவது, கணக்குகளை நிர்வகிப்பது அவசியம்,” என்றார் பார்த்திபன்.
‘இக்கிகாய் கேப்பிடல்’ நிறுவனர் ராஜேஷ் தேவர், “சொந்த முதலீட்டுடன் வர்த்தகத்தை நடத்த முடிந்தால் வெளி முதலீடுகளை நாடாதீர்கள். ஏனெனில் வர்த்தகத்தில் உங்கள் பங்கை அது குறைக்கும். சொந்த முதலீட்டில் வர்த்தகத்தை நடத்தினால் எதிர்காலத்தில் முதலீடு நாடும்போது அதிகப் பங்கை விட்டுக் கொடுக்கத் தேவையிருக்காது,” என்றார்.
நிறுவனங்கள் தம் கணக்குகளைச் சரியாக நிர்வகிப்பதோடு, கடன்களைச் சரியான நேரத்தில் அடைப்பதன் அவசியத்தை வலியுறுத்தினார் சிங்கப்பூர் தெற்காசிய வர்த்தக, தொழிற்சபைத் தலைவர் முனைவர் சின்னு பழனிவேலு.
சிறப்புரையாற்றிய ‘இன்சைட்ஸ் டேபில்’ நிர்வாக இயக்குநர் கேரிக் கியா, “நான் தோல்வியைச் சந்திக்க விரும்பவில்லை. அதனாலேயே அன்றாடம் என் கணக்குகள், திட்டங்களைக் கூர்ந்து கவனித்தேன். வெவ்வேறு சூழல்கள் பற்றிச் சிந்தித்துப் பார்த்தேன். ஆக மோசமான சூழல்பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்; எப்போது நஷ்டங்களைக் குறைத்துக்கொண்டு நிறுத்துவது என அறிந்துகொள்ளுங்கள். பிறர் ஏன் தோல்வியடைகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்,” என அறிவுறுத்தினார்.
நிகழ்ச்சியில் தொழில்முனைவர்கள், முதலீட்டாளர்கள் என 120 பேர் கலந்துகொண்டனர். பெண் தொழில்முனைவர்கள் மலிவு விலைச் சாவடிகளை அமைத்திருந்தனர்.