ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலய மண்டபத்தில் சனிக்கிழமை (ஜூன் 22) காலை 10 முதல் மாலை 4 மணி வரை ரத்த தான இயக்கம் நடைபெறவுள்ளது.
2020லிருந்து ஆண்டுதோறும் இந்த ரத்த தான இயக்கத்தை ஸ்ரீ சத்ய சாய் அனைத்துலக சிங்கப்பூர் அமைப்பு, ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலயம், சிங்கப்பூர் இலங்கை தமிழர் சங்கம் இணைந்து ஏற்பாடு செய்து வந்துள்ளன. இவ்வாண்டு முனீஸ்வரன் சமூக சேவைகள், சிங்கப்பூர் தெலுங்கு சமாஜமும் இணைந்துள்ளன.
சுகாதார அறிவியல் ஆணையமும் சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கமும் இந்த ரத்த தான இயக்கத்தை ஆதரிக்கின்றன.
16 வயதுக்கும் 60 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் ரத்த தானம் வழங்கலாம். ஆனால் வழக்கமாக ரத்த தானம் வழங்குபவர்கள் 65 வயது வரை தானம் செய்யலாம்.
ரத்த தானம் செய்ய குறைந்தது 45 கிலோகிராம் எடை கொண்டிருக்க வேண்டும். கடந்த ஒரு வாரத்திற்கு இருமல், தொண்டைவலி, சளி, வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகள் இல்லாமல் நல்ல உடல்நிலையில் இருக்கவேண்டும். கடந்த நான்கு வாரங்களாகக் காய்ச்சல் இருந்திருக்கக் கூடாது.
பிப்ரவரி 22ஆம் தேதி அல்லது அதற்குப் பிறகு இந்தியா, இந்தோனீசியா/மலேசியாவின் சில பகுதிகள் மற்றும் மலேரியா பரவலாக இருக்கும் மற்ற நாடுகளிலிருந்து திரும்பியுள்ளோரால் ரத்த தானம் கொடுக்க முடியாது.
இதுவரை சுமார் 120 பேர் ரத்த தானத்திற்குப் பதிவுசெய்துள்ளனர்.
ரத்த தானம் முடிந்த பிறகு சற்று நேரம் இளைப்பாற இடவசதியும் சிற்றுண்டியும் வழங்கப்படும். முற்பகல் 11 மணியிலிருந்து மதிய உணவும் வழங்கப்படும்.
தொடர்புடைய செய்திகள்
“சிங்கப்பூருக்கு ரத்தம் அதிக தேவை இருப்பதால், தகுதியுடைய பலரும் முன்வந்து ரத்த தானம் செய்ய வேண்டுகிறோம்,” என்றார் ஶ்ரீ சத்ய சாய் அனைத்துலக சிங்கப்பூர் அமைப்பின் ரத்த தான ஒருங்கிணைப்பாளர் விஸ்வேஸ்வரன்.
ரத்த தானத்திற்கு முன்பதிவு செய்ய https://bit.ly/22JunBDD2024 இணையத்தளத்தை நாடலாம்.
ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் பிறந்தநாளான நவம்பர் 23ஆம் தேதியன்றும் ரத்த தான இயக்கத்தை 25 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தி வந்துள்ளது ஸ்ரீ சத்ய சாய் அனைத்துலக சிங்கப்பூர் அமைப்பு.