மாலையில் பள்ளி முடிந்ததும் வீட்டிற்கு வரும் பிள்ளைகள், சாப்பிடுவதற்கு நொறுக்குத் தின்பண்டம் வேண்டும் எனப் பெற்றோரை நச்சரிப்பார்கள். வீடுகளில் முறுக்கு, மிக்சர் போன்றவை எதுவும் இல்லையென்றால் கடையில் துரித உணவு வாங்கித்தரும்படி கேட்பார்கள்.
அவ்வாறு நச்சரிக்கும் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான முறையில் குழந்தைகள் உடலுக்கு ஏற்றவாறு வீட்டிலேயே செவ்வாழை பழத்தை வைத்து கொழுக்கட்டை செய்து கொடுக்கலாம்.
செவ்வாழையில் இருக்கும் சத்துக்கள் அளப்பரியவை. குறிப்பாக, அப்பழத்தில் இருக்கும் பொட்டாசியம், சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதைத் தடுக்கும்.
சத்துக்கள் அதிகம் நிறைந்த அப்பழத்தைக் கொண்டு கொழுக்கட்டை செய்வதை நாம் இப்போது பார்ப்போம்.
அரிசி கொழுக்கட்டை, பூரண கொழுக்கட்டை, பால் கொழுக்கட்டை என செய்ததை தான் திரும்பத் திரும்ப செய்திருப்போம். ஆனால் செவ்வாழையில் கொழுக்கட்டை செய்வது புதிய அனுபவமாக இருக்கும். அடிக்கடி செய்து சாப்பிடுவதற்கும் தோன்றும்.
கொழுக்கட்டை செய்முறை:
‘மிக்சியில்’ செவ்வாழைப் பழம், உப்பு, நாட்டு சர்க்கரையுடன் பாலை ஊற்றி நன்கு அரைக்கவும். அரைத்த விழுதுடன் கேழ்வரகு, அரிசி மாவு ஆகியவற்றைச் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்கு பிசைந்து கொள்ளவும்.
அதனை சிறிய உருண்டைகளாக உருட்டி வேக வைத்து எடுக்கவும். வாணலியில் நெய் ஊற்றி அதனுடன் முந்திரி பருப்பு, திராட்சை, துருவிய தேங்காய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர், வேக வைத்த கொழுக்கட்டையையும் அதனுடன் சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான செவ்வாழைப்பழக் கொழுக்கட்டை தயார்.
கேழ்வரகில் இருக்கும் கால்சியமும் செவ்வாழையின் பொட்டாசியமும் சேர்ந்து பிள்ளைகளின் எலும்புக்கு வலுசேர்க்கட்டும்.

