விளையாட்டுவழி பிணைப்பை வலுப்படுத்தும் ‘பார்ன் டு பிளே’

விளையாட்டுவழி பிணைப்பை வலுப்படுத்தும் ‘பார்ன் டு பிளே’

படம்: பிளேயம்

14 Oct 2026 - 6:35 am

2 mins read

பிள்ளைகளுடனான பிணைப்பை வலுப்படுத்திக்கொள்ள விலையுயர்ந்த விளையாட்டுப் பொருள்களோ, விரிவான வாரயிறுதித் திட்டங்களோ தேவையில்லை.

அவர்கள்மீது கவனம் செலுத்தி, நம்பிக்கை வைத்து சிறிது நேரத்தை அவர்களுக்காக ஒதுக்கினால்போதும்.

‘பார்ன் டு பிளே: எ ஃபேமிலி பிளேடேட்’ என்ற இலவச சமூக நிகழ்ச்சி அத்தகைய அனுபவத்தைத் தர முற்பட்டுள்ளது.

அக்டோபர் மாதம் 10ஆம் தேதியிலிருந்து 11ஆம் தேதிவரை ஃபர்ன்வேல் சமூக மன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பெற்றோரும் பராமரிப்பாளர்களும் பரபரப்பான வாழ்க்கையைவிட்டு வெளியில் வந்து பிள்ளைகள் சொல்வதற்குச் செவிசாய்க்க தளம் அமைத்தது.

பிள்ளைகள் தங்கள் திறனை வெளிப்படுத்த விளையாட்டு முக்கிய அங்கம் வகிக்கிறது.
பிள்ளைகள் தங்கள் திறனை வெளிப்படுத்த விளையாட்டு முக்கிய அங்கம் வகிக்கிறது. - படம்: பிளேயம்

“பெற்றோராகப் பிள்ளைகளுக்கு என்ன செய்யவேண்டும் என்று சிந்திப்பதில் அதிக நேரம் செலவிடுகிறோம். ஆனால், சில நேரங்களில் நாம் வெறுமனே அவர்களுடன் அமர்ந்து அவர்களின் உலகம்மீது கவனம் செலுத்தவேண்டும் என்றுதான் அவர்கள் எதிர்பார்க்கின்றனர்,” என்றார் நிகழ்ச்சியின் இணை ஏற்பாட்டாளர் யூ ஜியாரொங்.

பெற்றோருக்கான தளத்தை நிறுவிய 43 வயது யூ, பிளேயம் என்ற லாப நோக்கமற்ற அமைப்புடன் இணைந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளார். யூவுக்கு 10 வயதிலும் 13 வயதிலும் இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

நிகழ்ச்சிக்கு வரும் ஆறு வயதுக்கும் குறைவான பிள்ளைகள், தங்கள் பெற்றோருடனும் பராமரிப்பாளர்களுடனும் இணைந்து பல்வேறு பொருள்கள் கொண்ட நடவடிக்கைகளில் ஈடுபடலாம். எட்டு வயது வரையிலான மூத்த உடன்பிறப்புகளும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதி உண்டு.

பிள்ளைகளின் ஆர்வமே நிகழ்ச்சியின் மூலதனம். எந்த எதிர்பார்ப்போ விதிமுறையோ இன்றி மனம்போல கொடுக்கப்பட்ட பொருள்களை வைத்து பிள்ளைகள் விளையாடலாம்.

வெவ்வேறு விளையாட்டுகள் ‘பார்ன் டு பிளே’ நிகழ்ச்சியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
வெவ்வேறு விளையாட்டுகள் ‘பார்ன் டு பிளே’ நிகழ்ச்சியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. - படம்: பிளேயம்

‘டிஐவாய் கார்ட்போர்ட் பிளேகிரவுண்ட்’ பகுதியில் பிள்ளைகளும் பெற்றோரும் மறுசுழற்சி செய்யப்பட்ட அட்டைப்பெட்டிகளைக் கொண்டு கற்பனையில் உதிக்கும் யோசனைகளை உருவாக்கி மகிழலாம்.

‘நேச்சர் பிளே’ என்ற பகுதியில் இலைகள், குச்சிகள், மரப்பட்டைகள் ஆகியவற்றைக் கொண்டு குடும்பங்கள் அழகான ஓவியங்களை வரையலாம்.

ஓய்வெடுத்து இளைப்பாற ‘விஸ்பரிங் டென்ட்’ என்ற பகுதியும் நிகழ்ச்சியில் அமைக்கப்பட்டுள்ளது.

சிறு பிள்ளைகளின் கற்பித்தலுக்கும் உரையாடலுக்கும் இயல்பாகவே விளையாட்டு ஒரு சிறந்த வழியாக உள்ளது என்றார் பிளேயம் அமைப்பின் நிர்வாக இயக்குநர் ‌‌‌ஷார்லட் கோ.

பிள்ளைகள் தங்கள் கருத்துகளை வார்த்தைகளால் வெளிப்படுத்துவதற்கு முன்னரே அவர்கள் என்ன யோசிக்கிறார்கள் என்பதை விளையாட்டு வெளிப்படுத்துகிறது என்றார் அவர்.

“விளையாட்டு என்பது பிள்ளைகள் தங்களைச் சுதந்திரமாக வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பைத் தருவதுடன் அவர்களின் திறனையும் கண்டறிய உதவுகிறது,” என்றார் ‌‌‌ஷார்லட்.

‘பார்ட் டு பிளே’ நிகழ்ச்சி 21 செங்காங் வெஸ்ட் அவென்யூவில் உள்ள ஃபேர்ன்வேல் சமூக மன்றத்தில் அக்டோபர் 10, 11ஆம் தேதிகளில் நடைபெறும்

முன்பதிவுக்கு borntoplay.eventbrite.sg என்ற இணையத்தளத்தை நாடலாம். அனுமதி இலவசம்.

குறிப்புச் சொற்கள்