சிங்கப்பூரின் அறுபதாவது ஆண்டைக் கொண்டாடும் வகையில் குழந்தைகளுக்கு ஏற்ற விளையாட்டுகள், நடவடிக்கைகளுடன் களைகட்டவுள்ளது மரினா ஸ்குவேர் கடைத்தொகுதி.
‘ரெட்ரோ’ எனும் 60கள் முதல் 2000 வரையிலான காலகட்டத்தின் முக்கிய அம்சங்களை உள்ளடக்கிய விளையாட்டுகள், பயிலரங்குகள் எனச் சிறுவர்களுக்கான நடவடிக்கைகளும், பெரியவர்கள் தங்கள் சிறுவயது நினைவுகளை அசைபோடவைக்கும் அனுபவங்களும் அக்கடைத்தொகுதியின் மத்தியப் பகுதியை அலங்கரிக்கவுள்ளன. வரும் ஜூன் 11ஆம் தேதி முதல் 29 ஆம் தேதிவரை இந்த விளையாட்டுகள் இடம்பெற்றிருக்கும்.
இதன் சிறப்பம்சமாகச் சிங்கப்பூரின் உள்ளூர் வனவிலங்குகள், பல்லுயிர் பெருக்கங்களைக் குறித்து விளக்கும் வண்ணம் ‘பெலிக்கன் மேஸ்’ எனும் விளையாட்டு அமையவுள்ளது. இதில் பங்கேற்கும் சிறுவர்கள், இவ்வட்டாரத்தின் வளமான நிலப்பரப்புகள் வழியே பயணிக்கும் அனுபவத்தைப் பெறலாம்.
கடந்த 1979ஆம் ஆண்டு வடிவமைக்கப்பட்ட ‘டிராகன் ஸ்லைட்’ எனும் சறுக்கு விளையாட்டு நிறுவலைக் கண்முன் நிறுத்தும் பெரிய ‘இன்ஃப்லேட்டபில் ட்ராகன் ஸ்லைட்’ அமைக்கப்படவுள்ளது.
கடந்த 1970கள், 80கள் காலகட்டத்தில் பிரபலமாக இருந்த ‘மொசைக்’ விளையாட்டு அரங்குகளின் வடிவமைப்பில் ஈர்க்கப்பட்டுள்ள விளையாட்டு, சிறுவர்களுக்குத் தங்கள் பெற்றோரின் சிறுவயது மகிழ்ச்சி, கற்பனை ஆகியவை குறித்து அறிந்துகொள்ள ஏதுவாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும், இறகுகள் இணைக்கப்பட்ட வட்டினைக் காலால் உதைத்து விளையாடும் ‘Chapteh’, கற்களைத் தூக்கிப்போட்டு பிடித்து விளையாடும் ‘ஐந்தாங்கல்’, பம்பரம் என பாரம்பரிய விளையாட்டுகளையும் சிறுவர்கள் விளையாட முடியும்.
தொடர்ந்து, அனைத்து வயதினருக்குமான, ‘பேஸ்டல்ஸ்’ எனும் வகை வண்ணம் தீட்டல் முறையில் எஸ்ஜி 60, தேசிய தினம் ஆகியவை தொடர்பான படங்களை வரையக் கற்றுத்தரும் பயிலரங்கும் நடைபெறவுள்ளது.

