குடல் அழற்சி நோயால் (Inflammatory Bowel Disease) உணவுச் செரிமான உறுப்புகளான வயிற்றிலும் குடலிலும் வீக்கமும் பாதிப்பும் ஏற்படுகின்றன.
சிங்கப்பூரில் கிட்டத்தட்ட 3,000 பேருக்கு இந்நோய் இருப்பதாக சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனைத் தரவு குறிப்பிடுகிறது.
முன்னைய காலத்தில் மேற்கத்திய நாட்டினர் குடலழற்சியால் அதிகம் பாதிக்கப்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில், தற்போது ஆசியாவிலும் அதன் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது.
இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு, களைப்பு, உடல் எடை இழப்பு ஆகியவற்றை எதிர்கொள்வர்.
குடல் அழற்சியைக் குணமாக்கும் முறை இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. நோயாளிகள் பலருக்கு வாழ்நாள் சிகிச்சை தேவைப்படுகிறது.
இதனால் மனநலமும் அன்றாட வாழ்க்கையும் பாதிப்படைகிறது.
குடல் அழற்சி நோய் தொடர்பான அனைத்துலக ஆய்வு ஒன்றின் முடிவுகள் இம்மாதத்தின் தொடக்கத்தில் வெளியீடு கண்டன.
ஹாங்காங்கின் சீனப் பல்கலைக்கழகமும் கனடாவின் கெல்கரி பல்கலைக்கழகமும் இந்த ஆய்வை நடத்தின.
தொடர்புடைய செய்திகள்
உலகின் பல்வேறு பகுதிகளில் ஏற்படும் இந்நோயை நான்கு கட்டங்களாக அந்த ஆய்வு வகைப்படுத்துகிறது.
‘நேச்சர்’ என்ற அறிவியல் சஞ்சிகையில் ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.
80 வட்டாரங்களில் 500க்கும் அதிகமான ஆய்வுகளிலிருந்து திரட்டப்பட்ட தரவுகளை ஆய்வுக்குழு பயன்படுத்தியது.
நோயின் கட்டங்களை வகைப்படுத்த இயந்திரக் கற்றல் மாதிரியை (machine-learning model) உருவாக்க அந்தத் தரவுகள் பயன்படுத்தப்பட்டன.
உருவாகுதல், வேகமடைதல், பரவுதல், சமநிலை காணுதல் ஆகியவை இந்நோயின் நான்கு படிநிலைகள்.
சீனாவிலும் மலேசியாவிலும் இந்நோய் வேகமாக அதிகரித்து வருவதாக ஹாங்காங்கின் சீனப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஜாய்ஸ் மாக் தெரிவித்தார்.
“மில்லியன்கணக்கானோரைப் பாதிக்கும் கடுமையான உடல்நலக் குறைபாடு இது. இந்நோயைக் கட்டுப்படுத்த கூடுதல் விழிப்புணர்வு, ஆய்வு, நோய்த்தடுப்பு முதலீடு ஆகியவை தேவைப்படுகின்றன,” என்றார் டாக்டர் ஜாய்ஸ்.
குடல் அழற்சி அபாயத்தைக் குறைக்கும் வழிமுறைகள்
உணவில் பழங்கள், காய்கறிகள், முழு தானிய உணவுப்பொருள்கள் ஆகியவற்றைச் சேர்த்துக்கொள்வது நல்லது.
இறைச்சி, பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளை அளவிற்கு அதிகமாக உண்பதைத் தவிர்க்க முயலுங்கள்.
புகைப்பிடித்தலும் மன உளைச்சலும் நோய்க்கான அபாயத்தை அதிகரிக்கலாம்.
மன உளைச்சலைக் குறைப்பதற்கு வேலைகளை அதற்கான நேரம் வகுத்துச் செய்ய வேண்டும். எப்பொழுதும் நிதானம் காப்பது நலம்பயக்கும்.
அடிக்கடி நீர் பருகி உடலின் ஈரத்தன்மையைக் காப்பது, இந்நோய்க்கான அபாயத்தைக் குறைக்கும்.
சர்க்கரை நிறைந்த உணவு வகைகளைக் குறைப்பதால் இந்நோய் மட்டுமின்றி இன்னும் பல நோய்களையும் தவிர்க்கலாம்.

