இஸ்கந்தர் புத்திரி: உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியை முன்னிட்டு, லெகோலேண்ட் மலேசியா பொழுதுபோக்குப் பூங்காவில் ‘பிரிக்ஃபெஸ்ட் 2026: ஃபுட்பால் எடிஷன்’ எனும் பிரம்மாண்ட காற்பந்துத் திருவிழா மே 22ஆம் தேதி தொடங்கி ஜூலை 19ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இத்திருவிழாவில், குடும்பத்துடன் வருவோருக்காக காற்பந்து விளையாட்டை மையமாகக் கொண்ட பல்வேறு சவால்கள், லெகோ கிண்ண வடிவமைப்புப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல சிறப்பம்சங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
‘ஒரு காற்பந்து நட்சத்திரமாவதற்கான பயணம்' என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இவ்வாண்டு திருவிழாவில், வருகையாளர்கள் நேரடியாகக் களமிறங்கி தங்களது திறமைகளையும் கற்பனைத் திறனையும் சோதிக்கும் வண்ணம், ஊடாடும் சவால்களும் விளையாட்டுப் போட்டிகளும் பூங்கா முழுவதும் அமைக்கப்பட்டுள்ளன.
“பொதுவாக, காற்பந்துப் போட்டிகளைக் குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்துதான் ரசிப்பார்கள். ஆனால், இந்த ‘பிரிக்ஃபெஸ்ட்’ திருவிழா, அவர்கள் அனைவரும் இப்போட்டிகளின் ஒரு பகுதியாகவே மாறி விளையாடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது,” என்று லெகோலேண்ட் மலேசியாவின் துணைத் தலைவர் சிஎஸ் லிம் கூறினார்.
விளையாட்டு மற்றும் பயிற்சிக் களங்கள்
வருகையாளர்கள் தங்களுக்கு வழங்கப்படும் ‘பயண அட்டை’ (Mission Card) மூலம் பூங்காவில் உள்ள பல்வேறு சுவாரசியமான விளையாட்டு மண்டலங்களை ஆராயலாம். அவற்றின் முக்கிய விவரங்கள் வருமாறு:
பிரிக்-டேஸ்டிக் அரங்கம் (Brick-tastic Arena): லெகோ வடிவிலான தடைகளைக் கடந்து, பந்தைக் கட்டுப்படுத்தி நகர்த்திச் செல்லும் வேகத்திற்கான களம்.
பிரிக் ஸ்டிரைக் சவால் (Brick Strike Challenge): இலக்கை நோக்கி துல்லியமாகவும் வேகமாகவும் பந்தை உதைத்து கோல் போடும் சவால்.
லெகோ காற்பந்துச் சீருடை சுவரோவியம் (LEGO Jersey Mural): வருகையாளர்கள் அனைவரும் இணைந்து லெகோ கட்டைகளைக் கொண்டு பலவண்ணக் காற்பந்து அணி சீருடைச் சுவரோவியத்தை உருவாக்கும் நடவடிக்கை.
தொடர்புடைய செய்திகள்
கிண்ணத்தை உருவாக்குதல் (Build-A-Trophy): சிறுவர்கள் தங்களது சொந்தக் கற்பனையில் லெகோ கட்டைகளைக் கொண்டு தங்களுக்கான வெற்றிக் கிண்ணங்களை வடிவமைக்கும் பகுதி.
இவை போக, லெகோ சிறு காற்பந்துத் தயாரிப்பு (Build-A-Football), மேசைக் காற்பந்து (Brick Table Football), ஆறு கட்டைகளைக் கொண்ட சவால், வெற்றித் தருணங்களை 360 டிகிரி கோணத்தில் படம்பிடிக்கும் சிறப்புப் புகைப்பட வசதி (Spin Like a Striker) போன்ற பல அம்சங்களும் இதில் இடம்பெற்றுள்ளன.
கலை நிகழ்ச்சிகளும் அதிர்ஷ்டக் குலுக்கும்
பூங்காவின் ‘தொடக்க மேடையில்’ (The Beginning Stage) அன்றாடம் காலை, மாலை வேளைகளில் முறையே கலை நிகழ்ச்சிகளும் நிறைவு விழாக்களும் நடத்தப்படும். அத்துடன், ‘பிரிக் சூட் பாய்’, ‘பிரிக் சூட் கேர்ள்’ விளையாட்டுச் சின்னப் பொம்மைகளையும் பார்வையாளர்கள் நேரில் சந்தித்து மகிழலாம்.
மேலும், பூங்காவில் ஒரே ரசீதில் 199 ரிங்கிட் அல்லது அதற்குமேல் செலவழிப்போர், அன்றாடம் நடத்தப்படும் ‘கோல் டு வின்’ (Goal to Win) அதிர்ஷ்டக் குலுக்கில் பங்கேற்று பரிசுகளை வெல்லும் வாய்ப்பையும் பெறலாம்.
ஜோகூரின் புகழ்பெற்ற காற்பந்துக் குழுவிற்குச் சிறப்பு சேர்க்கும் வகையில், அங்குள்ள புகழ்பெற்ற சுல்தான் இப்ராகிம் விளையாட்டரங்கம் விரைவில் லெகோ கட்டைகளால் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டு, லெகோலேண்டின் ‘மினிலேண்ட்’ (MINILAND) பகுதியில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படவுள்ளது என்று லெகோலேண்ட் நிர்வாகம் அறிவித்துள்ளது.
கூடுதல் விவரங்களுக்கும் நுழைவுச்சீட்டுகளை வாங்குவதற்கும் லெகோலேண்ட் மலேசியா பொழுதுபோக்குப் பூங்காவின் இணையப் பக்கத்தையோ அதன் ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம் பக்கங்களையோ நாடலாம்.

