தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மனச்சிதைவு நோயாளிக்குக் கைகொடுத்த பெளத்த தியானம்

2 mins read
d137e69a-b711-47a2-953e-9bfc3758ee45
நிச்சிரன் பெளத்தத்தைப் பின்பற்றுபவர்கள், சீன மற்றும் சமஸ்கிருத எழுத்துருக்கள் கொண்டுள்ள ‘கொஹோன்சோன்’ எழுத்தோவியம் முன் ‘டைமோக்கூ’ மந்திர ஜபம் செய்வர். - படம்: இணையம்

மனநலப் பாதிப்புகளில் கடுமையானவற்றில் ஒன்றான மனச்சிதைவு (schizophrenia) நோயுடன் 30 ஆண்டுகளாக வாழ்ந்துவரும் உஷா (உண்மைப் பெயரன்று), பௌத்த சமயத்தின் தியான முறையைக் கடைப்பிடித்து இதம் காண்கிறார்.

பாதுகாவல் அதிகாரியாகப் பணியாற்றும் உஷா, 49, ஓர் ஒற்றையர். வீட்டைச் சேர்ந்தவர்கள் சிலரால் துன்புறுத்தப்பட்டதாகக் கூறிய உஷாவுக்கு மனச்சிதைவுக்கான அறிகுறிகள் பதின்ம வயதிலேயே தென்பட்டதாகச் சொன்னார்.

மனச்சிதைவுநோய் கண்டறியப்பட்ட ஒருவருக்கு ஒலி அல்லது உருவமற்ற குரல்கள் கேட்பது போன்ற மனத்தோற்றம் எழலாம். முறையற்ற, இயல்பற்ற சிந்தனை, பேச்சு ஆகியவை இதனால் வெளிப்படலாம்.

மனச்சிதைவுக்கு ஆளானவர் பெரும்பாலும் பேசாமலோ நடமாடாமலோ இருக்கலாம். பயங்கரமான நிலைகளிலோ நோக்கம் எதுவுமற்ற கிளர்ச்சியையோ அவர் வெளிப்படுத்தலாம்.

“எனக்கு நண்பர்கள் யாருமில்லை. மிகக் கொடிதான இந்த மனச்சிதைவு 14 வயதிலேயே எனக்கு ஏற்பட்டதாக மனநல மருத்துவர் கூறினார். அன்று முதல் நான் மனநலக் கழகத்திற்குச் சென்றுவந்தேன்,” என்று வேதனையுடன் உஷா கூறினார்.

சாதாரண நிலைத் தேர்வை எப்படியேனும் முடித்துக்கொண்டு சில பாடங்களில் தேர்ச்சியடைந்ததை நினைவுகூர்ந்தபோது அவரிடம் மகிழ்ச்சி தென்பட்டது.

நண்பர் ஒருவரும் அவருடைய கணவரும் சிங்கப்பூர் சோக்கா சங்கத்தின் நிகழ்ச்சிகளுக்கு உஷாவை அழைத்துச் சென்றபோது உஷாவுக்கு நிச்சிரன் பெளத்தம் பற்றித் தெரிந்துகொள்ளும் வாய்ப்புக் கிட்டியது.

13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஜப்பானிய பெளத்தத் துறவியான நிச்சிரனின் போதனைகளை அனைத்துலக சோக்கா சங்கம் பின்பற்றுகிறது.

20ஆம் நூற்றாண்டில் அனைத்துலக சோக்கா அமைப்பை நிறுவிய டைஸாக்கூ இகேடாவின் சிங்கப்பூர்க் கிளையாக உள்ள சிங்கப்பூர் சோக்கா சங்கத்தில் ஏறத்தாழ 38,000 உறுப்பினர்கள் உள்ளனர்.

புத்தர் பெருமான் பூவுலகில் கூறிய கடைசிப் போதனைகளாகக் கருதப்படும் ‘சத்தர்ம புண்டரிக சூத்திரம்’ என்ற நூலுக்கு நிச்சிரன் பெளத்தர்கள் தலையாய முக்கியத்துவம் தருகின்றனர்.

‘டைமோக்கூ’ என்ற மந்திரத்தை இந்த மார்க்கத்தின் சாதகர்கள் ஜபம் செய்வதுடன், மனித மனத்தில் எழும் பல்வேறு உணர்வுகளைப் பற்றிக் கலந்துரையாடி தெளிவுபெற முற்படுகின்றனர். இது உஷாவுக்கு வெகுவாகப் பிடித்துள்ளது.

மனச்சிதைவிலிருந்து முழுமையாக விடுதலை அடையவில்லை என்றாலும் இந்த உபாசனையால் நிதானமும் நிலைத்தன்மையும் அடைந்திருப்பதாக அவர் கூறினார்.

விடியல் தெரியும்வரை நம்பிக்கை தளரவேண்டாம் என்பது பிறர்க்கு உஷா கூற விரும்பும் ஆலோசனை.

“நான் இப்போது மற்றவர்களைப்போல் இருக்கிறேன். இல்லாத குரல்கள் என் மனதில் ஒலிப்பதில்லை. நிம்மதி பிறந்துள்ளது,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்