பிரதமர் லாரன்ஸ் வோங் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 18) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த இவ்வாண்டிற்கான வரவுசெலவுத் திட்ட அறிக்கையில் உடற்குறையுள்ளோருக்கான ஆதரவுத் திட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில், வரவுசெலவுத் திட்டம் 2025 குறித்து உடற்குறையுள்ளோரும் (சிறப்புத் தேவைக் கொண்டவர்களையும் உள்ளடக்கும்) அவர்களின் பராமரிப்பாளர்களும் தங்கள் கருத்துகளைத் தமிழ் முரசிடம் பகிர்ந்துகொண்டனர்.
வேலை நியமன உதவித்தொகை
உடற்குறையுள்ளோருக்கான வேலை நியமன உதவித்தொகை (Enabling Employment Credit) 2028 இறுதிக்கு நீட்டிக்கப்படும் என பிரதமர் வோங் அறிவித்துள்ளார்.
பக்கவாதத்திலிருந்து மீண்டுவந்த திரு நோவெல் பீட்டர் சேவியர், 53, இந்த நீட்டிப்பைப் பெரிதும் வரவேற்கிறார். தற்போது அவர் மரினா பே சேண்ட்சில் பணியாற்றிவருகிறார்.
“போட்டித்தன்மைமிக்கச் சூழலில், வேலைகள் நிரந்தரமல்ல. இந்த உதவித்தொகையால் என்னால் இனி இன்னும் மனநிம்மதியோடு பணியாற்ற முடியும்,” என்கிறார் திரு நோவெல்.
மாத வருமானமாக $4,000க்கும் குறைவாக ஈட்டும் உடற்குறையுள்ளோரின் சம்பளத்தில் 20% வரை (மாதத்திற்கு அதிகபட்சம் $400) இத்தொகை ஈடுகட்டுகிறது. குறைந்தது ஆறு மாதங்கள் வேலையின்றி இருக்கும் உடற்குறையுள்ளோருக்குக் கூடுதலாக 20% வரை ஈடுகட்டப்படுகிறது.
கடந்த 2022ல் கிட்டத்தட்ட 6,600 அமைப்புகள் இத்தொகையைப் பெற்றதாகவும் அவை மொத்தம் 10,000க்கும் மேற்பட்ட உடற்குறையுள்ளோரை வேலையில் அமர்த்தியுள்ளதாகவும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு 2023 அக்டோபரில் கூறியது.
வேலைத்திறன் மேம்பாட்டுக்குக் கூடுதல் உதவி தேவை
“வேலைக்குத் தயாராக இருக்கும் உடற்குறையுள்ளோருக்கு இந்த உதவித்தொகை நீட்டிப்பு உதவுகிறது. ஆனால், வேலைத்திறன்களை முழுமையாகப் பெறாத சிறப்புத் தேவையுடையோருக்கு நான் கூடுதல் உதவியை எதிர்பார்க்கிறேன்,” என்கிறார் சிறப்புத் தேவைகள் கொண்ட காயத்ரியின் தாய்மாமன் ஆறுமுகம், 26.
தொடர்புடைய செய்திகள்
ஏழு ஆண்டுகளாக ‘மைண்ட்ஸ் பேக்கர்ஸ்’சில் பேக்கிங் வகுப்புகளுக்குச் சென்றுவந்த காயத்ரிக்கு அண்மையில்தான் வேலை கிடைத்தது. ஆனால், கிடைத்த வேலையும் பேக்கிங் சார்ந்ததன்று. அவர் ‘டிக்னிட்டி கிச்சன்’ உணவகத்தில் உணவுப் பணியாளராகப் பகுதிநேர வேலை செய்துவருகிறார்.
சென்ற ஆண்டு மார்ச் மாதத்தில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வெளியிட்ட செய்தி, 18 வயதுக்கு மேற்பட்ட சிறப்புத் தேவையுடையோருக்கான பயிற்சி நிலையங்களில் நிதி, நிபுணத்துவப் பயிற்சிபெற்ற ஊழியர் பற்றாக்குறை இருப்பதாகத் தெரிவித்தது.
“சிறப்புத் தேவைகள் கொண்டோரைப் பணியமர்த்தும் கூடுதல் வணிகங்களை அரசாங்கமே நிறுவலாம். என்டியுசி பேரங்காடிகள், எம்ஆர்டி, அரசாங்க அலுவலகங்கள் போன்றவற்றில் அவர்களுக்கு வேலை கொடுக்கலாம். பயிற்சி நிலையங்களும் பராமரிப்பாளர்களுடன் தெளிவான வளர்ச்சி இலக்குகளைப் பகிரலாம்,” என்றார் திரு நோவெல்.
செலவினங்கள் குறித்த கவலை தொடர்கிறது
இல்லப் பராமரிப்பு மானியம், நீண்டகாலப் பராமரிப்பு மானியம், முதியோர் நடமாட, இயங்க நிதி, துணைபுரியும் தொழில்நுட்ப நிதி போன்றவற்றுக்குத் தகுதிபெறுவதற்கான அதிகபட்ச தனிநபர் வீட்டு வருமான வரம்பு $4,800க்கு அதிகரிக்கப்படுவதால் தான் பயன்பெறக்கூடும் என்று திரு நோவெல் கூறினார்.
“நான் ஐந்து ஆண்டுகளாக ஒரே தனிநபர் நடமாட்டச் சாதனத்தைப் பயன்படுத்தி வருகிறேன். அது அடிக்கடிப் பழுதடைந்தாலும் புதியதை வாங்க என்னிடம் பணமில்லை. இனி நான் இந்நிதிகளுக்கு மீண்டும் விண்ணப்பிப்பேன்,” என்றார் திரு நோவெல்.
மகன், தாயார் உட்பட தமது குடும்பத்தில் மூவருக்குப் பராமரிப்பு தேவைப்படுகிறது என்றும் தங்களைப் போன்ற குடும்பங்களுக்குக் கூடுதல் நிதியுதவி வழங்கப்படலாம் என்றும் அவர் கூறினார்.
நிபந்தனைகள் இல்லாத நிதியுதவி தேவை
“நிபந்தனைகளின்றி நிதியாதரவு வழங்கினால் சிறப்பு. உடற்குறையுள்ளோருக்கு ஒரு குறிப்பிட்ட அளவு மத்திய சேம நிதி கிடைத்ததும், ஒருங்கிணைந்த பராமரிப்பு அமைப்பிடமிருந்து (ஏஐசி) அவர்கள் பெறும் சலுகைகளை இழக்க நேரிடும். இதனை மறுஆய்வு செய்யவேண்டும்,” என்கிறார் பல்லாண்டுகளாகச் சக்கர நாற்காலியுடன் நடமாடிவரும் திரு டோபி லிம் கியான் பூன், 45.
‘மெடிஃபண்ட்’ மருத்துவச் சலுகைகளையும் ‘ஏஐசி’யின் நிதியாதரவையும் இழக்க அஞ்சும் அவர், ஆங்கிலம், வர்த்தகத்தில் பட்டம் பெற்றிருந்தாலும் முழுநேர வேலையை நாடாமல், விளையாட்டுப் பொருள் விற்பனை, துணைப்பாடம் கற்பித்தல் போன்ற பகுதிநேர வேலைகளையே செய்துவருகிறார்.
“வேலை என்பது நிரந்தரமன்று. நிறுவனம் பொருளியல் சிரமங்களை எதிர்நோக்கினால் முதலில் வேலையிலிருந்து நீக்குவது எங்களைத்தான். நான் முழுநேர வேலைக்குச் சென்றபின், ஓரிரு மாதங்களில் நீக்கப்பட்டால் மீண்டும் அனைத்துச் சலுகைகளுக்கும் விண்ணப்பிக்கவேண்டும்.
“உடற்குறையுள்ளோருக்கான வேலை நியமன உதவித்தொகையைப் பயன்படுத்த சில நிறுவனங்கள் விரும்புவதும் இல்லை. காரணம், அரசாங்கம் தம்மைப் மேற்பார்வையிடுமோ என்ற அச்சம்,” என்றும் திரு டோபி கூறினார்.
வெள்ளிக்கு வெள்ளி அடிப்படையிலான ஓய்வுக்காலச் சேமிப்புத் திட்டம், தகுதிபெறும் உடற்குறையுள்ள அனைத்து வயதுச் சிங்கப்பூரர்களுக்கும் விரிவாக்கப்படும் என்ற அறிவிப்பும் தமக்குப் பயனளிக்காது என்கிறார் திரு டோபி.