தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மலிவான மசாலா தோசை, நிறைவான சுவை

4 mins read
23250335-b446-47af-b352-70a42c77ec18
அல் ஃபாஸிலா உணவுக்கடையில் விற்கப்படும் மசாலா தோசை. - யுகேஷ் கண்ணன்

உருளைக்கிழங்கு, வெங்காயம், பச்சை மிளகாய் போன்றவற்றால் ஆன மசாலாவைச் சூடான, மொறுமொறு தோசைக்குள் வைத்து, அதை சுவையான தேங்காய் சட்னியிலும் மணக்கும் சாம்பாரிலும் தொய்த்து சாப்பிடுவதைவிட இதமான உணர்வு ஏதேனும் உண்டா?

மசாலா தோசை பிரியரான எனக்கு, லிட்டில் இந்தியாவுக்குச் செல்லும்போதெல்லாம் எங்கு மசாலா தோசை உண்ணலாம் என்ற குழப்பம் ஏற்படும். ஏனெனில், உடுப்பி உணவு வகையிலிருந்து உருவான இந்த உணவை புகழ்பெற்ற பல உணவகங்கள் நற்சுவையுடன் வழங்குகின்றன. 

ஆனால், வாழ்வில் பலவற்றைப்போல மசாலா தோசையும் பணவீக்கத்தின் தாக்கத்திலிருந்து தப்பவில்லை.

உதாரணத்திற்கு, ஏ2பி சைவ உணவகத்தில் ஒரு மசாலா தோசையின் விலை $6.50. கோமளாஸ் உணவகத்தில் $6.60, எம்டிஆர் உணவகத்தில் $7. 

காலப்போக்கில், மசாலா தோசை உண்பதும் விலையுயர்ந்த விவகாரமாக மாறிவிட்டது.

ஆகையால், சிங்கப்பூரின் வெவ்வேறு பேட்டைகளில் அமைந்துள்ள உணவங்காடி நிலையங்களுக்கு மலிவான, தரமான மசாலா தோசைக்கான என் தேடலைத் தொடங்கினேன். 

ஒரு நல்ல தோசை என்றால் என்ன? 

ஒரு நல்ல தோசை, அரிசியாலும் உளுத்தம் பருப்பாலும் தயாரிக்கப்பட்ட மாவால் சுடப்பட்டு, வெளியில் மாநிறமாகவும் மொறுமொறுவென்றும் உள்ளே வெள்ளையாகவும் மென்மையாகவும் இருக்க வேண்டும்.

மசாலா தோசையில், தோசையுனுள் வைக்கப்படும் மசாலாவின் சுவையும் அதனுடன் பரிமாறப்படும் சட்னி, சாம்பாரின் சுவையும் தோசையின் ஒட்டுமொத்த சுவையில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

என் தேடலில், மசாலா தோசையின் விலை, உணவங்காடியின் சுற்றுப்புறம் இரண்டும் கருத்தில் கொள்ளப்பட்டன.    

இத்தேடல் என்னை ஐந்து கடைகளுக்கு இட்டுச்சென்றது. அதில் முதலாவது, உட்லண்ட்ஸ் விஸ்தா பாயிண்ட் அங்காடி நிலையத்தில் அமைந்துள்ள அல் ஃபாஸிலா உணவுக்கடை.

புதுப்பிக்கப்பட்ட கோப்பித்தியாம் உணவங்காடி நிலையத்தில் அமைந்துள்ள இக்கடை $2.50க்கு விற்கும் மசாலா தோசை, சிங்கப்பூரிலேயே ஆக விலைக் குறைந்த மசாலா தோசைகளுள் ஒன்றாக இருக்கக்கூடும்.

இந்த குறைந்த விலைக்குக் காரணம், வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் (வீவக) சென்ற ஆண்டு மே மாதம் அறிமுகப்படுத்திய “பட்ஜெட் உணவுத் திட்டம்” என்பதை நான் அறிந்தேன். 

முதியோருக்கும் வசதி குறைந்தோருக்கும் உணவு மலிவான விலையில் கிடைக்க வேண்டுமென்ற நோக்குடன் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. 

இத்திட்டத்தின்கீழ், வீவக உணவங்காடிக் கடைகள் குறைந்தது ஓர் உணவையாவது $3.50க்கும் குறைவாக விற்க வேண்டும். பானம் விற்கும் கடையாக இருப்பின், குறைந்தது ஒரு பானத்தையாவது $1.20க்கும் குறைவாக விற்க வேண்டும்.

வீவக, அரசாங்க தொழில்நுட்ப அமைப்புடன் இணைந்து BudgetMealGoWhere என்ற இணையத்தளத்தையும் அறிமுகப்படுத்தியது. 

இதன் மூலம் வாடிக்கையாளர்கள், மலிவு விலையில் உணவு விற்கும் கடைகளைத் தெரிந்துக்கொள்ள முடிவதோடு, அந்த இணையத்தளத்தில் இடம்பெறாத மலிவு உணவு வகைகளயும் சேர்க்கலாம் (சரிபார்த்தலுக்கு உட்பட்டது). 

இந்த இணையத்தளத்தில் தோசை உள்ளிட்ட பல உணவுத் தெரிவுகள் உள்ளன. 

தற்போது இந்த இணையத்தளத்தில் 291 உணவங்காடிகள் இடம்பெற்றுள்ளன. அவற்றுள் 125 ஹலால் சான்றிதழ் பெற்றவை.

தேக்கா நிலையத்தில் பல்வேறு கடைகள் மசாலா தோசையை $2.50க்கு விற்று வந்தாலும், அவை வீவக கடைகள் அல்லாததால், அவை இந்த இணையத்தளத்தில் இடம்பெறவில்லை.

உங்களுக்கு சிங்கப்பூரின் இதர பகுதிகளில் மலிவு விலையில் மசாலா தோசை விற்கும் கடைகள் பற்றித் தெரிந்தால், அதை இந்த இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யுங்கள். அனைவரும் சுவையான உணவையும் உண்டு பணத்தையும் சேமிக்கலாம்.

அல் ஃபாஸிலா

(548 உட்லண்ட்ஸ் டிரைவ் 44)

விமர்சனம் (ஐந்திற்கு) 

தோசை: 3.5

சட்னி/சாம்பார்: 3.5

சுற்றுப்புறம்: 4.5 (சுத்தமாகவும் குளிரூட்டி வசதியும் கொண்டது)

மதிப்பு: 5

சிங்கப்பூரிலேயே விலைக் குறைந்த மசாலா தோசைகளுள் ஒன்றாக இருந்தாலும், உணவின் அளவிலும் சுவையிலும் குறையில்லை என்றுதான் கூற வேண்டும். 

$2.50க்கு மசாலா தோசை மட்டுமின்றி, சட்னி, சாம்பார், கோழி குழம்பும் வழங்கப்பட்டன. 

ஏகே அமீர் இந்தியன் முஸ்லிம் உணவு

(610 தெம்பனிஸ் நார்த் டிரைவ் 1)

- படம்: யுகேஷ் கண்ணன்

விமர்சனம்

தோசை: 3

சட்னி/சாம்பார்: 4.5

சுற்றுப்புறம்: 3.5 

மதிப்பு: 4.5

சுவைமிகு சட்னியின் முக்கியத்துவத்தை தோசை பிரியர்கள் நிச்சயம் அறிந்திருப்பர். தக்காளி, வெங்காயம், வேர்க்கடலை, தேங்காய் என பலவற்றை வைத்து செய்யக்கூடிய சட்னி சுமாரான தோசையைக்கூட சுவைமிக்கதாக மாற்றக்கூடியது.

இக்கடை இதற்குத் தக்க சான்றாக விளங்குகிறது. நான் சென்ற ஐந்து கடைகளில், இக்கடையில்தான் ஆகச் சிறந்த சட்னி கிடைத்தது. $2.80க்கு விற்கப்படும் மசாலா தோசையைவிட சட்னிக்காக இக்கடைக்குச் செல்லலாம்.

அல் ஃபாலாஹ்

(118 ரிவர்வேல் டிரைவ்)

- படம்: யுகேஷ் கண்ணன்

விமர்சனம்

தோசை: 2

சட்னி/சாம்பார்: 3

சுற்றுப்புறம்: 4.5

மதிப்பு: 3

ரிவர்வேல் உணவங்காடி நிலையத்தின் இரண்டாம் மாடியில் அமைந்துள்ள அல் ஃபாலாஹ் உணவகம் சுத்தமாகவும் குளிரூட்டி வசதியுடனும் உள்ளது. இப்பட்டியலில், சிறந்த சுற்றுப்புறம் கொண்ட கடை இதுவே.

ஆனால், $3.30க்கு விற்கப்படும் மசாலா தோசையில் முட்டைகோஸ், சோளம் ஆகியவை இருந்தது என்னை ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியது. பெரும்பாலும், மசாலா தோசைக்குப் பயன்படுத்தப்படும் மசாலாவில் இந்த உணவுப் பொருள்கள் பயன்படுத்தப்பட மாட்டா. புதிய முயற்சி என்றாலும், இன்னும் சுவையாக இருந்திருந்தால் சிறப்பு.

ஆர்எஸ்ஏகே இந்தியன் முஸ்லிம் உணவு 

(429A சுவா சூ காங் அவென்யூ 4) 

- படம்: யுகேஷ் கண்ணன்

விமர்சனம்

தோசை: 4.5

சட்னி/சாம்பார்: 3.5

சுற்றுப்புறம்: 3.5

மதிப்பு: 4

இப்பட்டியலில் இந்தக் கடையில்தான் ஆக சுவையான மசாலா தோசை கிடைத்தது. தோசை தடியாக இருந்தாலும் மொறுமொறுவென்று இருந்தது. தாராளமான அளவில் மசாலாவும் வழங்கப்பட்டதோடு அதன் காரம் சரியான அளவிலும் இருந்தது.

சட்னி, சாம்பார் இன்னும் ருசியாக இருந்திருக்கலாம். ஆனால், $3க்கு நிச்சயம் தரமான உணவு.

மிஸ்டர் கே பிராட்டா

(303 ஆங்கர்வேல் லிங்க்)

- படம்: யுகேஷ் கண்ணன்

விமர்சனம்

தோசை: 3

சட்னி/சாம்பார்: 3

சுற்றுப்புறம்: 3

மதிப்பு: 4

இக்கடையில்தான் ஆகப் பெரிய தோசையும் அதிகளவு மசாலாவும் கிடைத்தது. ஆனால், $3க்கு மசாலா தோசையுடன் சாம்பார் மட்டும்தான் வழங்கப்பட்டது. சட்னி இல்லாமல் தோசை உண்ணும் அனுபவம் திருப்திகரமாக இல்லை.

தோசை பெரிதாக இருந்தாலும், சற்று தடியாகவும் மொறுமொறுவென்றும் இருந்திருந்தால் சிறப்பு.

குறிப்புச் சொற்கள்