இந்திய செவ்விசை ராகங்களின் தீஞ்சுவையை மேற்கத்திய ரசிகர்களுக்குப் பாலா சகோதரர்கள் பரப்பி வருகின்றனர்.
அண்மையில், புகழ்பெற்ற நியூ யார்க் நகரின் டைம்ஸ் சதுக்க விளம்பரத் திரையில் இவர்கள் இடம்பெற்றுள்ளனர்.
அமெரிக்காவில் மே மாததில் அனுசரிக்கப்படும் மனநல விழிப்புணர்வு மாதத்தை ஒட்டியும் உலக தியான நாளை ஒட்டியும் இவர்கள் இடம்பெறும் விளம்பரம் திரையில் காண்பிக்கப்பட்டது.
“நலம் அடையும் முறையில் இசை முக்கிய பங்கு வகிக்கிறது. இது பற்றிக் கூடுதலானோர் இப்போது தெரிந்துவைத்துள்ளனர்,” என்று திரு ஸ்ரீராம் கூறினார்.
பெண்டோரா செயலியில் எங்கள் இசைத்தொகுப்பு 400,000 முறைக்கு மேல் கேட்கப்பட்டது. நம் கலைப்படைப்பால் ஒருவருக்காவது நல்ல மனமாற்றம் ஏற்பட்டல் அதற்கான நம் உழைப்பு பயனுள்ளதாக இருக்கும், என்று திரு ஸ்ரீராம் கூறினார்.
நான்கு பாடல்கள் கொண்ட அந்தத் தொகுப்பு, மைண்ட்வெல் ரெக்கார்ட்ஸ் (Mindwell Records) நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு மே 13 ஆம் தேதியன்று வெளிவந்தது. ஸ்பாட்டிஃபை, ஆப்பிள் மியூசிக் போன்ற பெரிய இசைப் பதிவிறக்கத் தளங்களில் இடம்பெற்றுள்ளது.
மந்திரங்களின் ஆற்றல்மிக்க அதிர்வலைகளுடன் மனதாரப் பேசப்படும் நல்வாக்குகள் நயமாக இணைக்கப்பட்ட இசைத்தொகுப்பாக ‘ஓம் அண்ட் அஃபர்மேஷன்ஸ்’ திகழ்கிறது.
ஐந்து வயதில் இந்த இரட்டையரின் இசைப்பயணம் தொடங்கியது. தந்தை நாரயணன் பாலசுப்பிரமணியமும் தாயார் சத்யா பாலசுப்பிரமணியமும் இரு மகன்களையும் கர்நாடக, இந்துஸ்தானி இசை நிரம்பிய சூழலில் வளர்த்தனர்.
தொடர்புடைய செய்திகள்
புக்கிட் பாத்தோக்கில் உள்ள தங்களது இளம்பருவ வீடு, படைப்பூக்கம் மிக்க, ஆர்வத்தைத் தூண்டக்கூடிய கலைக்கூடமாக விளங்கியதாக அவர்கள் கூறுகின்றனர்.
தந்தைமீது பாசமுள்ள அவர்கள், பாலசுப்பிரமணியம் என்ற அவரது பெயரையே தழுவி ‘பாலா பாய்ஸ்’ என்று தங்களை அழைத்துக் கொள்கின்றனர்.
அப்பா எப்போதும் எங்களை நிலைப்படுத்துபவராக எங்கள் வாழ்க்கையில் உள்ளவர். இசைக்கலைஞரான அவர், இசை சார்ந்த எங்கள் குறிக்கோள்களை ஆதரிக்கிறார், என்று அவர் கூறினார்.
ஏழு வயது முதல் தேசிய சேவை வரை சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகத்தில் என் ஆர் பிரஷாந்த், பூர்ணா ராவ், ஸ்ரீ வித்யா ஸ்ரீராம் ஆகிய குருமார்களின்கீழ் பயின்றனர்.
அதன்பிறகு அவர்கள், பிரபல சங்கீதக் கலைஞர் அபிஷேக் ரகுராமிடம் பயின்றனர்.
செயிண்ட் ஜோசஃப்ஸ் கல்வி நிலையத்திலும் சிங்கப்பூர்ப் பலதுறைத் தொழிற்கல்லூரியிலும் படிப்பை முடித்த பின்னர், பாஸ்டனுக்குப் புலம்பெயர்ந்து பெர்க்லி இசைக் கல்லூரியில் பயின்றனர்.
பெர்க்லி இந்திய இசைக்குழுவில் துடிப்புமிக்க உறுப்பினர்களான இவர்கள், ஷுருவாத் இசைத்தொகுப்பிலும் இடம்பெற்றனர். 65ஆம் வருடாந்தர கிராமி விருதுகளுக்கு அந்த இசைத்தொகுப்பு முன்மொழியப்பட்டது.
10 பாடல்கள் கொண்ட அந்தத் தொகுப்பு, 39 நாடுகளைச் சேர்ந்த 98 இசைக்கலைஞர்களின் பங்கேற்பைக் கொண்டுள்ளது. ஸாகீர் ஹுசேன், ஷங்கர் மகாதேவன், விஜய் பிரகாஷ், ஷ்ரேயா கோஷல் உள்ளிட்ட பிரபல கலைஞர்களும் இதில் பங்கேற்கின்றனர்.
பெர்க்லி உபகாரச் சம்பளத்தைப் பெற்ற அவர்கள் 2022ல் இசைத்துறையில் உச்சபட்ச தேர்ச்சியுடன் பட்டம் பெற்றனர். அதே ஆண்டில் அவர்கள் பாடி வெளியிட்ட சின்னஞ்சிறு கிளியே பாரதியார் பாடல் காணொளி, சமூக ஊடகங்களில் அதிவேகமாகப் பரவியது.
சில ஆயிரம் பேரால் அதுவரை பின்தொடரப்பட்ட அவர்களது இன்ஸ்டகிராம் பக்கத்தை, சில மாதங்களில் 800,000 பேர் பின்தொடர்ந்தனர்.
“ஆனால், எங்களை ஆதரிப்பவர்களுடன் நாங்கள் அமைத்துக்கொண்ட உண்மையான உறவுகளே அர்த்தமுள்ளவை, என்று அவர் கூறினார்.
வருங்காலத்தில் இந்த இசைச் சகோதரர்கள், மனநல நிபுணர்களுடனும் விஞ்ஞானிகளுடனும் வருங்காலப் பணித்திட்டங்களில் இணைய எண்ணுகின்றனர்.
“பழங்கால செவ்விசை மரபுகளுக்கும் தற்கால நரம்பியலுக்கும் பாலம் அமைத்து அதன்வழியாக இசையை உலகிற்கு அழகாகவும் சுவையாகவும் வழங்குவது எங்கள் கனவாகும்,”என்று திரு ஸ்ரீராம் கூறினார்.