எலும்பு, பற்கள் உள்ளிட்டவற்றின் நலனுக்கு அடிப்படையாக அமைவதுடன் தசை சுறுக்கத்திலும் பங்களிக்கும் முக்கியச் சத்து கால்சியம். பொதுவாகவே, ஆண்களைவிட பெண்களுக்குக் கால்சியக் குறைபாடு அதிக அளவில் ஏற்படுகிறது.
குறிப்பாக, 45 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு இக்குறைபாடு அதிகம் ஏற்படுவதாக நீரிழிவு ஆய்வு, மருத்துவப் பயிற்சி சஞ்ஜிகையில் வெளிவந்த கட்டுரை ஒன்று குறிப்பிட்டுள்ளது.
பெண்களின் உடலில் இயல்பாகச் சுரக்கும் ‘ஈஸ்ட்ரோஜென்’ சுரப்பிகள் கால்சியத்தை உறிஞ்சுவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. குறிப்பாக, கர்ப்பக் காலத்திலும், பாலூட்டும் காலத்திலும் உரிய அளவு கால்சியம் சத்து உட்கொள்ளாவிட்டால் குழந்தைக்குத் தேவையான கால்சியம் தாயின் எலும்பிலிருந்து உறிஞ்சப்படுகிறது.
அத்துடன், ஒரு குறிப்பிட்ட வயதுக்காலத்தில் குறையும் ‘ஈஸ்ட்ரோஜன்’ சுரப்பியின் அளவு கால்சியம் குறைபாட்டுக்கும் வழிவகுக்கிறது. ‘மெனோபாஸ்’ எனும் மாதவிடாய் முற்றிலும் நிற்கும் காலத்தில் எலும்பில் கால்சியம் சேமிப்பு முற்றிலுமாக நிற்பதால், பெண்களுக்கு எலும்புத் தேய்மானம் உள்பட பல்வேறு சிரமங்களும் ஏற்படுகின்றன.
கால்சியம் குறைபாட்டின் அறிகுறிகள்
உடலில் கால்சியம் குறைந்திருக்கும் நிலையை ‘ஹைபோகால்சீமியா’ என மருத்துவ உலகு வரையறுத்துள்ளது. உடலில் தோன்றும் சில அறிகுறிகள் மூலம் கால்சியக் குறைபாடு இருப்பதை உணர முடியும்.
நகங்களையும் கூந்தலையும் கூர்ந்து கவனிக்க வேண்டும். நகங்கள் வெளிர் நிறமாக மாறுதல், பலவீனமாக எளிதில் உடைந்து, சேதமடைந்துபோவது ஆகியவை கால்சியம் குறைபாட்டின் வெளிப்பாடுகளாகும். தலைமுடி கரடுமுரடாக இருப்பது, சில தீவிர நிலைகளில் முடி திட்டுத் திட்டாக உதிர்வதும் கால்சியம் குறைபாட்டைக் காட்டுகின்றன.
கால்சியம் குறைபாட்டினால் அதிக சோர்வு, ஆற்றல் குறைபாடு, சோம்பல், தலைசுற்றல், நினைவாற்றல் சிரமங்கள், கவனக்குறைவு, கவனச்சிதறல் ஆகியவையும் ஏற்படலாம்.
பற்களில் அதிக கால்சியம் உள்ளது. கால்சியம் குறைபாடு அதிகரிக்கும்போது, அதனை ஈடுசெய்ய, உடல் பற்களிலிருந்து கால்சியம் இழுத்துக்கொள்ளும். இதனால், பற்சிதைவு, வேர்கள் பலவீனமடைதல், பல்வலி, ஈறுகளில் எரிச்சல் ஆகியவை ஏற்படுகின்றன.
தொடர்புடைய செய்திகள்
சில பெண்களுக்கு ‘ஆஸ்டியோபோரோசிஸ்’ எனும் எலும்புகளைப் பாதிக்கும் நிலையும் ஏற்படலாம்.
கால்சியம் குறைபாட்டுக்கும் மனநலனுக்கும் தொடர்பு இருப்பதால், மனச்சோர்வுக்கும் அது வழிவகுக்கிறது. குறிப்பாக, ‘ஃபிரான்டியர்ஸ்’ எனும் மருத்துவ இதழ் நடத்திய ஆய்வில், உணவில் கால்சியம் அதிகரிக்கும்போது மனச்சோர்வின் அறிகுறிகள் குறைவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
பொதுவாக, இத்தகைய அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவ நிபுணரை அணுகுவது சிறந்தது.
கால்சியம் குறைபாட்டுக்கான உணவு வகைகள்
உடலின் கால்சியம் தேவையை ஈடுசெய்வதில் உணவுமுறை முக்கியப் பங்களிக்கிறது.
கால்சியம் நிறைந்த உணவுகளான பால், பால் பொருள்களை உட்கொள்வது நன்மையளிக்கும். உலர்விதைகளை உண்ணும்போது, புரதம், ‘ஒமேகா 3’ சத்துகளுடன் கால்சியம் உடலில் சேர்கின்றன. ‘சியா’ விதைகள், எள், பாதாம், கொள்ளு, ‘சோயா பீன்ஸ்’ ஆகியவற்றில் அதிக அளவு கால்சியம் சத்து உள்ளது.
பால் பொருள்களிலேயே ‘சீஸ்’ வகை பாலாடைக்கட்டிகளில் இச்சத்து நிறைந்துள்ளது. பால் ஒவ்வாமை, கொழுப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் இல்லாதவர்கள் சராசரி அளவில் இதனை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
மத்தி மீன் (சாடின்), ‘சால்மன்’ எனப்படும் நன்னீர் மீன் வகைகளை உணவில் சேர்க்கலாம். கீரைகள், ‘எடமாமே’ எனும் பச்சை ‘சோயா பீன்ஸ்’, ‘டோஃபூ’ ஆகியவற்றிலும் கால்சியம் நிறைந்துள்ளது.
காய்கறி வகைகளில் அவரை, பட்டாணி, பீட்ரூட், வெண்டைக்காய், கிழங்கு வகைகளிலும், ஆட்டிறைச்சி, நண்டு ஆகியவற்றிலும் கால்சியம் காணப்படுகிறது. இவற்றைத் தவிர, எலுமிச்சை, கொய்யா, திராட்சை ஆகிய பழங்களை உட்கொள்வதன் மூலமும் கால்சியம் அதிகரிக்கும்.
குறிப்பாக, உணவின்வழி சேரும் கால்சியம் உறிஞ்சுவதற்கு வைட்டமின் ‘டி’ சத்து அவசியம். அதனைப் பெற, காலை நேர வெயிலின்போது வெளியே செல்வதை வழக்கமாக்கிக் கொள்ளலாம்.