சிங்கப்பூரில் உள்ள ஒப்பனைப் பிரியர்கள் பலருக்கு, ஒப்பனைக் கடைகளுக்குச் சென்று தங்களுக்குப் பிடித்த பொருள்களைத் தேடுவது ஒரு மகிழ்ச்சியான வார இறுதிப் பொழுதுபோக்காகும்.
ஆனால், தங்கள் தோல் நிறத்துக்கு ஏற்ற ஒப்பனைப் பொருள்கள் கிடைக்காமல் தாங்கள் புறக்கணிக்கப்படுவதாகச் சிலர் கருதுகின்றனர்.
தமது சரும நிறத்திற்கு ஏற்ற ஒப்பனைப் பொருள்களைக் கண்டுபிடிக்கப் பல ஆண்டுகளாகச் சிரமப்பட்ட செல்வி சத்தியா பிரியா அன்பழகன், 33, தனக்கான தீர்வைத் தானே உருவாக்க முடிவு செய்தார். அந்த முயற்சியில் உருவாகியது கெலித்தியா எனும் ஒப்பனை நிறுவனம்.
இணையம்வழி தனது ஒப்பனைப் பொருள்களை விற்பனை செய்துவந்த சத்தியா பிரியா, ஃபார் ஈஸ்ட் பிளாசா (Far East Plaza) கடைத்தொகுதியில் தனது ஒப்பனைப் பொருள்களுக்கான விற்பனை நிலையத்தைக் கடந்த டிசம்பர் 12ஆம் தேதி தொடங்கியுள்ளார்.
“பதின்ம வயதில் நான் ஒப்பனை செய்துகொள்ளத் தொடங்கியபோது, என் சரும நிறத்திற்கு ஏற்ற ஒப்பனைப் பொருள்களைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினமாக இருந்தது,” என்று சத்தியா பிரியா கூறினார்.
அரிதாக ஏதாவதோர் ஒப்பனைப் பொருள் அவருக்குப் பொருந்தினாலும், அது நீண்ட காலம் சந்தையில் இருப்பதில்லை.
“என் நிறத்திற்கு சரியாக அமையும் பொருள்களை நான் பயன்படுத்தத் தொடங்கிய சிறிது காலத்திலேயே, அந்தத் தயாரிப்பு நிறுத்தப்பட்டுவிடும். ஏனெனில் ஒப்பனை நிறுவனங்களைப் பொறுத்தவரை, அடர் நிறங்களுக்கான ஒப்பனைப் பொருள்களுக்குத் தேவை அதிகம் இல்லை,” என்றார் அவர்.
சத்தியா பிரியா ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு எட்டு விதமான உதட்டுச்சாய வகைகளுடன் தனது நிறுவனத்தைத் தொடங்கினார். அவர் பல முன்னணி ஒப்பனை நிறுவனங்கள் போலல்லாமல், அடர் நிற சருமங்களின் நுணுக்கமான வேறுபாடுகளில் அதிகக் கவனம் செலுத்துகிறார்.
தொடர்புடைய செய்திகள்
“தமிழ்ப் பெண்கள் பலரின் சரும நிறங்களுக்கு ஆலிவ் நிறச் சாயல்கள் இருப்பதாக நினைக்கிறேன். ஆனால், பல ஒப்பனை நிறுவனங்கள் அதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை,” என்று அவர் விளக்கினார்.
‘கெலித்தியா’ தயாரிப்புகள் அனைத்தும் விலங்குசார் பொருள்கள் கலக்காத (vegan) மற்றும் விலங்குகளுக்குத் தீங்கு விளைவிக்காத ஒப்பனைப் பொருள்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
“விலங்குகள்மீது பரிசோதிக்கப்பட்ட பொருள்களை விற்பனை செய்வது பொறுப்பான செயலாகத் தோன்றவில்லை,” என்று சத்தியா பிரியா கூறினார். இந்தச் சிந்தனை, அவரைப் போலவே சிந்தனையுள்ள வாடிக்கையாளர்களுடன் இணைய அவருக்கு உதவியுள்ளது.
தொடக்கத்தில் தனது குடும்பத்தினரின் ஆதரவுடன் ஒரு சிறு தொழிலாகத் தொடங்கிய அவரது நிறுவனம், இப்போது ஒரு முழுநேரத் தொழில்ஆக விரிவடைந்துள்ளது.
“இந்த ஒப்பனை நிறுவனம் ஒரு யோசனையாகத் தொடங்கியது முதல், பெயர் தேர்வு மற்றும் முதற்கட்டத் தயாரிப்புகள் என அதன் முழுமையான வளர்ச்சியை நான் நேரில் பார்த்துள்ளேன். ஓர் ஆலோசகராக நான் அளித்த நேர்மையான கருத்துகளும், தயாரிப்புகளைச் சோதித்து வழங்கிய ஆலோசனைகளும் இந்த நிறுவனம் செம்மையடைய உதவியுள்ளன,” என்றார் சத்தியா பிரியாவின் தங்கை ஷாமளா கௌரி அன்பழகன், 29.
“எனது அக்காவின் விடாமுயற்சியும் இந்த ஒப்பனை நிறுவனத்தின் கொள்கைகளில் அவர் காட்டும் உறுதியும் வாடிக்கையாளர்கள் மத்தியில் ஒரு நம்பிக்கையை உருவாக்கியுள்ளது. அவர் தனது கனவை நனவாக்கி வெற்றி பெற்றதைக் காண்பது, ஒரு குடும்ப உறுப்பினராக மிகுந்த பெருமையளிக்கிறது,” என்றார் அவர்.
ஒப்பனைப்பொருள் துறையில் நீண்டகாலமாக உள்ள இடைவெளியைக் குறைக்கும் வகையில், இந்திய மற்றும் பழுப்பு நிறச் சருமத்தினருக்கு ஏற்றவாறு ‘கெலித்தியா’ ஒப்பனை நிறுவனம் மிகக் கவனமாகத் தனது தயாரிப்புகளை உருவாக்கியுள்ளது.
இதனால் இந்தியச் சமூகத்தினரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
சிங்கப்பூரில் அடர்நிறமுடையவர்கள், கடைகளில் தங்களுக்குப் பொருத்தமான தயாரிப்புகளைத் தேர்ந்தெடுப்பதில் இருந்த சவால்களுக்கு ‘கெலித்தியா’ நிறுவனம் தீர்வு வழங்க முற்பட்டுள்ளது.
புதிய விற்பனை நிலையத்தின் மூலம், வாடிக்கையாளர்கள் நேரில் சென்று தங்களுக்குப் பொருத்தமான ஒப்பனைப் பொருள்களைத் தேர்ந்தெடுக்க அது வழிவகுத்துள்ளது.
அங்குச் சேவை மிகவும் சிறப்பாக உள்ளதாகக் கூறினார் ‘கெலித்தியாவின்’ வாடிக்கையாளர் ஹேமதர்ஷினி, 28.
குறிப்பாக, சத்தியா பிரியாவின் அணுகுமுறை மிகவும் கனிவாகவும் வாடிக்கையாளரின் தேவைக்கேற்பத் தனிப்பயனாக்கப்பட்ட முறையில் பரிந்துரைகளை வழங்குவதாகவும் அமைந்துள்ளது.
இந்த நிறுவனம் மாநிறத் தோல் உடையோர்க்கு மிகச் சிறந்த தேர்வாக உள்ளது. அவர்களின் நிறத் தெரிவுகள், தோல் நிறமாற்றம் ஆகியவை மாநிறத் தோலுக்கு மிகச் சரியாகப் பொருந்துவதாக இந்நிறுவனத்தின் நீண்டநாள் வாடிக்கையாளர் காயத்ரி பாலமுருகன், 29, கருதுகிறார்.

