வரம்பற்ற நேரம் கொடுக்கப்பட்டால் ஒரு குரங்கு விசைப்பலகையில் தட்டச்சு செய்து, இறுதியில் ஷேக்ஸ்பியரின் படைப்புகளை முழுமையாக எழுதும் என்ற பழைய கூற்று உண்மையன்று என்று கணிதவியலாளர்கள் அண்மையில் உறுதிப்படுத்தியுள்ளனர்.
‘எல்லையற்ற குரங்குத் தேற்றம்’ (Infinite Monkey Theorem) என்று அழைக்கப்படும் இந்தச் சிந்தனைப் பரிசோதனை (thought-experiment), கணிதத்தில் முறைப்படி நிகழாத நடப்புகளையும் அந்நடப்புகள் ஏற்படுத்தும் வாய்ப்புகளையும் விளக்கப் பயன்படுத்தப்படுகிறது.
ஆஸ்திரேலியாவின் சிட்னி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கணிதவியலாளர்கள் இருவர் மேற்கொண்ட புதிய ஆய்வு உலகிலுள்ள ஒவ்வொரு சிம்பன்சியும் பேரண்டத்தின் இறுதிவரை ஒரு வினாடிக்கு ஒரு விசை என்ற வேகத்தில் தட்டச்சு செய்தாலும் அவை ஷேக்ஸ்பியரின் படைப்புகளைத் தட்டச்சு செய்ய முடியாது என்று கண்டறிந்தது.
அதாவது கணித ரீதியாக இந்தத் தேற்றம் உண்மையாகயிருந்தாலும் இது உண்மைக்குப் புறம்பானது என்று ஃபிராங்க்ளின் ஓபன் (Franklin Open) சஞ்சிகையில் வெளியிடப்பட்ட ஆய்வில் கணிதவியலாளர்கள் கூறுகிறார்கள்.
குரங்குகளின் திறன்களைக் கருத்தில் கொண்டதுடன், உலக அளவில் சிம்பன்சிகளின் தற்போதைய மொத்த எண்ணிக்கை ஏறக்குறைய 200,000 என்ற தரவின் அடிப்படையில், இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஒரு சிம்பன்சி தனது முழு வாழ்நாளிலும் ‘வாழைப்பழம்’ என்ற வார்த்தையை வெற்றிகரமாகத் தட்டச்சு செய்வதற்கான வாய்ப்பு ஐந்து விழுக்காடு மட்டுமே என்கிறது இந்த ஆய்வு. அதேநேரம், ‘நான் ஒரு சிம்பன்சி, அதனால் நான் இருக்கிறேன்’ (I chimp, therefore I am) போன்ற ஒரு வாக்கியத்தை உருவாக்கும் வாய்ப்பு 10 மில்லியன் பில்லியன் முறைகளில் ஒருமுறைதான் என்றும் இந்த ஆராய்ச்சி சுட்டிக்காட்டுகிறது.
இந்த ஆய்வில் பயன்படுத்தப்பட்ட கணக்கீடுகள் ‘வெப்ப இறப்புக் கோட்பாடு’ (heat death theory) என்ற பேரண்டத்தின் முடிவைப் பற்றிய பொதுவாக அங்கீகரிக்கப்பட்ட கருதுகோளை அடிப்படையாகக் கொண்டவை.
பேரண்டம் தொடர்ந்து விரிவடைந்து, தனது வெப்பத்தை இழந்து குளிர்ச்சி அடையும் அதேநேரத்தில் அதிலிருக்கும் அனைத்து உயிரினங்களும் இறந்து, அழிந்துபோகும் என்பதை இந்தக் கோட்பாடு குறிக்கிறது.
தொடர்புடைய செய்திகள்
இந்த ஆய்வு எல்லையற்ற குரங்குத் தேற்றத்தைப் பிற நிகழ்தகவு புதிர்களுக்கும் தோற்றமுரண்களுக்கும் (paradoxes) இடையில் வைப்பதாகவும் அதன்படி எல்லையற்ற வளங்கள் என்ற கருதுகோளோடு நமது பேரண்டத்தின் வரம்புகளைக் கருத்தில் கொள்ளும்போது பொருத்தமில்லாத முடிவுகளை அளிப்பதாகவும் கணிதவியலாளர்களில் ஒருவர் ஆய்வின் முடிவுகளைப் பற்றிக் கூறினார்.

