கர்நாடக இசை ஆர்வலர்களால் தொடங்கப்பட்ட ‘சிங்கை பல்லிய அரங்கு’ மே 23ஆம் தேதி 2025க்கான இசை விருதுகளை வழங்கியது.
தென்னிந்தியர்களின் பாரம்பரியமான கர்நாடக இசையை இளையர்கள் மத்தியில் பிரபலப்படுத்தும் நோக்கில் நிறுவப்பட்டுள்ள இவ்வமைப்பு, ஆண்டுதோறும் இசைப்போட்டிகளை நடத்துவதுடன் கர்நாடக இசைக் கச்சேரிகளையும் நடத்துகிறது.
கடந்த ஈராண்டுகளாகச் செயல்பட்டுவரும் இவ்வமைப்பு நடத்திய போட்டியில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
இவ்வாண்டு வாய்ப்பாட்டு, நான்கு வகை வாத்திய இசை, ஆறு வகை படிப்படியான நிலை ஆகியவற்றின் அடிப்படையில் 50க்கும் மேற்பட்ட பிரிவுகளில் மாணவர்கள் போட்டியிட்டனர். சிங்கப்பூரிலிருந்தும் இந்தியாவிலிருந்தும் துறையில் பிரபலமானவர்கள் நடுவர்களாகச் செயல்பட்டனர்.
விருது வழங்கும் விழாவில் சிறப்பு இசைக் கச்சேரி இடம்பெற்றது. யுவகலாபாரதி திருச்சி எல் சரவணன் புல்லாங்குழல் வாசிக்க, முத்து சுப்பிரமணியன் (மிருதங்கம்), அவந்திக்கா (வயலின்), ராகேஷ் (கஞ்சிரா) ஆகியோரும் இசைக்கச்சேரியில் பங்கேற்றனர்.
இரண்டாவது முறையாக இப்போட்டியில் பங்கேற்ற மாணவி பிரசீதா, “போட்டியில் பங்கேற்பது மகிழ்ச்சி. போட்டிகள் குறிப்பிட்ட கால அட்டவணைப்படி நடப்பது சிறப்பு,” என்றார்.
இளையர்களின் துடிப்பான பங்கேற்பும் பெற்றோரின் ஊக்குவிப்பும் தங்களுக்கு ஊக்கமூட்டுவதாக இவ்வமைப்பின் நிறுவனர் இராஜகோபால் கூறினார்.
இவ்வரங்கு தொடர்ந்து விரிவடைந்து கிழக்காசிய நாடுகளில் கர்நாடக இசைக் கலைஞர்களுக்கு மதிக்கத்தக்க விருது வழங்கும் அமைப்பாக வளர்ந்து நிற்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

