அதிக வருவாய் ஈட்டும்போது கூடுதலாகப் பணத்தைச் சேமிக்கலாம் என்ற எண்ணம் கொண்டிருப்பது தவறன்று. குறைந்த வருமானம் ஈட்டும்போது அதில் குறிப்பிட்ட பகுதியைச் சேமிப்பது கடினமான செயல். ஆனால் பணம் சேமிக்கும் பழக்கம் நீண்டகாலத்துக்குப் பேருதவியாக இருக்கும் என்கிறார் எண்டோவஸின் ஆராய்ச்சித் தலைவர் மின் எக்ஸ்தெல்ம்.
அதிக அளவில் பணத்தைச் சேமிப்பது எப்படி?
1. முறையான நிதி காலக்கெடு மற்றும் இலக்குகளை அமைக்கவும்
புதிய வீடு வாங்குதல், விடுமுறைக்குச் செல்லுதல், விலையுயர்ந்த பொருள்களை வாங்குதல் போன்ற முடிவுகளுக்குச் சரியான நிதி இலக்குகளைக் கொண்டிருப்பது அவசியம். தெளிவான நிதி இலக்குகள் கொண்டிருப்பதால் நிதியைச் சரிவரத் திட்டமிடலாம்.
நிதிச் சுதந்திரம் போன்ற நீண்டகால இலக்குகளையும் கருத்தில் கொள்வது நன்று. குறுகிய மற்றும் நீண்டகால இலக்குகளை அமைப்பது மனநிறைவைத் தரும்.
2. திட்டமிட்டுச் செலவுசெய்யுங்கள்
உங்கள் இலக்குகளை அடைய எவ்வளவு சேமிக்கவேண்டும் என்பதைக் கணக்கிடுவது முக்கியம். கணக்கிடுவதால் எவ்வளவு செலவழிக்க வேண்டும், எந்தெந்தச் செலவுகளை கண்காணிக்கவேண்டும் என்று உறுதிசெய்யலாம்.
3. தானியக்க (automated) முறைகளைக் கையாளுங்கள்
நிதிச் சேமிப்பு சார்ந்த நுட்பத்தை அன்றாடம் கையாள்வது எளிதன்று. தொடர்ச்சியான சேமிப்புத் திட்டம் போன்ற தானியக்க முறைகளைப் பின்பற்றுவதால் நிதித் திட்டங்கள் மீது சரிவரக் கவனம் செலுத்த இயலும்.
தொடர்புடைய செய்திகள்
பணத்தைச் செலவழித்து, எஞ்சியிருப்பதைச் சேமிப்பதற்கு மாறாக, முதலில் சேமிப்புக்கு ஒதுக்கிவிட்டு மிச்சத்தைச் செலவழிப்பது சிறந்த வழி.
இதுபோன்ற நிதித் திட்டமிடலுக்கு மத்திய சேம நிதி உதவும். எடுத்துக்காட்டாக, சம்பளத்தில் 20% சேமிப்புக்கு ஒதுக்குதல். மின்சாரம், தண்ணீர் போன்ற முக்கியக் கட்டணங்களுக்கும் தேவையான பொருள்களுக்கும் சம்பளத்தின் ஒரு பகுதியைச் சேமிக்கலாம். அத்துடன், அடிப்படைத் தேவைகளுக்கு ஒவ்வொரு மாதமும் எவ்வளவு ஒதுக்கவேண்டும் என்பதை முடிவு செய்வதும் அவசியம்.
4. விலை பாராது மதிப்புக்கு முன்னுரிமை
புதிதாக வெளிவரும் திறன்பேசிகள், மின்னிலக்கச் சாதனங்கள் பலரையும் கவர்கின்றன. பொருள்கள் வாங்கச் சேமிக்கும்போது, குறைந்த விலையைக் கண்டறிய முன்னுரிமை தரவேண்டும் எனப் பலரும் கருதுவதுண்டு.
வாங்கும் பொருள் தேவைக்கு ஏற்றதா? இதுபோல் வேறு ஏதாவது மலிவாக இருக்கிறதா? இந்தப் பொருளை வாங்குவதால் இன்னும் வேறு ஏதேனும் செலவு உள்ளதா என்றும் சிந்திக்க வேண்டும்.
விலையின்மேல் கவனம் செலுத்துங்கள். ஆனால் அதன் மதிப்புக்கு முன்னுரிமை கொடுங்கள்.
5. அவ்வப்போது மதிப்பாய்வு செய்யவும்
நமது வருமானம், செலவுகள் மற்றும் நிதி இலக்குகள் ஆண்டுதோறும் மாறக்கூடும். திட்டமிடப்பட்ட நிதி வரையறைகளுடன் ஒப்பிட்டுச் செலவுகளைக் கண்காணிப்பது முக்கியம். இதனால் நிதிச் சவால்களைச் சரிவரக் கண்டறிந்து அவற்றைத் தடுக்கும் வழிகளை வகுக்கலாம்.
ஒவ்வொரு மாதமும் பணத்தை ஒதுக்குவது மட்டுமன்றி சேமித்த பணத்தை பெருக்குவதற்கான வழிகளையும் ஆராயவும். அத்துடன், அதிக பணவரவு, குறைந்த ஆபத்தைக் கொண்டிருக்கும் பணத் தீர்வுகள் உட்பட பல்வேறு முதலீட்டு வழிகளைப் பற்றித் தெரிந்துகொள்ளலாம்.
பணப்புழக்கம் அதிகம் உள்ளவர்கள், தங்களுடைய நிதியை எப்போது வேண்டுமானாலும் திரும்பப் பெற்றுக்கொள்ளும் வழியையும் தேர்ந்தெடுக்கலாம். இது அவசர காலம் அல்லது சொந்தச் செலவுகளுக்குப் பெரிதும் உதவும்.

