துடிப்புமிகு வாழ்க்கைமுறையில் முதியோரை ஈடுபடுத்தும் கொண்டாட்டம்

2 mins read
1ad951d6-9d90-4ad4-bfbd-d07bd6cde37c
அமரர் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் நூற்றாண்டு ஜெயந்தி கொண்டாட்டத்தில் சன்லவ் இல்லத்தினர். - படம்: சன்லவ்

ஓய்வுபெற்றுள்ள 62 வயது சிவசக்திக்கு கொண்டாட்டங்களில் அதிக வாய்ப்பில்லாதபோதும் கோப்பிக் கடையில் சக முதியோருடன் குதூகலமாகக் கழிப்பதற்கான வாய்ப்பைப் பெற்றார்.

மார்சிலிங் வட்டாரத்தில் குடியிருக்கும் சிவசக்தி, கடந்த ஓராண்டாகச் சன்லவ் பராமரிப்பு இல்லத்தின் துடிப்புமிக்க மூப்படைதல் நிலையத்திற்கு வந்து உடற்பயிற்சி உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். 

மார்சிலிங் புளோக் 3ல் உள்ள சன்லவ் நிலையத்திற்குச் சென்று ஆரோக்கியமான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக அந்த ஒற்றையர் கூறினார்.

“என்னிடம் கனிவாக, ஊக்கப்படுத்தும் வகையில் நிலையத்தினர் பேசுவதால் தொடர்ந்து இங்கு வருகிறேன்,” என்று கூறினார்.

அண்மைய காலமாக உடல்நலக் குறைவு தமக்கு ஏற்பட்டுள்ளபோதும் சன்லவ் இலத்தினர் வீட்டுக்கு வந்து தம்மைக் கண்காணித்து வருவதாகவும் திருவாட்டி சிவசக்தி கூறினார்.

தனிமையில் வாடாமல் இருப்பதற்கும் உடல் நோவு ஏற்படும்போது உரிய உதவியைப் பெறவும் இத்தகைய நிலையத்துடன் முதியவர்கள் தொடர்பில் இருப்பது நல்லது என்று அவர் கூறினார்.

நவம்பர் 21ஆம் தேதி ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் நூற்றாண்டு ஜெயந்தியையொட்டிய கொண்டாட்டங்களின் அங்கமாக சன்லவ் இல்லத்தினர் அருகிலுள்ள கிம்லி கோப்பிக்கடையின் விருந்துணவுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். 

“பலராலும் இன்றளவும் போற்றி வணங்கப்படும் அமரர் சத்ய சாய் பாபா ஏழை எளியோர்க்கு உணவு முதலான வசதிகளை வாரி வழங்குபவர் என்ற முறையில் அவரது நினைவில் கொண்டாட்டம் நடத்தப்படுகிறது,” என்று திருவாட்டி மகாலட்சுமி கூறினார். 

“பிறந்தநாள் பாட்டுப் பாடி எல்லோர்க்கும் கேக் வெட்டிப் பரிமாறப்பட்டது. அத்துடன், கோப்பிக் கடையில் உணவு வழங்குவதற்கான பற்றுச்சீட்டும் அவர்களுக்குத் தரப்பட்டது. முதியோர் அந்தப் பணத்தைக் கொண்டு தங்களுக்குத் தேவையான உணவை வாங்கலாம்,” என்று அவர் கூறினார். 

தீவு முழுவதும் சன்லவ் இல்லம் மொத்தமாக ஏழு துடிப்புடன் மூப்படைதல் நிலையங்களை நடத்தி வருகிறது.

குறிப்புச் சொற்கள்