மனிதப் பாப்பிலோமாவைரஸ் (எச்பிவி) பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதியானால், கருப்பைவாய்ப் புற்றுநோய் உள்ளது என்று அர்த்தமல்ல. அதிக ஆபத்துள்ள எச்பிவி கண்டறியப்பட்டுள்ளது என்பதையே அது காட்டுகிறது.
கடந்த 2023 சிங்கப்பூர் புற்றுநோய்ப் பதிவக ஆண்டு அறிக்கையின்படி, சிங்கப்பூர்ப் பெண்களிடையே அதிகம் காணப்படும் புற்றுநோய்களில் கருப்பைவாய்ப் புற்றுநோய் பத்தாவது இடத்தில் உள்ளது.
பரிசோதனை மூலம் புற்றுநோய்க்கு முந்தைய மாற்றங்களை ஆரம்பத்திலேயே கண்டறிய முடியும் என்பதால் இதனை எளிதில் தடுக்கலாம்.
ராஃபிள்ஸ் மகளிர் நிலையத்தின் மருத்துவ இயக்குநரும் மூத்த ஆலோசகருமான டாக்டர் லீ ஐ வுவென், எச்பிவி என்பது 150க்கும் மேற்பட்ட கிருமிகளின் தொகுப்பு என்றும் அதில் 40க்கும் மேற்பட்ட வகைகள் பிறப்புறுப்பைத் தாக்கும் என்றும் கூறினார்.
25 முதல் 29 வயதுப் பெண்களுக்கு ‘பாப் ஸ்மியர்’ பரிசோதனையும், 30 வயதும் அதற்கு மேற்பட்டோருக்கும் எச்பிவி பரிசோதனையும் பரிந்துரைக்கப்படுகின்றன.
சிங்கப்பூரில் பத்துப் பெண்களில் ஒருவருக்கு எச்பிவி தொற்று உள்ளதாக ஏஎஸ்சி மகளிர் மருந்தக இயக்குநர் டாக்டர் குவெக் சுவீ சோங் தெரிவித்தார். சிங்கப்பூரில் அதிக ஆபத்துள்ள எச்பிவி வகைகள் மட்டுமே சோதிக்கப்படுகின்றன. 90 விழுக்காட்டுத் தொற்றுகள் ஓரிரு ஆண்டுகளில் இயற்கையாகவே நீங்கிவிடும் என்றாலும், எச்பிவி 16, 18 போன்ற அதிக அபாயக் கிருமிகள் நீடித்தால் 10 முதல் 15 ஆண்டுகளில் புற்றுநோயாக மாறக்கூடும்.
இதனால் ஏற்படும் புற்றுநோய்க்கு முந்தைய மாற்றங்கள் ‘சிஐஎன்’ என அழைக்கப்படுகின்றன. இவை மிதமான (சிஐஎன் 1), நடுத்தர (சிஐஎன் 2), தீவிர (சிஐஎன் 3) நிலைகளாக வகைப்படுத்தப்படுகின்றன. கிருமிக்கு நேரடி மருந்து இல்லை என்றாலும், அறிகுறிகளுக்குச் சிகிச்சை அளிக்கலாம். வீட்டிலேயே பயன்படுத்தும் ‘கோல்போஃபிக்ஸ்’ களிம்புச் சாதனத்திற்குச் சுகாதார அறிவியல் ஆணையம் ஒப்புதல் அளித்து, செப்டம்பர் 2026 முதல் மருத்துவர் பரிந்துரையுடன் மூன்று முதல் ஆறு மாதச் சிகிச்சையாகக் கிடைக்கிறது. இது உடலின் இயற்கையான குணப்படுத்தும் செயல்முறைக்கு உதவும்.
மேலும், தேசிய நோய்த்தடுப்பூசி அட்டவணையின்படி ஒன்பது முதல் 26 வயது வரையிலான பெண்களுக்கு எச்பிவி தடுப்பூசி பரிந்துரைக்கப்படுகிறது. ‘செர்வாரிக்ஸ்’, ‘கார்டசில் 9’ ஆகிய இரு தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன.
அரசாங்க மானியமோ மெடிசேவ் சலுகையோ இல்லாத ‘கார்டசில் 9’ தடுப்பூசியைச் சொந்தச் செலவில் போட்டுக்கொள்ளலாம். தடுப்பூசி போட்டவர்களும் வழக்கமான பரிசோதனை செய்துகொள்வது மிகவும் அவசியம். இதன்வழி புற்றுநோயைத் தடுக்கலாம்.
