சிங்கப்பூர் உற்பத்தித் துறை: வாய்ப்புகளும் சவால்களும்

2 mins read
என்டியுசி கற்றல் மையத்தின் ‘தொழில்துறைத் தகவல்கள் அறிக்கை 2025’ வெளியீடு
2413ded4-4293-4441-a158-c020e76fe6ba
என்டியுசி கற்றல் மையத்தின் ‘தொழில்துறைத் தகவல்கள் அறிக்கை 2025’, செயற்கை நுண்ணறிவு (AI), எந்திரனியல், தானியக்கத் தொழில்நுட்பங்களின் உதவியுடன் சிங்கப்பூரின் உற்பத்தித் துறை மாறிவருவதாகக் கூறியது. - படம்: என்டியுசி கற்றல் மையம்

சிங்கப்பூரின் உற்பத்தித் துறை, செயற்கை நுண்ணறிவு (AI), எந்திரனியல் (Robotics), தானியக்கத் தொழில்நுட்பங்களின் உதவியுடன் புதிய மாற்றத்திற்கான கட்டத்தை எட்டியுள்ளது என்று என்டியுசி கற்றல் மையம் வெளியிட்டுள்ள ‘தொழில்துறைத் தகவல்கள் அறிக்கை 2025’ தெரிவித்துள்ளது.

இந்த அறிக்கைக்காக 250 நிறுவனத் தலைவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 90 விழுக்காட்டுக்கும் மேற்பட்டோர், புத்தாக்கமிக்க தொழில்நுட்பங்களைத் தழுவத் தவறினால் தங்கள் நிறுவனங்கள் போட்டியில் பின்தங்கும் அபாயம் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

உற்பத்தித் துறையின் ஐந்து முக்கிய வளர்ச்சிப் போக்குகளாக, எந்திரனியல் மற்றும் தானியக்கம், உற்பத்தியில் செயற்கை நுண்ணறிவுப் (ஏஐ) பயன்பாடு, செயல்முறை மேம்பாடு, ‘ஐஓடி’ (IoT) உணர்கருவிகள் பயன்பாடு, நீடித்த நிலைத்தன்மைமிக்க உற்பத்தி ஆகியவை அடையாளம் காணப்பட்டன.

கண்காணிப்பு, இடர்தடுப்பு, ஏஐ மூலம் முன்கூட்டியே கண்டறிந்து பழுதுபார்ப்பு, தர உறுதிப்பாடு போன்றவை புத்தாக்கத் தொழில்நுட்பங்களின் முக்கியப் பயன்பாடுகள் என ஆய்வு கண்டறிந்தது.

தொழில்துறைத் தலைவர்களில் 40 விழுக்காட்டுக்கும் மேற்பட்டோர், புத்தாக்கத் தொழில்நுட்பங்களை எப்படி இணைத்துத் தம் தொழிலை உருமாற்றுவது என்பதில் தமக்குக் குறைந்த அளவு தெளிவே உள்ளது, அல்லது தெளிவே இல்லை, அல்லது இன்னும் ஆராய்ந்துவருவதாகக் கூறினர்.

புத்தாக்கத் தொழில்நுட்பங்களைச் சிறிதளவே நடைமுறைப்படுத்தியுள்ளன அல்லது பயன்படுத்த இன்னும் தொடங்கவில்லை என்று 42 விழுக்காட்டினர் தெரிவித்தனர்.

அதிகச் செலவு, தேவைப்படும் நிபுணத்துவம் இன்மை, ஊழியர்கள் மாற்றத்தை எதிர்ப்பது, போதிய பயிற்சியின்மை, விரிவாக்கத்தில் சிரமம் ஆகியவையே புத்தாக்கத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதில் தாம் எதிர்கொள்ளும் முக்கியச் சவால்களாக அவர்கள் குறிப்பிட்டனர்.

இதற்கென, 40 விழுக்காட்டினர் தம் ஊழியர்களை உற்பத்தித் துறைத் தொழில்நுட்பங்களில் பயிற்சிக்கு அனுப்பியுள்ளனர்.

இயந்திரங்களை எந்திரனியல்/தானியக்கத் திறன்களுடன் மேம்படுத்துவது, மாதிரித் திட்டங்களை நடத்துவது, ‘ஐஓடி’ உணர்கருவிகளையும் ‘ஏஐ’யையும் உட்புகுத்துவது போன்ற உத்திகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

உற்பத்தித் துறையில், கட்டமைப்பு ஒருங்கிணைப்புப் பொறியாளர்கள், எந்திரனியல் தொழில்நுட்பர்கள், ஏஐ/தரவு ஆய்வாளர்கள், மின்னிலக்க உருமாற்ற மேலாளர்கள், தானியக்கமயமாதல் நிபுணர்கள் ஆகியோரே அதிகம் நாடப்படுகின்றனர்.

உற்பத்தித் துறை தொழில்நுட்ப வளர்ச்சியை எந்த அளவுக்கு ஊழியரணி ஆற்றலுடன் இணைக்கிறதோ அதைப் பொறுத்தே சிங்கப்பூரின் உற்பத்தித் துறை உருமாறும் என ஆய்வு பரிந்துரைக்கிறது.

குறிப்புச் சொற்கள்