தன்னிச்சையாகவும் அமைதியாகவும் கொண்டாடப்படும் விடுமுறைகளில் சிங்கப்பூரர்களின் விருப்பம் அதிகரித்து வருகிறது.
அண்மையில் யூகவ் (YouGov) வெளியிட்ட அறிக்கையின்படி, 50 விழுக்காட்டிற்கும் மேற்பட்ட சிங்கப்பூரர்கள் விடுமுறைகளைத் தனியாகச் செலவிட விரும்புவதாகத் தெரிவித்தனர்.
1,064 சிங்கப்பூரர்கள் பங்கெடுத்த இந்த ஆய்வின்படி, பண்டிகைக் காலத்தை மற்றவர்களோடு இணைந்து கொண்டாட வேண்டும் என்ற வழக்கமான எதிர்பார்ப்புகளிலிருந்து இப்புதிய போக்கு மாறுபட்டுள்ளது.
ஓய்வு, சொந்த மதிப்பீடு, தனிப்பட்ட ஆறுதலுக்கான நேரமாக ஆண்டிறுதி விடுமுறைகளை கருதுவதே இந்த மாற்றத்திற்கு முதன்மைக் காரணம்.
மாற்றுத் திட்டங்கள்
வழக்கமாக பண்டிகைகளைக் கொண்டாடும் தோழர்கள் இல்லை என்ற நிலையில், மூன்றில் ஒரு சிங்கப்பூரர் பொது நிகழ்ச்சிகளுக்கும் ஐந்தில் ஒரு சிங்கப்பூரர் இணையவழி நடத்தப்படும் நிகழ்ச்சிகளுக்கும் செல்வர் என்று தெரிவித்துள்ளனர்.
மேலும், ஏறத்தாழ 10 விழுக்காட்டினர் செயற்கை நுண்ணறிவோடு தங்கள் விடுமுறைகளைக் கழிக்க விருப்பப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மாறுபட்ட பண்டிகைக் காலம்
மக்கள் மத்தியில் விடுமுறைக் காலம் எந்த அளவிற்கு வேறுபட்டதாக இருக்கிறது என்பதையும் இவ்வறிக்கை வெளிப்படுத்துகிறது.
கிறிஸ்துமஸ் உட்பட பல ஆண்டிறுதிப் பண்டிகைகளைப் பெரும்பான்மையினர் கொண்டாடும் நிலையில், நான்கில் ஒரு சிங்கப்பூரர் (28%) எந்தவோர் ஆண்டிறுதிப் பண்டிகையையும் கொண்டாட முற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். தனிப்பட்ட வாழ்க்கைமுறையில் நிகழும் மாற்றங்களை இது வெளிப்படுத்துகிறது.
தொடர்புடைய செய்திகள்
பரிசளிப்பிலும் தன்னிச்சையாகச் செய்ய விருப்பம்
ஏறத்தாழ 40 விழுக்காட்டிற்கும் மேற்பட்ட சிங்கப்பூரர்கள், தங்களுக்குத் தேவைப்படும் பரிசுகளைத் தாங்களே வாங்கிக்கொள்ள விருப்பப்படுகின்றனர்.
31 விழுக்காட்டினர் தங்கள் வாழ்க்கைத் துணையிடமிருந்தும் 27 விழுக்காட்டினர் தங்கள் குடும்பத்தாரிடமிருந்தும் பரிசுகளை எதிர்பார்க்கின்றனர்.
விருப்பமற்ற பரிசுகளும் கட்டாயச் சடங்குகளும்
மலிவு விலையில் வாங்கப்படும் தொழில்நுட்பக் கருவிகள், குவளைகள் போன்ற பரிசுகள் அதிகச் சிந்தனையும் அக்கறையுமின்றி கொடுக்கப்படும் பரிசுகளாகப் பட்டியலிடப்பட்டுள்ளன.
அதேபோல, விருந்தினர்கள் வந்துசென்றபின் வீட்டைச் சுத்தம் செய்வதைப் பெரும்பாலானோர் விருப்பமற்ற செயலாகக் கருதுகின்றனர்.
அலுவலகப் பரிசுப் பரிமாற்றங்கள், உறவினர்களுடனான பரிசுப் பரிமாற்றங்கள், பண்டிகைக்கால சமையல், சமூக உறவாடல் போன்றவற்றிலும் சிங்கப்பூரர்களிடையே சோர்வு காணப்படுகிறது.
மூன்றில் ஒருவர் மட்டுமே அனைத்துப் பண்டிகைச் சடங்குகளையும் ரசிப்பவராக உள்ளார்.
அழுத்தமற்ற பண்டிகைக் காலம்
பண்டிகைக் காலத்தை அணுகும் விதத்தில் பரந்த அளவிலான கலாசார மாற்றம் நிகழ்வதை இவ்வறிக்கை சுட்டுகிறது.
பாரம்பரிய சமூக எதிர்பார்ப்புகளைவிட தனிப்பட்ட விருப்பம், அமைதி ஆகியவையே இன்று அதிக முக்கியத்துவம் பெறுகின்றன.

