சிங்கப்பூர்ப் புள்ளிவிவரத் துறை, ‘சாண்ட்ரா’ (SANDRA) எனும் செயற்கை நுண்ணறிவுசார் செயலியைப் புதுப்பித்து வெளியிட்டுள்ளது.
இந்தச் செயலி சொற்பொருள் சார்ந்த ஆராய்ச்சியைப் பயன்படுத்தி, பயனாளர்களின் நோக்கத்தைத் திறம்படப் புரிந்து, அதற்கேற்ற வகையில் புள்ளிவிவரங்களை வழங்குகிறது.
‘சிங்ஸ்டாட் டேபிள் ஃபில்டர்’ வழியாக, தொடர்புடைய விளக்கப்படங்களையும் அட்டவணைகளையும் வழங்கும் திறனையும் இந்தச் செயலி கொண்டுள்ளது.
புள்ளிவிவரத் தரவுகளைப் பொதுமக்களும் வணிகர்களும் எளிதாக வெளிக்கொணர வகைசெய்யும் நோக்கில் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் புள்ளிவிவரத் துறை தெரிவித்துள்ளது. சாண்ட்ரா ஆக்கமுறை செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தாமல், சரிபார்க்கப்பட்ட துல்லியமான விவரங்களை மீட்டுத் தரும் என்று அது குறிப்பிட்டது.
தேவைப்பட்ட தகவல்களைப் பயனாளர்களுக்குக் கேட்டபடியே வழங்க முடியவில்லை என்றால், அதனுடன் ஓரளவு சம்பந்தப்பட்ட விவரங்களை இந்தச் செயலி பரிந்துரைக்கிறது. பொருளியல், வர்த்தகம், மக்கள்தொகை, சுற்றுச்சூழல் போன்ற துறைகளைச் சார்ந்த தரவுகளின் கண்டுபிடிப்புக்கு இந்தப் புதிய தொழில்நுட்பம் ஆதரவளிக்கிறது.
மேலும், கொள்கைப் பகுப்பாய்வு, வணிகத் திட்டமிடல், கல்வி ஆராய்ச்சி ஆகியவற்றுக்கும் இச்செயலி பயனாளர்களுக்கு உதவுகிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP), பயனீட்டாளர் விலைக் குறியீடு (CPI) போன்ற புள்ளிவிவரங்களை வெளிக்கொணரவும் இது உதவுகிறது.
எதிர்காலத்தில் மேலும் பல தரவுகளை மக்கள் கண்டறிய சாண்ட்ரா கூடுதலாக உதவக்கூடும் என்று சிங்கப்பூர் புள்ளிவிவரத் துறை குறிப்பிட்டுள்ளது. அத்துடன், சாண்ட்ராவை ‘டெவலப்பர் ஏபிஐ’ தொழில்நுட்பத்துடன் ஒருங்கிணைக்கவும் பயனாளர்கள் அட்டவணை எண்மூலம் தரவுகளை மீட்டெடுக்கவும் ஆழமான பகுப்பாய்வு பயன்பாட்டிற்கு உதவவும் எதிர்காலத்தில் திட்டங்கள் உள்ளதாகவும் அது கூறியது.