சிறு வயதில் புற்றுநோயுடன் போராடி அதன் பிடியிலிருந்து விலகிய இளையர்களுக்கு ஆதரவளிக்க, சிறுவர் புற்றுநோய் அறநிறுவனம் ‘தி ஹோப் ட்ரெயின் x ஆர்ட்ரப்ரனர் 2024’ (Hope Train x ARTrepreneur 2024) எனும் தனித்துவமான கலைக் கண்காட்சியை அதிகாரபூர்வமாக நவம்பர் 5ஆம் தேதி திறந்து வைத்தது.
உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு, குறைவான வேலை வாய்ப்புகளைப் பெறும் இளையர்களை நோக்கமாகக் கொண்டுள்ள அந்தக் கண்காட்சியின் தொடக்கவிழாவில் அதிபர் தர்மன் சண்முகரத்னத்தின் துணைவியார் திருவாட்டி ஜேன் இத்தோகி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
அந்தக் கண்காட்சி கரையோரப் பூந்தோட்டங்களில் நடைபெற்றது.
‘துணிவான மனங்கள், மலரும் எதிர்காலங்கள்’ (Brave Hearts, Blossoming Futures) என்ற கருப்பொருளுடன் தொடங்கிய அந்த இயக்கம், ஆர்வமுள்ள இளம் கலைஞர்கள் தங்கள் திறன்களை வெளிப்படுத்தும் ஒரு தளமாகத் திகழ்கிறது. மேலும், அது அவர்களுக்கு மற்ற வாய்ப்புகளுக்கான கதவுகளையும் திறக்கிறது.
இக்கண்காட்சியில் இடம்பெற்றுள்ள இளைய கலைஞர்களில் ஒருவரான அரிஃபின் நசீர், ஈவிங் சர்கோமா (Ewing Sarcoma) எனும் எலும்புகளைப் பாதிக்கும் புற்றுநோயிலிருந்து மீண்டு வந்துள்ளார். உடலில் நாட்பட்ட வலி மற்றும் குறைந்த அசைவுத்தன்மையை எதிர்கொண்டபோதிலும், கலை மீதான ஆர்வம் அவரைப் பெரிதும் ஊக்கப்படுத்தியது.
“எனது ஓவியத்தின் மூலம் என் அச்சங்களையும் கவலைகளையும் விசித்திரமான வடிவங்களாக மாற்றலாம் என்பதை அறிந்துகொண்டேன். நம் சவால்கள் நம்மை மேம்படுத்தும் என்பதை என் முயற்சி நிரூபிக்கிறது,” என்றார் அரிஃபின்.
‘தி ஹோப் ட்ரெயின் x ஆர்ட்ரப்ரன்யுர் 2024’ கலைக் கண்காட்சி நவம்பர் 5 முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 4ஆம் தேதிவரை காலை 9 முதல் இரவு 9 மணி வரை கரையோரப் பூந்தோட்டங்களில் நடைபெறுகிறது. பொதுமக்கள் கலைப் படைப்புகளைப் பார்வையிட்டு அவற்றை வாங்கலாம்.
மேல் விவரங்கள் அறிய www.ccf.org.sg எனும் இணையத்தளத்தை நாடலாம்.


