மீடியாகார்ப் அரங்கில் எட்டுத் திக்கும் ஒலித்த பாடகி சின்மயி ஸ்ரீபாதாவின் குரலில் மூழ்கினர் சிங்கப்பூர் ரசிகர்கள்.
‘சுவாரே’ நிறுவனம் வழிநடத்திய ‘முத்தமழை’ இசை நிகழ்ச்சியில் பங்கேற்க வருகையளித்த சின்மயி தனது வசீகர குரலில் சிங்கப்பூர் ரசிகர்களை இசை மழையில் நனைய வைத்தார். இந்த ஆண்டு சுவாரே நிறுவனம் நடத்திய முதல் நிகழ்ச்சி இது.
வெள்ளிக்கிழமை (ஜனவரி 9) அரங்கமே கூடியிருந்த நிலையில் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் அரங்கின் எல்லாப் பகுதியிலும் இருந்த ரசிகர்களுக்கு இசை விருந்தளித்தார் சின்மயி.
இரவு 7 மணியளவில் அரங்கின் கதவுகள் திறக்கப்பட்ட பின்னர் தங்களின் நுழைவுச்சீட்டுப் பிரிவுக்கு ஏற்றவாறு குழப்பமின்றி வரிசையில் நின்று ரசிகர்கள் இருக்கைகளுக்குச் சென்றனர்.
புதுமுயற்சியாக நிகழ்ச்சியில் அமைந்த பல அம்சங்களில் பாடகி சின்மயியை நேரில் கண்டு சித்திரமாக்கினார் உள்ளூர் கலைஞர் கஸ்தூரி சஞ்சய் நாயர், 28.
பொதுவாகத் திருமண விழாக்களில் தம்பதியினரை நேரில் கண்டு சித்திரமாக்கும் கஸ்தூரிக்கு, இசை நிகழ்ச்சியில் பிரபலப் பாடகியை கண்டு நேரடியாக வரைந்தது முதல் அனுபவம்.
கிட்டத்தட்ட முதல் 40 நிமிடங்களுக்கு உள்ளூர் பாடகர்களும், சூப்பர் சிங்கர் முன்னாள் கலைஞர்களான ஸ்ரீகாந்த் ஹரிஹரன், ஆனந்த் அரவிந்தாக்ஷன் ஆகியோரும் ரசிகர்களைக் குதூகலப்படுத்தினர்.
பின்னர், சின்மயி பாடிய முதல் தமிழ் பாடலான ‘ஒரு தெய்வம் தந்த பூவே’ பாடலைப் பாடியவாறு மேடைக்கு வருகை புரிந்தார்.
தொடர்புடைய செய்திகள்
ரசிகர்கள் பலத்த கரவொலியுடன் அவரை வரவேற்று அடுத்த சில மணி நேரத்திற்கு எந்தச் சோர்வுமின்றி ஆரவாரம் செய்தனர்.
அதற்கு ஏற்பத் தாம் பாடிய திரைப்படப் பாடல்களை இசை துள்ளலுடன் பாடி அசத்திய சின்மயி சிறிய நடன அசைவுகளோடு நிகழ்ச்சிக்கு மேலும் அழகு சேர்த்தார்.
‘அன்பில் அவன்’, ‘சர சர’, ‘வாராயோ வாராயோ’, ‘கிளிமாஞ்சாரோ’, ‘அஸ்கு லஸ்க்கு’, ‘சஹானா’, ‘சந்திப்போமா, ‘என்ன இது’, ‘எந்தாரா’, ‘என்னோடு நீ இருந்தால்’ எனத் தாம் பாடிய பல பிரபல பாடல்களைப் பாடினார் சின்மயி.
தமிழ் மொழிக்கு அப்பாற்பட்டு ‘தித்லி’, ‘தேரே பினா’ போன்ற இந்திப் பாடல்களையும் பாடி கொண்டாட்டத்திற்கு ரசனை சேர்த்தார் சின்மயி.
‘கிளிமாஞ்சாரோ’ பாடலைப் பாடிக்கொண்டிருந்தபோது அண்மையில் வெளிவந்த புகழ்பெற்ற ‘ஆப்பட்டு’ பாடலை இணைத்துப் பாடிய சின்மயி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தினார்.
சின்மயியுடன் சேர்ந்து சில பாடல்களைப் பாடிய ஸ்ரீகாந்த் ஹரிஹரனும், ஆனந்த் அரவிந்தாக்ஷனும், நிகழ்ச்சியை மேலும் மெருகூட்டினர்.
நிகழ்ச்சியின் இறுதிக் கட்டத்தில் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த ‘முத்தமழை’, ‘மையா மையா’, பாடல்களைப் பாடி அரங்கத்தையே தனது குரலில் அதிர வைத்தார் சின்மயி.
அண்மையில் சின்மயி மேடையில் பாடியதால் பிரபலமடைந்த ‘முத்தமழை’ பாடல் பலரின் செவிகளுக்கு விருந்தளித்தது என்று சொன்னால் அது மிகையாகாது.
“எனக்கு இளம் வயதிலிருந்தே சின்மயி பாடல்கள் என்றால் மிகவும் பிடிக்கும். நான் எதிர்பார்த்த பெரும்பாலான பாடல்களை சின்மயி பாடினார். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சுமுகமான முறையில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்,” என்றார் நிகழ்ச்சியைக் காண வந்த கிவீரா கணேசன், 29.

