இளவயதினரையும் பெரியவர்களையும் பாதிக்கும் நோய்களில் ஒன்று பித்தப்பைக் கற்கள். பித்தப்பையில் கற்கள் சில நேரங்களில் இயற்கையாகவே உருவாகலாம். பித்தப்பை உற்பத்தி செய்யும் பித்தநீர் உணவுகளில் இருக்கும் கொழுப்புச்சத்தைக் கரைக்கும் தன்மை வாய்ந்தது.
ஒருவர் தேவைக்கு அதிகமான அளவில் கொழுப்பு சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளும்போது பித்த நீரால் அதனைக் கரைக்க முடியாமல் போகலாம். அவ்வேளையில் அந்த மீதமுள்ள கொழுப்பு கற்களாக மாறலாம்.
சிங்கப்பூர் மக்கள்தொகையில் 10லிருந்து 15 விழுக்காட்டு பெரியவர்கள் பித்தப்பைக் கற்களால் பாதிக்கப்படுகின்றனர். பித்தப்பைக் கற்கள் பெரும்பாலும் ஒருவரின் வாழ்க்கைமுறை, உணவுப் பழக்கம் போன்ற காரணங்களால் ஏற்படுகின்றன.
பித்தப்பைக் கற்கள் மிக எளிமையான சிகிச்சை முறைகள் மூலம் அகற்றப்படலாம். ஏஸ் சிறப்பு அறுவை சிகிச்சை மற்றும் எண்டோஸ்கோபி எனும் தனியார் சிறப்பு அறுவை சிகிச்சை மருந்தகத்தில் பொது அறுவை சிகிச்சை நிபுணரும், மருத்துவ இயக்குநருமான டாக்டர் ரியாஸ் சிங்கப்பூர்வாலா பித்தப்பைகளை அகற்றுவதற்கான சிகிச்சை முறையைப் பற்றி விளக்கினார்.
நாளமில்லாச் சுரப்பியலில் (endocrine) மூத்த ஆலோசகருமான அவர், பித்தப்பை கற்களால் பாதிப்படையும்போது ஒருவரின் பித்தப்பை ஒட்டுமொத்தமாக அகற்றப்படும் என்றார்.
‘கோலிசிஸ்டெக்டோமி’ (cholecystectomy) எனும் அந்த சிகிச்சை முறையைப் பற்றி மேலும் விளக்கிய அவர், அந்த சிகிச்சை குறைந்த ஆபத்து கொண்டது என்றார்.
பொதுவாக, வயிற்றுவலி போன்ற அறிகுறிகள் நீண்ட நாள்கள் நீடித்தால் ஒருவருக்கு பித்தப்பைக் கற்கள் இருக்கக்கூடும் என்று கூறிய டாக்டர் ரியாஸ், வயிற்றுப் பகுதியின் மேற்பகுதியில் வலி அதிகம் ஏற்படும் என்றும் தெரிவித்தார்.
கொழுப்புச் சத்து அதிகமுள்ள உணவு வகைகளைச் சாப்பிட்டால் பித்தப்பைக் கற்கள் எளிதில் உருவாகும் என்பது ஒரு கட்டுக்கதை என்ற டாக்டர் ரியாஸ், பித்தப்பைக் கற்கள் எந்த வயதினருக்கும் வரலாம் என்றார்.
தொடர்புடைய செய்திகள்
நோய் தீவிரமடையும் நேரத்தில் காய்ச்சல் அல்லது ரத்தத்தில் நஞ்சு (sepsis) போன்ற விளைவுகள் ஏற்படலாம் என அவர் எச்சரித்தார்.
கோலிசிஸ்டெக்டோமி சிகிச்சை மேற்கொள்பவர்கள் விரைவாக குணமடையலாம் என்ற டாக்டர் ரியாஸ், இளம் நோயாளிகள் சிகிச்சைக்குப் பிறகு ஒரே நாளில் வீட்டிற்குச் சென்றுவிடலாம் என்றார்.
இந்தச் சிகிச்சை முறையில் பெரும்பாலும் எவ்வித ஆபத்தும் இல்லை என்றாலும் சில நேரங்களில் பித்தநீர்க் குழாயில் பாதிப்பு, பித்தநீர்க் கசிவு போன்றவை ஏற்படலாம் என்றார் அவர்.
கோலிசிஸ்டெக்டோமி சிகிச்சை மேற்கொண்ட பின்னர் நோயாளி தமது உணவுப் பழக்கத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டுமென்று கூறிய டாக்டர் ரியாஸ், கொழுப்புச் சத்து அதிகம் இருக்கும் உணவு வகைகளைப் பெரும்பாலான நோயாளிகள் தவிர்த்துவிடுவார்கள் என்றார்.
சிகிச்சையிலிருந்து விரைவாக குணமடையலாம் என்ற அவர், முதல் இரண்டு வாரங்களுக்குச் சற்று கவனமாக இருக்க வேண்டும் என்றும் கூறினார். பின்னர், மெதுவாக உடற்பயிற்சிகளை மேற்கொள்வது எனப் பல நடவடிக்கைகளில் ஈடுபடத் தொடங்கலாம் என்றார் அவர்.
நுண்ணுயிர் எதிர்ப்பிகள், வலி நிவாரணிகள் ஆகியவை பரிந்துரைக்கப்படும் என்று டாக்டர் ரியாஸ் கூறினார். மக்கள் இந்நோயைக் கண்டு அஞ்ச வேண்டாம் என்றும் இது சாதாரண நோய்தான் என்றும் அவர் தெரிவித்தார்.


