தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இணைய வாழ்வை இனிதாக்கும் மின்னிலக்கத் தூய்மை

2 mins read
e9270aa6-969d-4cb3-bc6f-fed281d76738
உண்மையான கோப்புகளும் படங்களும் அளிக்‌கக்‌கூடிய அதே அளவு மன அழுத்தத்தை மின்னிலக்‌கக் கோப்புகளும் படங்களும் ஏற்படுத்தலாம் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். - படம்: ஃபிரீபிக்‌

வீட்டைச் சுத்தம் செய்து, தேவையற்ற குப்பைகளை ஒழித்துவிட்டு, இல்லத்திலும் உள்ளத்திலும் தூய்மையோடு புத்தாண்டை வரவேற்பது அனைவரும் பின்பற்றும் வழக்‌கமான நடைமுறையாகும்.

இந்நிலையில், இப்போதைய தொழில்நுட்ப உலகில் நம்மை வயப்படுத்தி இருக்கும் தொழில்நுட்பக் கருவிகளிலும் அத்தகைய வழிமுறையைப் பின்பற்றி, மின்னிலக்கத் தூய்மையைப் பேணுவது நம்முடைய இணைய வாழ்வையும் இனிப்பாக்கும்.

நிரம்பி வழியும் மின்னஞ்சல் பெட்டிகள் முதல் பயன்படுத்தப்படாத செயலிகள் வரை, காலாவதியான, தேவையற்ற கோப்புகள் ஏராளமாக இருக்கலாம்.

உண்மையான கோப்புகளும் படங்களும் அளிக்‌கக்‌கூடிய அதே அளவு மன அழுத்தத்தை மின்னிலக்‌கக் கோப்புகளும் படங்களும் ஏற்படுத்தலாம் என்கின்றனர் வல்லுநர்கள்.

அத்தகையதொரு நிலைமை ஏற்படாமலிருக்‌க, ஒருவரின் மின்னிலக்க வெளியையும் தூய்மைப்படுத்தி, மின்னிலக்க வாழ்க்கையை புத்தாண்டில் மேம்படுத்த சில எளிய வழிமுறைகளைப் பின்பற்றலாம்.

முதலில், உங்கள் மின்னணுக் கருவிகள், செயலிகள், படங்கள், கோப்புகள் அனைத்தையும் ஆராய்ந்து மதிப்பிடுவது அவசியம். உங்களிடம் என்னவெல்லாம் இருக்கின்றன என்பதை நன்கு அறிந்துவிட்டு மின்னிலக்‌கத் துப்புரவுப் பணியைத் தொடங்குவது திறம்படத் திட்டமிடுதலுக்‌கு வழிவகுக்‌கும்.

மின்னஞ்சல் பெட்டி, கிளவுட் சேமிப்பகம், சமூக ஊடகம் போன்றவற்றில் மிகுந்த கவனம் செலுத்தலாம். தேவையில்லாத மின்கோப்புகளை நீக்கிவிட்டு எஞ்சியுள்ளவற்றை எளிதாக அடையாளம் காணக்கூடிய பெயர்களுடன் வரிசைப்படுத்தலாம்.

மின்னஞ்சல் பெட்டிகளில், தேவையில்லாத பழைய மின்னஞ்சல்களை அழித்துவிடுங்கள். தேவையின்றி வரும் மின்னஞ்சல்களுக்கான குப்பைக் கோப்பில் (ஸ்பேம்) தேவையற்ற மின்னஞ்சல்களைத் தானாக மாற்றும்படி அமைத்துக் கொள்ளலாம். படிக்காத செய்திமடல்களைப் பின்தொடர்வதை நிறுத்திவிட்டு, இனிமேல் பெறும் மின்னஞ்சல்களை வகைப்படுத்தி வரிசைப்படுத்த வடிப்பானைப் (Filter) பயன்படுத்தலாம்.

சமூக ஊடகங்களில் பயனளிக்‌காத கணக்குகளைப் பின்தொடர்வதை நிறுத்திவிட்டு குறுஞ்செய்திப் பெட்டிகளை வகைப்படுத்தலாம். செயல்திறனையும் பாதுகாப்பையும் மேம்படுத்த மின்னணுக் கருவிகளில் உள்ள செயலிகளை மதிப்பாய்வு செய்து, பயன்படுத்தப்படாதவற்றை நீக்கி, எஞ்சியவற்றின் மென்பொருளைப் புதுப்பித்துக்கொள்ளுங்கள்.

திறன்கருவிகளில் பெறும் அறிவிப்புகளைத் தனிப்பயனாக்குவது (customize) குறுக்கீடுகளைக் குறைப்பதோடு கவனத்தையும் அதிகரிக்க உதவும். சமூக ஊடகப் பயன்பாட்டையும் திரை நேரத்தையும் கட்டுப்படுத்த பொருத்தமான நேர வரையறைகளை வகுத்துக்கொள்வதன்மூலம் மனநலனை மேம்படுத்தலாம்.

மின்னிலக்‌கத் தூய்மை என்பது ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே செய்ய வேண்டும் என்பதில்லை. ஒருவரின் திறன்கருவிகளை ஒழுங்கமைக்க ஒவ்வொரு வாரமும் சிறிது நேரத்தை ஒதுக்குவது மன அழுத்தத்தைக் குறைக்‌க உதவுவதோடு வாழ்க்‌கைக்குத் தேவையான பணிகளில் கவனம் செலுத்த வழிவகுக்‌கும்.

இந்த நடைமுறையை விடாமல் பின்பற்றுவதன்மூலம், இணைய வாழ்க்‌கைமுறையில் மட்டுமல்லாமல் புத்தாண்டின் அன்றாட வாழ்க்‌கைமுறையிலும் நேர்மறையான தாக்‌கத்தை ஏற்படுத்தலாம்.

குறிப்புச் சொற்கள்