புத்தாடை இல்லாத ஒரு பண்டிகையை நம்மில் யாரும் கொண்டாடியிருக்க மாட்டோம். தீபாவளி இன்னும் சில நாள்களில் நெருங்கிக்கொண்டிருக்கும் வேளையில் லிட்டில் இந்தியாவில் பண்டிகை உணர்வு களைகட்டியுள்ளது.
ஒவ்வோர் ஆண்டும் புதிய வடிவங்களிலும் வண்ணங்களிலும் வரும் ஆடைகளைத் தான் பலரும் வாங்கி அணிய விரும்புவார்கள்.
பெண்களுக்கான அனார்கலி, ஷராரா, லெஹெங்கா போன்ற ஆடைகளிலிருந்து ஆண்களுக்கான கண்கவரும் வகையில் ஜிப்பாவும் புதிதாக இந்த ஆண்டு ‘சிக்கன் கறி’ வடிவில் குர்த்தாவும் குவிந்துள்ளன.
தேக்கா சந்தையின் மேல் மாடிக்குச் சென்றால் திரும்பிய இடமெல்லாம் வண்ண சுடிதார்களும் லெஹெங்காக்களும் குவிந்து கிடக்கின்றன.
வார இறுதிகளில் வாடிக்கையாளர்களின் கூட்டம் அலைமோதினாலும் கடைக்காரர்கள் பலர் இந்த ஆண்டு தீபாவளி உணர்வு வியாபாரத்தில் பெரிதும் மங்கிவிட்டதாகக் கருதினர்.
குறிப்பாக, தேக்கா சந்தையின் மேல்மாடியில் இருக்கும் கடைக்காரர்கள் பெரும்பாலும் இணைய வர்த்தகங்களின் தாக்கம் அதிகரித்துவிட்டதாகப் புலம்பினர்.
மேலும், வாடிக்கையாளர்கள் குறைந்த விலைகளில் ஆடைகள் வாங்க விரும்புவதாகக் கூறிய அவர்கள் வியாபாரம் கட்டுப்படியாகும் அளவில் இல்லை என்றும் வருத்தத்துடன் கூறினர்.
தேக்கா சந்தையில் மங்கிய பண்டிகை வியாபாரம்
இணையத்தளங்களில் இன்னும் அழகான ஆடைகள் விற்கப்படுவதாலும் விலை மலிவென்பதாலும் நேரடியாக வந்து வாங்கும்போதும் வாடிக்கையாளர்கள் அதே எதிர்பார்ப்புகளுடன் வருவதாகச் சொன்னார் சாருமதி தேவேந்திரன், 19.
தொடர்புடைய செய்திகள்
“வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு வந்து வணிகம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்ததால் உள்ளூர்க் கடைகளில் வணிகம் மந்தமாக உள்ளது. தீபாவளி என்றாலே மூன்று நாள்களுக்குத்தான் வியாபாரத்தைப் பார்க்க முடிகிறது,” என்று கூறினார் அணிகலன் கடை ஊழியரான ராம்ஷீலா முனியாண்டி, 57.
கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாகத் தேக்கா சந்தையில் ஆடைகள் விற்பனை, தையல் சேவைகள் வழங்கி வரும் ‘மினீஸ் ஃபேஷன்’ கடையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒப்பிடுகையில் தையல் சேவைகளை நாடும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
“இவ்வாண்டு அதிக வண்ணங்களில் ஆடைகள் வந்துள்ளன. வாடிக்கையாளர்கள் பலர் மலேசியாவில் ஆடைகள் வாங்குவதால் நாங்கள் விற்கும் விலைகளைக் கேட்டுத் திகைத்துப் போகின்றனர். மலேசியாவிலும் தீபாவளிச் சந்தை இருப்பதால் சிங்கப்பூரர்கள் அங்குச் செல்ல விரும்புகின்றனர்,” என்றார் ஃபிசா பாலிவுட் கடை ஊழியர் கஸ்தூரி நாகராஜு, 19.
ஏமாற்றம் தரும் விற்பனை நிலை
தேக்கா சந்தையிலிருந்து பிர்ச் ரோட்டில் இருக்கும் சந்தைக்குச் சென்றால் அங்கேயும் விற்பனைச் சரிவு கடுமையாக இருப்பதைக் காண முடிந்தது.
வார இறுதியிலும்கூட பிற்பகல் நேரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை தேக்கா சந்தையைவிட குறைவாகக் காணப்பட்டது.
வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை ஏமாற்றம் அளிக்கும் விதத்தில் இருப்பதாகத் தம் பெற்றோர் கடையில் விற்பனைக்கு உதவி வரும் முகம்மது நசீம், 25, சொன்னார். பலரும் மலேசியாவுக்குச் செல்வதால் இந்நிலை ஏற்பட்டிருக்கலாம் என்றார் அவர்.
ஆண்களுக்கான ஆடைகளை மட்டும் விற்கும் ‘அல் அய்ன் பிரைடல்’ கடையில் பூ, கலம்காரி வடிவங்களில் ஆடைகள் வந்துள்ளன.
“20 நாள்களாக நடந்த விற்பனையை வைத்துப் பார்க்கும்போது, வியாபாரம் 60 விழுக்காடு குறைந்துள்ளது தெரியவந்துள்ளது,” என்றார் கடை உரிமையாளர் மலிக்கா அப்துல் ராவூஃப், 55.
“ஆயத்தப் புடவைகள் இங்கு அதிகம் விற்கிறோம். இந்த ஆண்டு வியாபாரம் மிகவும் மந்தமாக உள்ளது. இணைய வர்த்தகங்களால் எங்கள் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது,” என்றார் ‘டிசைனர் கலெக்ஷன்’ கடையில் பணிபுரியும் கண்ணகி சகாதேவன், 53.
இருப்பினும், திங்கட்கிழமை (அக்டோபர் 20) தீபாவளி கொண்டாடப்படும் நிலையில் அதற்கு முந்திய வார இறுதியில் வணிகம் சூடுபிடிக்கும் என்று கடைக்காரர்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஆடைகள் விற்கும் கடைகளில் வணிகம் மந்தமாக இருக்கும் நிலையில், மருதாணிக் கடைகளிலும் அதே நிலைதான்.
“இவ்வாண்டு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை மிக மோசமாக உள்ளது. தீமிதித் திருவிழாவிற்குப் பிறகு கூட்டம் அதிகரிக்கும் என்ற நம்பிக்கை இருந்தாலும் சென்ற ஆண்டு தீமிதித் திருவிழாவிற்கு முன்பே கூட்டம் இருந்தது,” என்று குறிப்பிட்டார் ‘தி ஹென்னா ஷாப்’ உரிமையாளர் ஷாமினி, 25.
“இணைய வர்த்தகங்கள் அதிகம் இருந்தாலும் குடும்ப உறுப்பினர்களுடன் லிட்டில் இந்தியாவில் இருக்கும் தீபாவளிச் சந்தைக்கு வந்து உள்ளூர் வணிகங்களுக்கும் நாம் ஆதரவு அளிக்க வேண்டும்,” என்றார் வாடிக்கையாளர் தீபக் ராஜன், 19.
15 ஆண்டுகளாகச் சிங்கப்பூரில் வசிக்கும் பழனிசாமி செந்தில், 39, பர்ச் ரோட் தீபாவளிச் சந்தை இந்தியாவில் தீபாவளி கொண்டாடும் அனுபவத்தை அளிப்பதாகச் சொன்னார்.
“பிள்ளைகளுக்குத் தேர்வுகள் இருப்பதால் இவ்வாண்டு தீபாவளி மிகவும் பரபரப்பாக உள்ளது. இந்த முறை பர்ச் ரோடு தீபாவளிச் சந்தை அழகாக இருக்கிறது. இணையத்தளத்தில் வாங்குவதைவிட என் குடும்ப உறுப்பினர்களுடன் இங்கு வந்து வாங்கவே விரும்புகிறேன்,” என்றார் சுமித்ரா, 47.