புற்றுநோய் தொடர்பில் ஊழியர்களுக்கு நிறுவனங்கள் கைகொடுக்கலாம்

2 mins read
3fa356b1-67e0-482d-a958-85ac04e5baf1
சிங்கப்பூர் தேசியப் புற்றுநோய்ப் பதிவேட்டின் புள்ளிவிவரப்படி அண்மைய ஆண்டுகளில் புற்றுநோய்ச் சம்பவங்கள் அதிகரித்துவருகின்றன.  - படம்: இணையம்
multi-img1 of 2

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஊழியர்களை ஆதரிப்பதிலும் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் வேலையிடங்களுக்கு முக்கியப் பங்கு உண்டு.

சிங்கப்பூர் தேசியப் புற்றுநோய்ப் பதிவேட்டின் புள்ளிவிவரங்கள் அண்மைய ஆண்டுகளில் புற்றுநோய்ச் சம்பவங்கள் அதிகரித்துவருவதாகக் கூறுகின்றன. புற்றுநோயுடன் வாழ்வோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கக்கூடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

2018ஆம் ஆண்டிலிருந்து 2022ஆம் ஆண்டு வரை சிங்கப்பூரில் ஏறக்குறைய 87,700 பேருக்குப் புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டது.

அவர்களில் 49 விழுக்காட்டினர் ஆண்கள். 51 விழுக்காட்டினர் பெண்கள்.

ஆண்கள் பரவலாகப் பெருங்குடல் புற்றுநோய், புரோஸ்டேட் சுரப்பிப் புற்றுநோய்க்கு ஆளாகின்றனர்.

பெண்களிடம் பெரும்பாலும் மார்பகப் புற்றுநோய் கண்டறியப்படுகிறது.

இப்படியிருக்க முன்கூட்டியே புற்றுநோயைக் கண்டுபிடிக்க ஏதுவாக, வேலையிடங்கள் குறைந்த விலையில் மருத்துவப் பரிசோதனைகளை வழங்கலாம்.

அவற்றுள் ‘மேமோகிராம்’ எனப்படும் மார்பகப் புற்றுநோய்க்கான ஊடுகதிர்ச் சோதனை, ‘பேப் ஸ்மியர்’ பரிசோதனை, ரத்த, மலப் பரிசோதனை ஆகியவை அடங்கும் என்றார் சுகாதார ஆலோசனை வழங்கும் ‘அனைத்துலக எஸ்ஓஎஸ்’ அமைப்பின் ஆசிய பசிபிக் கிளைச் சுகாதார ஆலோசகர் எதனேஸ் சிவலோகநாதன்.

மூன்று கட்டங்களில் வேலையிடங்கள் ஊழியர்களுக்கு உதவலாம் என்றார் டாக்டர் எதனேஸ்.

முதலாவது, ‘புற்றுநோய்த் தடுப்பும் விழிப்புணர்வும்’. இரண்டாவது, ‘அடிக்கடி பரிசோதனை செய்துகொள்ளுதலும் புற்றுநோயைத் தொடக்கத்திலேயே கண்டறிதலும்’. இறுதியாக, ‘சிகிச்சையின்போதும் சிகிச்சைக்குப் பின்னும் தொழிலாளிகளுக்கு ஆதரவளித்தல்’.

அபாயகரமான ரசாயனங்களையும் கதிர்வீச்சையும் வேலையிடங்களில் தவிர்த்தால் புற்றுநோய் தொடர்பான உடல்நலப் பிரச்சினைகளைத் தடுக்கலாம் என்றும் டாக்டர் எதனேஸ் சொன்னார்.

ஊழியர்களின் நலனைப் பேணுவது நிறுவனத்திற்கும் நன்மை பயக்கும் என்றார் அவர்.

“புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஊழியர்களை அரவணைப்பது நிறுவனத்துடனான அவர்களின் பந்தத்தை வலுப்படுத்தும். அத்தகைய ஊழியர்களைத் தக்கவைப்பதற்கும் அதிக வாய்ப்புகள் உண்டு. இது நீண்டகாலத்தில் ஊழியர்களுக்கும் நிறுவனத்திற்கும் பயனளிக்கும்,” என்றார் டாக்டர் எதனேஸ்.

தொடக்கத்திலேயே ஊழியர்களிடம் புற்றுநோயைக் கண்டறிந்துவிட்டால் அவர்கள் நீண்டகால விடுப்பு எடுப்பதற்கான சாத்தியமும் குறையும் என்றார் அவர்.

ஊழியர்களின் நலனைப் பேணும் நிறுவனங்களுக்கும் நற்பெயர் கிட்டும்.

இத்தகைய வேலையிட நலத் திட்டங்களை அறிமுகப்படுத்த விரும்பும் நிறுவனங்களுக்கு ‘அனைத்துலக எஸ்ஓஎஸ்’ அமைப்பு ஆலோசனைகள் வழங்குகிறது.

குறிப்புச் சொற்கள்