சொல்லிய பாடலின் பொருளுணர கலைஞர்களுக்கு ஊக்கம் 

நடிப்புவழி நெறி வளர்த்த எம்ஜிஆரின் நினைவில் நிறைவு

2 mins read
23a69895-e950-44d0-87f8-5901e07d5a85
நடிப்புவழி நெறி வளர்த்த எம்ஜிஆரை நினைவுகூர இலவச இசை நிகழ்ச்சி ஒன்று சிங்கப்பூரில் அண்மையில் நடத்தப்பட்டது. - படம்: இம்பிரின்ட்ஸ் ஆஃப் இன்டியன் ஃபில்ம்/ ஃபேஸ்புக்

பழம்பெரும் நடிகரும் முன்னாள் தமிழக முதலமைச்சருமான அமரர் எம்.ஜி. ராமச்சந்திரன், சிறு வயதில் அவரது திரைப்படங்களைப் பார்த்து வளர்ந்தவர்களுக்கு இன்றும் ஒரு சிறந்த ஆளுமையாகத் திகழ்கிறார்.

1917ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி பிறந்த திரு. எம்.ஜி.ஆர், 1987ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி இயற்கை எய்தினார். தமிழகம் மட்டுமன்றி, தமிழ் கூறும் நல்லுலகில் வாழும் பல முதியோர்களின் உள்ளங்களிலும் அவர் இன்றும் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

மனத்தில் பதியும் முத்தான வரிகளைக் கொண்ட பாடல்களுக்குத் தனது நடிப்புத் திறமையால் உயிரூட்டி, மக்களின் உள்ளங்களில் கோலோச்சிய அந்த நாயகரைப் போற்றும் விதமாக, அண்மையில் இலவச இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தியதாக உள்ளூர்க் கலைஞர் எஸ். மலர்விழி தெரிவித்தார்.

எம்.ஜி.ஆர் நிறுவிய அறக்கட்டளைகளுக்கு நன்கொடை வழங்கியதுடன் அவரது நினைவைத் திருவாட்டி மலர்விழியும் அவரைப் போன்ற பலரும் தொடர்ந்து கொண்டாடி வருகின்றனர்.

சிலோன் விளையாட்டு மன்றத்தில் (Ceylon Sports Club) கடந்த டிசம்பர் 24ஆம் தேதியன்று நடைபெற்ற இசை நிகழ்ச்சியில், தொலைக்காட்சிப் பாடகர்கள் அப்துல் ரஹ்மான், குணசெல்வம், மஜித், பிரியா ஆகியோருடன் இன்னும் சிலரும் இணைந்து பாடினர்.

நன்றாகப் புனையப்பட்ட கருத்துச் செறிவுமிக்க பாடல்களில் உயிர் இருப்பதால், அதற்கு மேலும் உயிர் சேர்ப்பதற்குப் பாடகர்கள் பொருளுணர்ந்து பாட வேண்டும் என்ற வேண்டுகோளை, உள்ளூர்த் தொலைக்காட்சி மற்றும் மேடைப் பாடகரான திருவாட்டி மலர்விழி தொடர்ந்து வலியுறுத்தி வருபவர்.

‘அரசக்கட்டளை’ திரைப்படத்தில் இடம்பெற்ற “வேட்டையாடு விளையாடு, விருப்பம் போல உறவாடு; வீரமான நடையைப் போடு, நீ வெற்றியெனும் கடலில் ஆடு” என்ற பாடல் வரிகளைத் திருவாட்டி மலர்விழி உதாரணமாகச் சுட்டினார்.

மேலும், “நேர்மை உள்ளத்திலே, நீந்தும் எண்ணத்திலே, தீமை வந்ததில்லை, தெரிந்தால் துன்பமில்லை” போன்ற வரிகள் மக்களின் எண்ண ஓட்டங்களைச் செம்மைப்படுத்துபவை என்று அவர் உருக்கத்துடன் தெரிவித்தார். 

குறிப்புச் சொற்கள்