தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இசை, தொழில்நுட்பத்தின் சங்கமம் ‘அன்றும் இன்றும்’

2 mins read
c793dbc5-8da2-4d63-b380-77b0d183cb5a
புத்தாக்க இந்தியக் கலையகம் வழங்கும் ‘அன்றும் இன்றும்’ இசைநிகழ்ச்சி. - படம்: புத்தாக்க இந்தியக் கலையகம்

புத்தாக்க இந்தியக் கலையகம் சனிக்கிழமை (அக்டோபர் 4) இரவு 6 முதல் 9 மணிவரை ஆர்இஎல்சி (RELC) அரங்கில் ஏற்பாடு செய்திருக்கும் ‘அன்றும் இன்றும்’ நிகழ்ச்சியில் தமிழ்க் கலைகளும் தொழில்நுட்பமும் ஒன்றுகலந்திடவுள்ளன.

செயற்கை நுண்ணறிவால் அமைக்கப்பட்ட இசையுடன், சிங்கப்பூர், இந்தியா, இலங்கை மேடைக் கலைஞர்களின் குரலும் இசையும் ஒருசேர ஒலிக்கும். பழைய, புதிய பாடல்கள் இரண்டும் இடம்பெறுகின்றன.

30 ஆரஞ்சு கிரோவ் சாலை, சிங்கப்பூர் 258352 என்ற முகவரியில் அமைந்துள்ள அரங்கிற்குச் செல்ல ஸ்டீவன்ஸ் எம்ஆர்டி நிலையத்திலிருந்து பிற்பகல் 4.45 முதல் 5.45 மணிவரை இலவசப் பேருந்துச் சேவை வழங்கப்படுகிறது.

செயற்கை நுண்ணறிவுடன் பன்னாட்டுக் கலைஞர்களின் பாடல்கள்

இலங்கைப் பாடகரும் இசைக் கலைஞருமான ந ரகுநாதன், தமது தலைசிறந்த பாடல்களை நேரடியாக, புத்தாக்க இந்தியக் கலையக இயக்குநர் சி குணசேகரனுடன் சேர்ந்து பாடுவார்.

“புதுக்கோட்டையிலிருந்து தமிழகக் கலைஞர்களை வரவழைத்துள்ளோம். தொழில்நுட்ப முறைப்படி நேரடியாக ஒலிப்பதிவு செய்யப்பட்ட இசையை முப்பரிமாணமாக வழங்குகிறோம். அருமையான படைப்புகளை மிகவும் துல்லியமாக நாங்கள் ஒலிப்பதிவு செய்துள்ளோம்.

“இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம், பன்னாட்டுக் கலைஞர்களை இணைப்பதுதான்,” என்கிறார் செயற்கை நுண்ணறிவு இசைத் தயாரிப்பையும் இந்நிகழ்ச்சியையும் தலைமைதாங்கி வழிநடத்தும் திரு குணசேகரன்.

பலகுரல் பரவசம்

நிகழ்ச்சியில் சிறப்புப் பலகுரல் அங்கத்தைப் படைக்கவுள்ளார் முனைவர் எஸ் ஜெகதீசன்.

“திருவிளையாடல் புராணத்தில் உள்ள நான்கு கதாமாந்தர்களை - நக்கீரர், சிவபெருமான், செண்பகப் பாண்டியர், தருமி - நான் பல குரல்களில் காட்சிப்படுத்துவேன். பொற்காசு கிடைக்காமல் போனது, நக்கீரர்மீது கோபப்பட்டது ஆகியவற்றை அப்படியே காட்டுவேன். ஏ பி நாகராஜன், சிவாஜி கணேசனின் குரல்களில் உள்ள நவரசக் குணங்களை வெளிப்படுத்துவேன்,” என்றார் அவர்.

‘அலிபாபாவும் 40 திருடர்களும்’ திரைப்படத்திலிருந்து ‘சின்னஞ்சிறு சிட்டே’ பாடலை ஆண், பெண் இரு குரல்களிலும் அவர் பாடுவார்.

சிறப்புத் தேவைகள் கொண்ட பாடகி மெக்கென்சியா கேபிரியலா, இளம் பாடகி ஏஞ்சலினா, வசந்தம் ஸ்டார் பிரபலங்கள் தேஜு, ராஜா சுவாமிநாதன், திவ்ய‌‌‌ஷாலினி ராம்குமார், மூத்த பாடகர்கள் லெட்சுமி சந்திரன், எஸ் சந்திரன், ஜெயசம்போ ஆகியோர் பாடவுள்ளனர். பாரம்பரிய நடனத்தைப் பக்தி தேவி ஆடுவார்.

நிகழ்ச்சி நெறியாளர் திரு ரவி குணா.

நிகழ்ச்சிக்கு https://cp.bookmyshow.sg/en/events/TAMAI025 இணையத்தளம் வழியாகப் பதிவுசெய்யலாம். எஸ்ஜி கலாசார சிறப்புத்தொகையைப் பயன்படுத்தலாம்.

குறிப்புச் சொற்கள்