காலாங் ரிவர்சைட் பூங்காவில் அன்று திறந்தவெளி வகுப்புகளுடன் தொடங்கி இன்று சிராங்கூன் சாலையில் சொந்தப் பயிற்சிக்கூடத்தில் பயிற்சி வழங்கும் களரி அகாடமி எத்தனையோ மாற்றங்களைச் சந்தித்துள்ளது.
ஆனால் மாறாத ஒன்று, மக்கள் மனங்களில் அது வகிக்கும் தனி இடம்.
2015ல் இந்திய மரபுடைமை நிலையத்தின் திறப்பு விழாவுக்காக ஒரு சண்டைக் காட்சியை அரங்கேற்றித் துவக்கம் கண்ட களரி அகாடமி, தன் பத்தாண்டு மைல்கல்லைக் கொண்டாட அதே இடத்துக்கு ஜூலை 19ஆம் தேதி திரும்பியது.
அந்த முக்கிய நிகழ்வை குறிக்க, கலாசார, சமூக, இளையர்துறை; மனிதவளத் துணையமைச்சர் தினேஷ் வாசு தாஸ் முன்னிலையில், களரி அகாடமி தன் பயணத்தை விளக்கும் படநூலையும் வெளியிட்டது.
நிலையத்தின் உட்புறத்தில் சிலம்பாட்டத்துடன் தொடங்கிய நிகழ்ச்சி, பின்பு நிலையத்தின் வெளிப்புறத்தைப் போர் மைதானமாகவே மாற்றியது. சொந்த உருவாக்கத்திலான சதுரங்க விளையாட்டை ஒட்டிய போர் நாடகத்தின் இரண்டாம் பாகத்தை (Queen’s Gambit: Dance of the Nagas) அது பொதுமக்களிடம் காட்சிப்படுத்தியது.
களமிறங்கிய தற்கால வீரர்கள் நிகழ்த்திய கண்ணைப் பறிக்கும் சண்டைக் காட்சிகள், சூரியனின் கதிர்வீச்சையும் மிஞ்சிய வாள்வீச்சுகள், பகல் வெப்பத்தையும்விடச் சூடாக நடைபெற்றன.
உண்மையான ஆயுதங்களோடு நடந்த பாவனைப் போர், வீழ்ந்தவர் மூச்சுக்காற்றைத் தேடும் அளவுக்குத் தத்ரூபமாக அரங்கேறியது.
தற்காப்புக் கலைகளின் ஈர்ப்பு துணையமைச்சர் தினேஷ் வாசு தாஸையும் விட்டுவைக்கவில்லை.
தொடர்புடைய செய்திகள்
அவர் தம் ராணுவ வாழ்வை நினைவுகூர்ந்தபடி சுருள்வாளுடன் சாகசம் செய்தார்; சிலம்பத்தடியைச் சுழற்றினார்; கையில் ஏந்தியவாறு வாளின் கூர்மையைக் கூர்ந்து கவனித்தார்.
“நீங்கள் 500க்கும் மேற்பட்ட மாணவர்களுக்குப் பயிற்சி அளித்துள்ளீர்கள். 45 விழுக்காட்டுப் பெண்களின் பங்கேற்பை அடைந்துள்ளீர்கள். 2023ல் பெண்களுக்காகவே தனி வகுப்புகளைத் தொடங்கினீர்கள். உங்கள் மாணவர்களில் 60 விழுக்காட்டினர் 18 வயதுக்குக் குறைவானவர்கள்,” எனப் பாராட்டினார் திரு தினேஷ்.
சீனத் தற்காப்புக் கலையான வூஷூ அணியுடன் களரி அகாடமி இணைந்து நிகழ்ச்சி படைத்தது, ஆசிய நாகரீக அரும்பொருளகத்தில் ‘சப்தமாத்ரிகா’ எனும் நாடகத்தை அரங்கேற்றியது, அதிபர் தர்மன் முன்னிலையில் தற்காப்புக் கலைகளைக் காட்சிப்படுத்தியது போன்றவற்றை அவர் பாராட்டினார்.
“களரி அகாடமி, ஆயுர்வேதம் போன்ற மற்ற இந்திய பண்பாட்டு அம்சங்களையும் இணைத்து, சீன, மலாய் கலைஞர்களுடனும் இணைந்து ஒருங்கிணைந்த பண்பாட்டுப் பயணத்தை உருவாக்கலாம்,” என்றார் திரு தினேஷ்.
நவீன பரிமாணத்தில் தற்காப்புக் கலைகள்
“பாரம்பரியக் கலையை நவீன முறைகளில் உயிர்ப்பிக்க முடியும் என்பதைக் காட்ட இம்மோர்ட்டல் எக்லிப்ஸ் (Immortal Eclipse) எனும் குறும்படத்தையும் தயாரித்துள்ளோம்,” என்றார் களரி அகாடமியின் இணை நிறுவனரும் குறும்படத்தின் படப்பிடிப்பு, ஒலி அமைப்பு இயக்குநருமான இ. ரூபன்.
“இக்குறும்படம் வாலி, சுக்ரீவன், ராமர் குறித்த கதையை நவீன உலகில் காட்டுகிறது. இது நம் அடுத்த மேடை நாடகமான ‘இம்மோர்ட்டல் ராகவா’வுக்கு முன்னோட்டமாக அமையும்,” என்றார் குறும்படத்தின் திரைக்கதையை எழுதி, சண்டைக் காட்சிகளை இயக்கிய களரி அகாடமி இணை நிறுவனர் வேதகிரி கோவிந்தசாமி.
பின்னிரவு 2 மணிக்கு மேலாக மத்திய வர்த்தக வட்டாரத்தில் உண்மையான ஆயுதங்களோடு படப்பிடிப்பு நடந்தது.
களரி அகாடமியின் ‘குவீன்ஸ் கேம்பிட்’ நாடகத்தின் மூன்றாம் பாகத்தை நவம்பர் மாதம் கலா உத்சவத்தில் அரங்கேற்றுவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.
“அடுத்த கட்டமாக, நாம் கவனம் செலுத்தவுள்ள நான்கு விஷயங்கள், இளையர் - சிறுவர்களுக்குத் தற்காப்புக் கலையோடு நடிப்பு, பேச்சையும் கற்பிக்கிறோம்; புத்தாக்கம் - இணையவடிவிலும் பயிற்சிகள் வழங்குகிறோம்; கதைசொல்லுதல் - சென்ற செப்டம்பர் நம் முதல் தற்காப்புக் கலை மேடை நாடகத்தை அரங்கேற்றினோம்; திரைப்படம், சண்டைக் காட்சிகள் தயாரித்தல்,” என்றார் ரூபன்.

