புன்னகையை மெருகூட்டும் பல் மருத்துவம்

புன்னகையை மெருகூட்டும் பல் மருத்துவம்

2 mins read
b2f3d9b0-7040-420d-8462-9fe24e8b5dc3
புன்னகையை மெருகூட்டப் பலர் அழகியல் பல் மருத்துவத்தை நாடுகின்றனர். - படம்: பிக்சாபே

சாதாரணப் புன்னகையை மெருகேற்றுவதற்கும் ஒருவரின் தன்மதிப்பை உயர்த்துவதற்கும் ‘காஸ்மெட்டிக் டென்டிஸ்ட்ரி’ எனப்படும் அழகூட்டும் பல் மருத்துவம் பலருக்குக் கைகொடுத்து வருகிறது.

புதிய தொழில்நுட்பங்கள், சமூக ஊடகத் தளங்களின் தாக்கம், ஒருவரின் ஒட்டுமொத்த உடல்நலத்தில் வாய்ப் பராமரிப்பில் கவனம் செலுத்தத் தொடங்குதல் போன்ற காரணங்களால் அழகூட்டும் பல் மருத்துவம் பிரபலமாகி வருகிறது.

பார்ப்பதற்கு அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்பதற்கு அப்பாற்பட்டு, பலர் உடல்நலத்திற்காகவும் இதில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். பல் மேலுறைகள், பல் சீரமைப்புச் சிகிச்சை, மாற்றுப் பல் பதித்தல் ஆகியவை முன்னெப்போதையும்விட இப்போது மிக எளிதில் அணுகக்கூடியவையாகவும் பொருத்தமானவையாகவும் உள்ளன. அழகூட்டும் பல் மருத்துவம் புதிதாக வலம்வரும் ஒரு போக்கு. தொழில்நுட்ப வளர்ச்சியால் இப்போது இந்த மருத்துவச் சிகிச்சைகள் மலிவாகவும் உள்ளன. கண்ணுக்குத் தெரியாத பல் சீரமைப்புக் கருவிகள் ஒரு காலத்தில் மிக விலை உயர்ந்த பொருள்களாகக் கருதப்பட்டன.

ஆனால் இப்போது அது பலராலும் நாடக்கூடிய சிகிச்சை முறையாக மாறியுள்ளது. இன்ஸ்டகிராம், டிக்டாக், யூடியூப் போன்ற சமூக ஊடகத் தளங்களும் அழகூட்டும் பல் மருத்துவத் துறையில் மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றன. சமூக ஊடகப் பிரபலங்கள் பற்களை வெண்மையாக்கும் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வது போன்ற காணொளிகளைப் பதிவேற்றம் செய்யும்போது மக்களும் அந்தச் சேவையை நாடத் தூண்டப்படுகின்றனர்.

பல ஆண்டுகளாக அழகூட்டும் பல் மருத்துவம் என்றால் பெண்களே அதிகம் நாடுவார்கள் என்ற கருத்து இருந்துவந்தது. அது இப்போது மாறிவிட்டது. அழகிய சிரிப்பு ஒருவரின் வாழ்க்கையையும் பணியிட அனுபவத்தையும் எவ்வாறு மாற்றும் என்பதை ஆண்களில் பலரும் உணரத் தொடங்கியுள்ளனர்.

தனிப்பட்ட ஆளுமை, பணிச்சூழல், பராமரிப்பு ஆகியவையும் மாற்றுச் சிகிச்சைகளை நாட ஆண்களை ஊக்குவிக்கின்றன. பல நேரங்களில் அத்தகைய சிகிச்சைகளை நாடுவோர், புதிய பல் சீரமைப்புகள் அழகாகத் தெரிவது மட்டுமின்றி அவை சிறப்பாகச் செயல்படுவதையும் உணர்கிறார்கள்.

நெருக்கமான பற்களைச் சீரமைத்தல், மாற்றுப் பல்லைப் பதித்தல் அல்லது பல் மேலுறைச் சிகிச்சை போன்றவை வலியையும் டிப்பதில் உள்ள பிரச்சினைகளையும் அகற்றி மேம்பட்ட தோற்றத்தை அளிக்கின்றன. இந்த ஆரோக்கியம் சார்ந்த கண்ணோட்டம் அழகூட்டும் பல் மருத்துவத்தைத் ‘தடுப்புச் சிகிச்சை’ முறையாகக் கருதும் வகையிலான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

பற்களை வெண்மையாக்கும் நோக்கத்துடன் பலரும் சேவையை நாடுகின்றனர். பெரியவர்களுக்கான ஆரம்பக்காலச் சீரமைப்புக் கருவிகள், பல் மேலுறைகள், செயற்கைப் பல் பொருத்தும் மருத்துவம், ஈறு வடிவமைத்தல், ஈறு சீரமைப்பு போன்றவையும் அதிகம் நாடப்படும் சேவைகள்.

‘மைக்ரோ வெனியர்’, ‘காம்போசிட் ரீஷேப்பிங்’ போன்றவை மிகக் குறைந்த அளவில் பற்களைச் சீரமைக்கும் சிகிச்சை முறையாகத் தற்போது கவனம் ஈர்த்து வருகின்றன.

குறிப்புச் சொற்கள்