தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கவனம்! தவறான சொடுக்கு மோசடியில் முடியலாம்

3 mins read
‘பாப் அப்’ மோசடியில் 15 நிமிடத்தில் $173,000 இழந்த முதியவர்
5d276efc-61cd-4d57-92b2-545212b61d39
பாப்-அப் வந்தால் உடனே அழுத்தாதீர். - படம்: ஜெட்டி இமேஜஸ்

கேடு விளைவிக்கக்கூடிய மென்பொருளிலிருந்து தனது கணினியை தற்காத்துக்கொள்ள உதவி கிடைக்கவிருப்பதாக அவர் எண்ணினார்.

ஆனால், அந்த 79 வயதுடைய ஆடவர் 15 நிமிடங்களிலேயே $173,000 இழந்துவிட்டார். அது அவருடைய வாழ்நாள் சேமிப்பில் பாதிக்கும் மேல்.

ஏப்ரல் 17ஆம் தேதியன்று, கணினியில் தீம்பொருள் இருப்பதாக திரு டானுக்கு (உண்மை பெயரல்ல) எச்சரிக்கை வந்தது. பயந்துபோன அவர், எச்சரிக்கையில் இருந்த உதவி எண்ணை தொடர்பு கொண்டார்.

அடுத்த மூன்று மணி நேரத்தில், சிங்கப்பூர் காவல் இணையக் குற்ற பிரிவை சேர்ந்த அதிகாரி என்று கூறியவருக்கு திரு டான் தனது கணினியை கையாள அனுமதி தந்தார்.

அந்த தொலைபேசி அழைப்பு நிஜம் என்று நம்பிய திரு டான் அந்த போலி அதிகாரியிடம் தனது டிபிஎஸ், யுஓபி, ஓசிபிசி இணைய வங்கிகளுக்கான உள்நுழைவு விவரங்களை பகிர்ந்துகொண்டார்.

பிறகு உண்மையான டிபிஎஸ் வங்கி அதிகாரி திரு டானை தொடர்புகொண்டு அவர் செய்த பரிவர்த்தனைகளை பற்றி விசாரித்தனர்.

இவ்வளவு நேரம் தான் ஒரு மோசடி செய்பவரிடம் தான் பேசி கொண்டிருந்ததாக எண்ணி திரு டான் கவலையுற்றார்.

திரு டான் காவல் துறையிடம் புகார் அளித்துள்ளார். விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்தாண்டின் முதல் நான்கு மாதங்களிலேயே கிட்டத்தட்ட 150 சிங்கப்பூர் வாசிகள் இனிய மோசடிகளுக்கு ஆளாகியுள்ளதாகவும், அதில் $15.1 மில்லியனுக்கும் மேற்பட்ட பணம் இழக்கப்பட்டதாகவும் சிங்கப்பூர் காவல்துறை கூறியது.

கணினிகள், மடிக்கணினிகள், வரைப்பட்டிகைகள் போன்ற சாதனங்களை பயன்படுத்துவோர் அதிகம் தொழில்நுட்ப ஆதரவு மோசடிகளுக்கு ஆளாகியுள்ளதாக சிங்கப்பூர் காவல்துறையின் செயல்பாட்டுப் பிரிவின், மோசடி பொது கல்வி அலுவலகத்தின் துணை இயக்குநர் திரு ஜெஃப்ரி சின் தெரிவித்தார்.

விண்டோஸ் மற்றும் மேக்ஓஎஸ் பயன்படுத்துபவர்கள் ஆபத்தில் இருப்பதாக அவர் எச்சரித்தார்.

மோசடி செய்பவர்களை கண்டறியுங்கள்

‘பாப் அப்’ அறிவிப்புகள் பலமுறை நம்பதகுந்த செய்தி போலவும் நன்கு அறியப்பட்ட நிறுவனங்களான ‘மைக்ரோசாப்ட்’, மற்றும் ‘ஆப்பிள்’ போன்றவற்றில் இருந்து வெளிவரும் அறிவிப்புகள் போலவும் காணப்படும்.

என்றபோதிலும் அவ்வேளைகளில், அவை மோசடி முயற்சி என்பதை எவ்வாறு கண்டறிவது என்ற கேள்விக்கான பதிலை கீழ்க்கண்டவாறு விவரிக்கின்றார் மைக்ரோசாப்ட் சிங்கப்பூர் நிறுவனத்தின் தலைமை பாதுகாப்பு அதிகாரி திரு டென்னிஸ் சுங்.

“முறையான நிறுவனங்கள் பொதுவாக ‘பாப்-அப்’ அறிவிப்புகள் மூலம் தேவையில்லா தொடர்புகளைக் கோர மாட்டார்கள்,’’என்று கூறிய திரு சுங், மென்பொருள் சேவை வழங்கும் நிறுவனங்கள் எவ்வாறு தங்கள் ஆதரவை அளிக்கிறார்கள் என்றும், அவர்கள் பணம் வசூலிக்கும் முறை குறித்தும் பொதுமக்கள் நன்கு அறிந்து வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறார்.

எடுத்துக்காட்டாக, மைக்ரோசாப்ட் நிறுவனத்திலிருந்து அனுப்பப்படும் பிழை மற்றும் எச்சரிக்கை சார்ந்த குறுஞ்செய்திகள் ஒருபோதும் தொலைபேசி எண்களை உள்ளடக்காது.

“எனவே பெறப்பட்ட செய்திகள் குறித்து உறுதியாக தெரியவில்லை என்றால், மேலும் தகவல் அறிய யாரை தொடர்பு கொள்ள வேண்டும் என்பதை அறிந்துகொள்ள, அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்க்க வேண்டும்,’’ என்று குறிப்பிட்டார் திரு சுங்.

அறிமுகமில்லாத செயலிகளை அதுவும் குறிப்பாக அதிகாரப்பூர்வமற்ற தளங்களில் இருந்து பதிவேற்றம் செய்வதை பயனீட்டாளர்கள் தவிர்த்திட வேண்டும் என்றும் வலியுறுத்தினார் திரு சுங்.

“செயலிகளை உருவாக்குபவரின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது நம்பத்தகுந்த செயலிகள் தொகுப்பிலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட முறையான மென்பொருள்களை மாத்திரம் மக்கள் பயன்படுத்திட வேண்டும்,’’என்றார் திரு சுங்.

இணைய மோசடி எவ்வாறு நடக்கின்றது?

  • மோசடிக்கு இலக்காகும் நபர்கள் அவர்களின் கணினி சாதனங்கள், அல்லது மடிக்கணினியில் அவர்களின் இணையப் பாதுகாப்பு அபாயத்தில் உள்ளதாக ஓர் ‘பாப் அப்’ அறிவிப்பை பெறுவார்கள். அது தொடர்பான தொழில்நுட்ப உதவிக்காக குறிப்பிட்ட எண்ணை தொடர்புகொள்ளுமாறு அந்த அறிவிப்பானது பாதிக்கப்பட்ட நபர்களுக்கு தொலைபேசி எண்களை வழங்கும்.
  • பாதிக்கப்பட்டவர் அந்த தொலைபேசி எண்ணிற்கு அழைக்கும் போது, இணைய மோசடி செய்பவர்கள் மைக்ரோசாப்ட் அல்லது ஆப்பிள் தொழில்நுட்ப உதவி ஊழியர்கள் போல் பேசி, பாதிக்கப்பட்டோரின் சாதனங்கள் சமரசம் செய்யப்பட்டதாகவும் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு அவற்றை பயன்படுத்துவதாகவும் கூறுவார்கள்.
  • தொலைவில் இருந்தாலும் மோசடிக்கு உள்ளாவோரின் கணினிகளை இயக்கிட அனுமதி பெற்றிடும் வகையில், மோசடிக்கு இலக்காக உள்ளோரை குறிப்பிட்ட இணையப்பக்கம் அல்லது மென்பொருளை பதிவிறக்கம் செய்ய மோசடிக்காரர்கள் உத்தரவிடுவார்கள். 
  • அதற்குப் பிறகு, இந்த அழைப்பை சட்ட அமலாக்க அதிகாரி என்று தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் மற்றொரு இணைய மோசடி பேர்வழிக்குத் திசை மாற்றிவிடுவார்கள். தொலைவில் இருக்கும் மென்பொருள் மூலம், பாதிக்கப்பட்டவரை ஒரு போலியான காவல்துறை அறிக்கையை பதிவிறக்கக் கூறுவார்கள். இது ஒரு போலி இணையத்தளத்தில் நடைபெறும். 
  • ‘இணைய மோசடியாளர்களை’ கைப்பற்ற உதவுவதாக சாக்குப்போக்குக் கூறி ஏமாற்றுபவர்கள்,பாதிக்கப்பட்டவரை தனது இணைய வாங்கி கணக்கில் உள்நுழையுமாறு கூறுவார்கள்.
  • பாதிக்கப்பட்டவர் உள்நுழைந்த பிறகு, இணைய மோசடியாளர்கள் பாதிக்கப்பட்டவரின் வங்கிக் கணக்கைப் பயன்படுத்தி முறையற்ற பரிவர்த்தனைகளைச் செய்ய தொலைநோக்கில்  அணுகல் செயல்பாட்டைப் பயன்படுத்துவார்கள்.

உங்களைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்

பாதுகாப்பு அம்சங்களைச் சேர்க்கவும்

  1. மோசடி நோக்கத்திலான இணைப்புகளிலிருந்து பாதுகாத்துக்கொள்ள வைரஸ் தடுப்புச் செயலிகளைப் பதிவிறக்கம் செய்யவும்.
  2. இணையத் தேடுத்தளத்தில் தானாகவே பாப்-அப் வருவதைத் தவிர்க்க செயல்முறைகளை மாற்றியமைத்துக்கொள்ளுங்கள்.
  3. செயல்பாட்டு முறைகள், செயலிகள், வைரஸ் தடுப்பு மென்பொருள் ஆக அண்மைய பாதுகாப்பு அம்சங்களுடன் இருப்பதை உறுதிசெய்யவும்.  

மோசடியை அடையாளம் காண அதிகாரபூர்வ வழிகளை நாடவும்

  1. 1800-722-6688 எனும் எண்ணில் scamalert.sg எனும் இணையப்பக்கத்தில் அதிகாரபூர்வமாக மோசடிகளை அடையாளம் காணுங்கள்.
  2. பாப்-அப் வரும்போது உடனே சொடுக்கவேண்டாம். இயந்திரத்தை அடைத்து, மீண்டும் தொடங்கி வைரஸ் தடுப்பு மென்பொருளை ஓடவிடவும்.
  3. நம்பகமான வழிகளில் மட்டும் உதவி நாடவும். எவரேனும் சந்தேகத்துக்குரிய இடங்களிலிருந்து பேசினால் அவர்களின் ஆலோசனைகளின்படி செயல்படாதீர்.
  4. அதிகாரபூர்வ வங்கி அல்லது தொழில்நுட்ப உதவி அதிகாரிகள் நேரடியாக காவல்துறை அதிகாரிகளிடம் தொலைபேசி அழைப்பை இணைத்துவிடமாட்டார்கள்.

அதிகாரிகள், குடும்பத்தினர், நண்பர்களிடம் சொல்லவும்

  1. மோசடி பரிவர்த்தனைகளை வங்கியிடம் உடனே தெரிவித்து காவல்துறையிடம் புகாரளியுங்கள்.
  2. ஆக அண்மைய மோசடி தடுப்பு ஆலோசனைகளுக்கு ScamAlert வாட்ஸ்அப் பக்கத்தைப் பின்தொடர்ந்து அதனை குடும்பத்தினர், நண்பர்களுடன் பகிருங்கள்.

சிங்கப்பூர் காவல்துறையுடன் இணைந்து வழங்கப்படுகிறது

குறிப்புச் சொற்கள்