வரும் 2025ஆம் ஆண்டுக்கான தென்கிழக்காசிய ஸ்னீக்கர் கான் நிகழ்ச்சியும் எஸ்பிஎச் மீடியாவும் இணைந்து ‘டிசைன் யுவர் ஸ்னீக்கர்’ (Design Your Sneaker) என்ற காலணி வடிவமைப்புப் போட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளது.
டிசம்பர் 3ஆம் தேதி முதல் ஜனவரி 24ஆம் தேதி வரை, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் இதழின் சந்தாதாரர்களாக இருப்பவர்கள் காலணி வடிவமைப்புகளைச் சமர்ப்பித்தால் 3,000 வெள்ளி வரையிலான பரிசுத்தொகையையும் அரியவகை காலணிகளையும் வெல்வதற்கான வாய்ப்புள்ளது.
இந்தப் போட்டியில் பங்குபெற விரும்புவோர், பதிவு இணையத்தளத்திற்குச் சென்று தங்களது விவரங்களையும் முழுமையான வடிவமைப்பு மற்றும் அதனைப் பற்றிய சிறிய விளக்கத்தையும் அனுப்பவேண்டும்.
16 வயதுக்கும் 25 வயதுக்கும் இடைப்பட்ட ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் சந்தாதார்கள் இந்தப் போட்டியில் பங்கேற்கலாம்.
18 வயதுக்கும் குறைவானவர்கள், பெற்றோர் கையெழுத்துடனான அனுமதிப் பத்திரத்தைச் சமர்ப்பிக்கவேண்டும்.
சமர்ப்பிக்கப்பட்ட வடிவமைப்புகளை வரும் ஜனவரி 25ஆம் தேதி முதல் 31ஆம் தேதிக்குள் நீதிபதிகள் மதிப்பீடு செய்து சிறந்த 20 வடிவமைப்புகளைத் தேர்ந்தெடுப்பர்.
பிப்ரவரி 1 முதல் 9 வரை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் சந்தாதாரர்கள் தங்களுக்குப் பிடித்த வடிவங்களுக்கு வாக்களிக்கலாம்.
மக்களின் வாக்குகளும் நீதிபதிகளின் புள்ளிகளும் கருத்தில்கொள்ளப்பட்டு மூன்று வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
தொடர்புடைய செய்திகள்
வெற்றிபெறும் வடிவமைப்புகள், பிப்ரவரி 23ஆம் தேதியன்று ஸ்னீக்கர் கான் மாநாட்டின்போது அறிவிக்கப்படும். மரினா பே சேண்ட்ஸ் எக்ஸ்போ அரங்கில் அந்நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
வெற்றியாளர்களுக்கு முதல் பரிசு, இரண்டாம் பரிசு, மூன்றாம் பரிசாக முறையே 3,000 வெள்ளி, 2,000 வெள்ளி, 1,000 வெள்ளி ரொக்கம் வழங்கப்படும். ஆறுதல் பரிசுகளும் உண்டு.
வெற்றிகரமான வடிவமைப்புகளுக்கு வாக்களித்தோரும் பரிசு வெல்வதற்கான வாய்ப்பு உள்ளது.
தங்கள் தனித்தன்மையையும் படைப்பூக்கத்தையும் வெளிப்படுத்த இளையர்களுக்கு இந்தப் போட்டி நல்ல வாய்ப்பு என்று எஸ்பிஎச் மீடியாவின் துணைத் தலைமை நிர்வாகி குவெக் யூ சுவாங் தெரிவித்துள்ளார்.
மாறுபட்ட, புரட்சிகரமான வடிவமைப்புகளை எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.

