வெற்றிவாய்ப்புகளில் நம்பிக்கையுடன் கிரிக்கெட் அணி

2 mins read
2ee23040-cf07-4ed8-be90-7a557fa7489b
முதன்முறை தென்கிழக்காசிய விளையாட்டுகளில் பங்கேற்கும் (இடமிருந்து) சாய் ஹர்‌‌‌ஷா வேணுகோபால், பிரனவ் சுதர்‌‌ஷன் ராஜே‌ஷ் கிரு‌ஷ்ணன், அஸ்லான் அலி சி ஜாஃப்ரி . - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பிரனவ் சுதர்‌‌ஷன் ராஜே‌ஷ் கிரு‌ஷ்ணன், சாய் ஹர்‌‌‌ஷா வேணுகோபால், அஸ்லான் அலி சி ஜாஃப்ரி மூவரும் தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் முதன்முறையாக சிங்கப்பூரைப் பிரதிநிதித்து கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.

முதன்முறையாக இருப்பினும் எவ்வித அச்சமும் தயக்கமுமின்றி, வெற்றி கிட்டும் என்ற நம்பிக்கையுடன் அவர்கள் தாய்லாந்து செல்கின்றனர்.

பிரனவ் சுதர்‌‌ஷன், தொடக்கப் பந்துவீச்சாளராவார். நன்றாகப் பந்தை அடிக்கவும் செய்வார். மலேசியாவுடனான அண்மைய இரு போட்டிகளில் அவர் இரண்டு, மூன்று விக்கெட்டுகள் எடுத்தார். முன்பு குளோபல் இந்தியன் அனைத்துலகப் பள்ளியின் கிரிக்கெட் அணிக்கு அவர் தலைமை தாங்கினார்.

“தாய்லாந்து, மலேசியாவுடன் அடிக்கடி விளையாடியுள்ளதால் அவர்களின் விளையாட்டாளர்கள் விளையாடும் விதம் தெரியும்; ஆனால் பிலிப்பீன்ஸ், மியன்மார் ஆகிய அணிகளுடன் விளையாடியதில்லை. இருந்தாலும், வெற்றிபெறுவோம் என நம்புகிறோம்,” என்றார் பிரனவ்.

இடதுகை சுழற்பந்துவீச்சாளரான அஸ்லான், 18, அணியிலேயே ஆக இளையவர்களில் ஒருவர்.

பயிற்சியில், இடதுகை சுழற்பந்துவீச்சாளரான அஸ்லான் ஜாஃப்ரி.
பயிற்சியில், இடதுகை சுழற்பந்துவீச்சாளரான அஸ்லான் ஜாஃப்ரி. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அஸ்லானின் தந்தை பாகிஸ்தானிலிருந்து வந்தவர். தாயார் சீனர். தந்தை கிரிக்கெட் பிரியர் என்பதால் அஸ்லானுக்கும் அவ்விளையாட்டுமீது பெரும் நாட்டம் வந்தது. “என் தாயாரும் ஓய்வு நேரத்தில் எனக்குப் பந்துகள் வீசுவார்,” என்றார் அஸ்லான். தன் அக்காவும் தான் துவண்டுபோகும்போதெல்லாம் உறுதுணையாக இருப்பதாக அவர் கூறினார்.

தேசிய U-16 அணியில் இருந்த அஸ்லான், முதன்முதலில் U-19 போட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்படாதபோது வருத்தப்பட்டார்.

“ஆனால் அதை உந்துதலாகக் கொண்டு தொடர்ந்து உழைத்தேன்,” என்றார் அஸ்லான்.

அதன் பலனாக, தேசிய அணி, U-19 அணி இரண்டுக்கும் அவர் தகுதிபெற்றார். தேசிய அணிக்காகத் தன் முதல் விக்கெட்டை இவ்வாண்டு மலேசியாவுக்கு எதிராக எடுத்தார்.

விக்கெட்கீப்பர்-பந்தடிப்பாளர் சாய் ஹர்ஷா வேணுகோபால், 23, U-19 அணியில் விளையாடியபோதே தொடக்க ஆட்டக்காரராக மலேசியாவுக்கு எதிராக 64 ஓட்டங்கள் குவித்தவர். இவ்வாண்டு ஜூலை மாதம் ஹாங்காங்கிற்கு எதிராக 28 பந்துகளில் 46 ஓட்டங்களை எடுத்தார்.

அணியில் அனுபவமிக்க விளையாட்டாளர்கள், ஆதரவுக் குழுவினர் இருப்பதால் வழிகாட்டுதலுக்குப் பஞ்சமில்லை.

பல்லாண்டுகளாகச் சிங்கப்பூருக்காக விளையாடிவந்துள்ளார் அணித் தலைவர் ரெஸா கஸ்னாவி. அணி மேலாளர் சேட்டன் சூர்யவன்‌ஷி இந்திய பிரிமியர் லீக்கில் சவ்ரவ் கங்குலியின் அணியில்கூட விளையாடியுள்ளார். அணியின் பயிற்றுவிப்பாளர் அம்ஜாத் மஹ்பூப், 2023 தென்கிழக்காசிய விளையாட்டுகளில் சிங்கப்பூர் அணியை ஆறு-ஓவர் போட்டிகளில் தங்கத்துக்கு வழிநடத்தினார்.

இயன்முறை மருத்துவர் டாக்டர் ஜட்டின் மகேஸ்வரி, ஆப்கான் அணிக்குப் பயிற்சி வழங்கியுள்ள ராஜே‌ஷ் சௌஹான் ஆகியோர் வலுவான ஆதரவு வழங்குகின்றனர்.

ரெஸா சென்ற மாதம்தான் பெண்குழந்தைக்குத் தந்தை ஆனார். மகள் பிறந்த அதே நாள்கூட பயிற்சிக்கு வந்த ரெஸா, வெற்றிமீது குறியாக இருக்கும் அணிக்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறார்.

அணித் தலைவர் ரெஸா கஸ்னாவி, 2023 தென்கிழக்காசிய விளையாட்டுகளில் சிங்கப்பூரை T10, T20 பிரிவுகளில் வெண்கலத்துக்கு வழிநடத்திச் சென்றார்.
அணித் தலைவர் ரெஸா கஸ்னாவி, 2023 தென்கிழக்காசிய விளையாட்டுகளில் சிங்கப்பூரை T10, T20 பிரிவுகளில் வெண்கலத்துக்கு வழிநடத்திச் சென்றார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
குறிப்புச் சொற்கள்