தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அழலாம், மீண்டும் எழலாம் ஆண்மகனே

5 mins read
ஆண்கள் சார்ந்த நலனைக் கொண்டாடும் நவம்பர் மாதம், மனநலனைப் பற்றி பேசுவதற்கான மாதமாகவும் உள்ளது. ஆண்மை பற்றிய தெளிவான புரிதல், ஒவ்வோர் ஆடவரின் நேர்மையையும் முதிர்ச்சியையும் அதிகரிக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.
18d37788-c2ad-4a0d-b60c-75141e253e6e
கண்ணைத் துடைத்துக்கொள்ளும் இளையர். - படம்: ஐஸ்டோக்
multi-img1 of 2

ஆண்மை, உடலின் தன்மைகளை மட்டுமன்றி மனத்தின் தன்மைகளையும் குறிப்பதை நடைமுறை புரிதலில் காண முடிகிறது.

ஆண்மை என்பதற்குச் சமூகம் மதிப்பு தருவதால் அதற்கான தகுதிநிலைகளையும் அதே சமூகம் நிர்ணயிக்கிறது.

ஆணாகப் பிறந்தால் மட்டும் ஒருவரை ஆடவராக உலகம் ஏற்பதில்லை.

அழகு, மிடுக்கு, கம்பீரம் ஆகிய வெளித்தோற்றங்களுடன் பொறுப்புணர்வு, வலிமை, போட்டித்தன்மை, தலைமைத்துவப் பண்பு, தன்னையும் பிறரையும் பாதுகாக்கும் ஆற்றல் போன்ற உட்பண்புகளும் ஆண்மைக்கு அழகான, விரும்பத்தகுந்த குணங்களாகக் கருதப்படுகின்றன.

உடலை உரமாக்கியும் திறன்களைக் கற்றுக்கொண்டும் தனிமனித முயற்சியாலும் ஆடவர்கள், எப்பாடுபட்டாவது தங்களுக்குள் ஆண்தன்மையை வளர்க்க முயல்கின்றனர்.

அன்புள்ள தந்தையர், அண்ணன்கள், குடும்பப் பெரியவர்கள், நண்பர்கள் ஆகியோர் சூழும்போது ஆண்மை குறித்த பண்புகள் விருட்சம்போல ஆரோக்கியமாக வளரும். ஆனால், சரியான ஆதரவின்றி வளர்பவர்களில் சிலர், இந்தப் பண்புகளை அடைய மூர்க்கமாகவும் பலவந்தமாகவும் நடந்துகொள்ளலாம்.

அப்போது பயம், தயக்கம், பதற்றம், சோகம் போன்றவற்றை நேர்மையாக, நேரடியாக வெளிப்படுத்தும்பட்சத்தில் ஆண்கள் அவற்றைக் கோபமாக வெளிக்காட்டுகின்றனர். இது அவர்களைச் சுற்றியுள்ளவர்களைப் பாதிக்கக்கூடும்.

உதவி நாடாமல் இருப்பதால் ஏற்படும் விளைவுகள்

ஏறக்குறைய ஒரே விகிதங்களில் ஆண்களும் பெண்களும் மனநலப் பாதிப்பை எதிர்கொண்டாலும் பெண்களைக் காட்டிலும் ஆண்கள் குறைந்த அளவிலேயே உதவி நாடுகின்றனர். இதனால் ஏற்படும் விளைவுகள் கடுமையானவை.

மன அழுத்தம், பதற்றம், புகைபிடித்தல், மதுபானம், போதைப்பொருள் உட்கொள்ளுதல் போன்ற பிரச்சினைகள் அதிகமாகின்றன. அத்துடன் உணர்ச்சிகளைப் பொத்திப்பொத்தி கட்டுக்குள் வைப்பதால் மன அழுத்தம், உயிரை மாய்த்துக்கொள்வது போன்றவையும் ஏற்படலாம். அந்தப் பாதிப்பு வெவ்வேறு விதமாக வெளிப்படலாம்.

உலகில் உள்ள 40 விழுக்காட்டு நாடுகளைச் சேர்ந்த 100,000 ஆடவர்களில் 15 பேருக்கும் அதிகமானோர் தங்களது உயிரை மாய்த்துக்கொள்கின்றனர். 1.5 விழுக்காட்டு நாடுகளில் மட்டும் இந்த விகிதம் பெண்களிடம் அதிகமாக உள்ளதாக உலகச் சுகாதார அமைப்பின் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

இருந்தபோதும் ஆண்கள், பெண்களைக் காட்டிலும் மனநலத்தில் அச்சுறுத்தலுக்கு ஆளாகின்றனர் என்ற கருத்தை இந்தக் கட்டுரை முன்வைக்கவில்லை.

மனநலத்தில் பாதிக்கப்பட்டதாக ஆண்களைவிட (12.2 விழுக்காடு) பெண்கள் (17.6 விழுக்காடு) தெரிவித்திருப்பதாக 2023ல் வெளிவந்த சிங்கப்பூரின் தேசிய மக்கள்தொகை சுகாதாரக் கருத்தாய்வு குறிப்பிடுகிறது.

இருந்தாலும், ஆண்களைக் காட்டிலும் தங்களுக்கான ஆதரவைத் தேடுவதில் பெண்கள் அதிக அக்கறை காட்டுவதாக ஆய்வறிக்கையின் புள்ளிவிவரங்கள் குறிப்பிடுகின்றன.

கவலையாக உள்ள காலகட்டங்களில் மனநல ஆலோசகர்களையும் நண்பர்களையும் அதிகம் நாடுவது பெண்களே என்றும் கூறப்பட்டுள்ளது.

விழிப்புணர்வு அதிகரித்தாலும் முன்னேற்றம் தேவை

இளைய தலைமுறையினரிடையே மனநலம் பற்றிய விழிப்புணர்வை சமூக ஊடகங்கள் ஏற்படுத்துவதாக தமிழ் முரசு பேட்டி கண்ட மனநல, வாழ்வியல் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

மனநல இயக்கங்கள் அண்மையில் பெற்றுவரும் கவனத்தால் இளையர்களிடையே விழிப்புணர்வு அதிகரித்துள்ளதை ‘இம்பார்ட்’ இளையர் மனநல அமைப்பின் நிறுவனரும் தலைவருமான நரசிம்மன் திவாசிகமணி, தமிழ் முரசிடம் தெரிவித்தார்.

‘இம்பார்ட்’ இளையர் மனநல அமைப்பின் நிறுவனரும் தலைவருமான நரசிம்மன் திவாசிகமணி.
‘இம்பார்ட்’ இளையர் மனநல அமைப்பின் நிறுவனரும் தலைவருமான நரசிம்மன் திவாசிகமணி. - படம்: இம்பார்ட்

“இளையர் தங்களது உணர்வுகளைப் பற்றி வெளிப்படையாகப் பேசுவதற்கான வாய்ப்புகள் கூடியுள்ளன. ஆனால், வயது முதிர்ந்த ஆடவர்களுக்கு வாய்ப்புகள் அதிகம் தரப்படுவதில்லை.

விழிப்புணர்வு ஏற்படுவதற்கான தளங்களும் அவர்களைப் பொதுவாகச் சேர்வதில்லை என்பதைச் சுட்டிய திரு நரசிம்மன், அத்தகைய ஆண்களுக்கான மனநல விழிப்புணர்வு தொடர்பான முயற்சிகள் அதிகரிக்கப்படவேண்டும்,” என்று கூறினார்.

சம்பாதிப்பவர்கள், காப்பாற்றுபவர்கள் என்ற முறையில் ஆண்கள் சோர்வை உணர்ந்து வருகின்றனர். வேலையிடக் கவலைகளையும் பதற்றங்களையும் வீட்டில் காட்ட இயலாமல் அவை கோபமாக மாறுவதாக திரு நரசிம்மன் கூறினார்.

சிங்கப்பூரில் மனநலம் சார்ந்த இயக்கங்கள் மனநலத்தை ஊக்குவிப்பதால் பள்ளிகளிலும் சமூக ஊடகங்களிலும் மனநலம் பற்றிய கலந்துரையாடல்கள் நடத்தப்படுவதாக மூத்த மனநல ஆலோசகர் கோபால் மஹே தெரிவித்தார்.

மனநலத்தின் முக்கியத்துவம் பற்றி இளம் ஆடவர்கள் அறிந்தாலும் அவர்களும்கூட பாதுகாப்பாகவும் உண்மைத்தன்மையுடனும் உணர்வுகளை வெளிப்படுத்தத் தயங்குவதாக அவர் கூறினார்.

மூத்த மனநல ஆலோசகர்  கோபால் மஹே. 
மூத்த மனநல ஆலோசகர்  கோபால் மஹே.  - படம்: கோபால் மஹே

எங்கிருந்து ‘ஆண்மை’ பெறப்படுகிறது

தமிழ் பேசும் இளையர்களிடையே, ஆண்மையைப் பற்றிய கண்ணோட்டத்தில் திரைப்படத்தின் கதாநாயகர்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் திரு நரசிம்மன் குறிப்பிட்டார்.

“ஆயினும், பல திரைப்படங்களில் இடம்பெறும் திரை நாயகர்களின் கதாபாத்திரங்கள், குணத்தளவில் முழுமையைப் பெற்றிருக்காது. அவர்களது முன்கோபம், ஆவேசம், வீரதீரம் போன்ற வெளிப்பாடுகளே திரைப்படக் கதைகளில் மேலோங்குகின்றன,” என்று அவர் கூறினார்.

இளையர்கள் தேர்ந்தெடுக்கும் நாயகர்களிலிருந்து அவர்கள் பலவற்றைக் கற்பதாக திரு நரசிம்மன் சுட்டினார்.

“காதல் தோல்வி ஏற்படும்போது இளையர்கள் தங்கள் உயிரையே மாய்த்துக்கொள்கின்றனர். அல்லது, தங்களை நிராகரித்தவர்களை விடாது பின்தொடர்கின்றனர். மழை, வெயில் பாராமல் பெண்களின் வீட்டுக்கு வெளியே நின்று தங்கள் காதலை மூர்க்கத்தனமாக நிரூபிக்கின்றனர்,” என்றார் அவர்.

தன்னை நிராகரித்த முன்னாள் காதலிக்காக இரவு முழுவதும் வீட்டுக்கருகே நின்று தங்கள் காதலை நிரூபிக்க இளையர்கள் முயன்ற சம்பவங்கள் நடந்துள்ளதையும் திரு நரசிம்மன் சுட்டினார். சிங்கப்பூரில் இந்திய இளம் ஆடவர்கள் சிலர் இத்தகைய செயல்களில் ஈடுபடுவதை அவர் சுட்டினார்.

“இந்த யோசனை இவர்களுக்குத் திரைப்படங்களிலிருந்து வருகின்றன. பெண்ணைப் புரிந்துகொள்ளாமல் அவரை அச்சுறுத்தும் செயல்களாக இவை உள்ளன. இது ஓரிரு சம்பவங்கள் சார்ந்த விவகாரம் அன்று. இதுகுறித்து இந்திய சமூகம் கூர்ந்து கவனிக்கவேண்டிய தேவை உள்ளது,” என்று அவர் கூறினார்.

மேலும், தோல்வியைச் சந்தித்த ஆண்கள் சோக உணர்வுடன் மதுபானத்தில் மூழ்குவதைச் சித்திரிக்கும் பாடல் காட்சிகளையும் திரு நரசிம்மன் சுட்டினார்.

ஆண்மை மீதான தங்கள் பார்வை என்ன என்பதை ஆண்கள் சற்று யோசித்துப் பார்ப்பது நல்லது என்றார் விழிப்புணர்வு பயிற்சியாளர் கு. கதிரேசன்.

“கலாசாரம், சமூகம், தலைமுறை, அறிவியல், சமயம் எனப் பல்வேறு இடங்களிலிருந்து ஆண்மைக்குரிய குணங்கள் என்ன என்ற புரிதலைத் திரட்டுகிறோம். அதனை விழிப்புணர்வுடன் நாம் புரிந்துகொண்டோமானால் ஆண்மைக்கான நம் வரையறைகளைச் சரியாக வகுத்துக்கொள்ளலாம்,” என்று திரு கதிரேசன் கூறினார்.

விழிப்புணர்வு ஆலோசகர் கு.கதிரேசன்.
விழிப்புணர்வு ஆலோசகர் கு.கதிரேசன். - படம்: கு.கதிரேசன்

நிலைமையைச் சீர்செய்ய வழிகள்

அறிவுரை கூற முற்படும் ஆடவர்கள், தங்களது சொந்த அனுபவத்தை மேற்கோள் காட்டிப் பேசுவது முக்கியம் என்று கூறினார் திரு நரசிம்மன்.

உணர்ச்சிகளை எப்படிச் சரியான முறையில் வெளிப்படுத்துவது என்பதற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்வது முக்கியம் என்றும் அவர் கூறினார்.

“ஆண்கள் அழ ஆரம்பித்தால் அதனை நிறுத்தவும் ஏளனப்படுத்தவும் கூடாது. ஆண்கள் அழமாட்டார்கள் என்ற சிந்தனையின் தீய விளைவுகளை சமூகமாக நாம் புரிந்துகொள்ளவேண்டும்,” என்றார் திரு நரசிம்மன்.

“பிறரைத் துன்புறுத்தும், அச்சுறுத்தும் ‘நச்சு ஆண்மை’க்குப் பதிலாக ஆண் தன்மையை ஏற்றுக்கொண்டு, ஆடவர் என்பவர் எப்படித் தங்கள் சொந்த உணர்வுகளை அரவணைத்து நல்ல முறையில் வெளிப்படுத்துவது என்பது குறித்து இயன்றளவு ஆலோசனை பெறவேண்டும்.

“சிறுவர்களையும் இளையர்களையும் வெளிப்படையான கலந்துரையாடல்களில் ஈடுபட ஊக்குவிப்பதன் மூலம் தவறான சிந்தனைகளை முறியடிக்க இயலும்,” என்றார் திரு கோபால்.

குடும்பங்கள், வேலை இடங்கள், பள்ளிகள், சமய அமைப்புகள், ஆர்வலர் குழுக்கள் ஆகியவற்றில் உள்ளோர் தங்கள் வாழ்க்கையில் கடந்துவந்த சவால்களைப் பற்றி பிற ஆடவர்களுடன் பகிர்ந்துகொள்வதன்மூலம் பெருமளவு உதவலாம் என்றும் அவர் கூறினார்.

ஆணவத்தை விட்டொழிப்பது முதல் படி என்று கூறிய திரு நரசிம்மன், மன்னிப்பு கேட்க சிலர் விரும்பாத அளவுக்கு ஆணவம் நிறைந்திருப்பதைச் சுட்டினார்.

“நான் தந்தை. என் மகனிடம் எப்படி மன்னிப்பு கேட்பது. சிலர் அன்புகாட்ட விரும்புவதில்லை. அது ஆண்மைக்குப் புறம்பான ஒன்று என நினைக்கிறார்கள். இந்த எண்ணப்போக்குகள் திருத்தப்படவேண்டியவை,” என்று அவர் கூறினார்.

உணர்வுகளை வெளிப்படுத்திப் பேசுவதே வலிமை என்பதை ஆண்களும் பெண்களும் உணரவேண்டும். அதனைப் பிறருக்கும் விளக்கிச் சொல்லவேண்டும் என்றும் திரு கோபால் கூறினார்.

“உறவுகளும் ஆண்மைக்கு அடிக்கல் ஆகும். உண்மைத்தன்மை, பிறருக்கான மரியாதை, நிதானம் ஆகியவற்றுடன் கூடிய ஆண்மை ஆக்ககரமானது,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்