வேகமாக இயங்கும் உலகில் சிறிது நேரம் இளைப்பாறக்கூட பலருக்கு நேரம் கிடைப்பதில்லை. பலர் நேரம் கிடைக்கும்போதெல்லாம் அவர்களுக்குப் பிடித்த நடவடிக்கைகளில் ஈடுபடுவர்.
மனவுளைச்சல் ஏற்படும்போது தியானம் செய்வது, புத்தகம் படிப்பது என இருப்பர். ஆனால், ஒரு சிலருக்கு மனவுளைச்சலிலிருந்து விடுபடுவதற்கான சிகிச்சையறையாகக் காணப்படுகிறது சமையலறை.
ஒரு காலத்தில் சமைப்பது பெரிய வீட்டு வேலையாகக் கருதப்பட்டது. இன்று அது சிலருக்கு சிகிச்சை முறையாக மாறிவிட்டது. ஆறுதல், கட்டுப்பாட்டு உணர்வை அளிக்கிறது சமையற்கலை.
வெங்காயம் நறுக்குவதும் மாவு பிசைவதும் பார்ப்பதற்கு ஆறுதல் தருவதுபோலத் தோன்றாது. இருப்பினும், உணவு சமைக்கும்போது ஐம்புலன்களும் ஈடுபடுவதால் அது ஒருவகை நிம்மதி தருகிறது. ஆலிவ் எண்ணெய்யில் பூண்டு சுரக்கும் நறுமணம், வெட்டும் பலகையில் கத்தியின் ஒலி அல்லது குழம்பின் மென்மையான குமிழி ஆகியவை அமைதியான விளைவை ஏற்படுத்துகின்றன.
“நீண்டநேரம் வேலை செய்துவிட்டு வீட்டிற்குத் திரும்பும்போது எனக்கு சமையல்தான் மனநிறைவு அளிக்கிறது,” என்றார் மனிதவளத் துறையில் பணியாற்றும் திவ்யபிரியா, 36.
சிகிச்சையாளர்களும் மனநல நிபுணர்களும் சமையற்கலை ஒருவகை சிகிச்சை என்றே கூறுகின்றனர்.
மனச்சோர்வு, பதற்றம் குறித்த அறிகுறிகளைக் குறைக்க சமையல் உதவுவதாக நம்பப்படுகிறது.
ஒரு செய்முறையைப் பின்பற்றுவது, பொருள்களை அளவிடுவது, உணவைத் தயாரித்து முடிப்பது போன்றவை மனிதர்களுக்கு சாதனை உணர்வைத் தருகிறது.
தொடர்புடைய செய்திகள்
சமையற்கலையில் ஈடுபடும்போது ஒருவரின் நினைவாற்றலும் சீராவதாக நம்பப்படுகிறது. மாறாக, சமூக ஊடகத் தளங்கள், கைப்பேசிகள் போன்றவற்றில் ஈடுபடும்போது ஒருவரின் கவனம் சிதைக்கப்படுகிறது.
சமையல் செய்யும்போது முழுக் கவனமும் அதில்தான் இருக்கும். கைப்பேசியைப் பயன்படுத்திக்கொண்டு யாராலும் கவனத்துடன் சமைக்க முடியாது.
இவ்வாறு கவனம் செலுத்தும்போது பலர் மனத்தில் ஏற்படும் குழப்பங்களும் பதற்றங்களும் விரைவில் மறைந்துவிடும்.
வேறு சிலருக்கு சமையலில் ஈடுபடுவது பிறருடன் இணைவதற்கான ஒரு தளமாகவும் அமைகிறது. பிடித்தவர்களுக்குச் சமைத்து தருவது, அவர்களுக்குப் பிடித்த உணவை செய்வது ஆகியவை அன்பு மிகுந்த செயல்களாகவும் கருதப்படுகின்றன.

