மார்கழியில் இன்னிசை மழைபொழிந்த குழற்குழு

3 mins read
6a8e012e-eb27-4ce9-95d5-c931e11760bb
பாஸ்கர் ஆர்ட்ஸ் கலைக்கழக நடனமணிகள், மயிலாப்பூரிலுள்ள பாரதிய வித்யா பவன் அரங்கில் நிகழ்ச்சி படைத்தனர்.  - படம்: பாஸ்கர் ஆர்ட்ஸ் கலைக்கழகம்

செவியில் தேனாகப் பாய்ந்த இனிய குழலோசை, அதனுடன் கலந்த நளின நடன அசைவுகளோடு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது ‘வேணு நாட்டிய லகரி’ நிகழ்ச்சி.  

தேசிய கலைகள் மன்றம், பாஸ்கர் ஆர்ஸ்ட் கலைப்பள்ளி ஆகியவற்றின் ஆதரவுடன் படைக்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் 2022ல் அமைக்கப்பட்ட புல்லாங்குழல் குழு  இடம்பெற்றது.

பாஸ்கர் ஆர்ஸ்ட் பள்ளியின் இணை நிறுவனரான அமரர் சாந்தா பாஸ்கரின் யோசனையில் உருவான அந்தக் குழுவில் அரங்கேற்றம் முடித்த குழலிசைக் கலைஞர்கள் இடம்பெற்றுள்ளனர்.  புகழ்பெற்ற குழலிசைக் கலைஞர் கானவினோதன் ரத்னம் வழிநடத்தும் இந்தக் குழு, முதன்முறையாக நடனக்குழுவுடன் இணைந்து நிகழ்ச்சி படைத்ததுள்ளது. குழலிசைக் கலைஞர்கள் கிட்டத்தட்ட 10 பேர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.  

பகுதி நேரமாக இசை கற்கும் இளையர்கள், இந்நிகழ்ச்சிக்காகக் கடினமான பாடல்களைப் பயிற்சி செய்து நேர்த்தியாக வாசித்தனர். இசைக்கு ஈடாக இளம் கலைஞர்கள்  நடனமாடினர். 

குறிப்பாக, ஊத்துக்காடு வேங்கட சுப்பையரின் ‘காளிங்க நர்த்தனம்’ என்ற தில்லானாவின் முழு வடிவத்தை அந்த மாணவர்கள் மேடையேற்றினர். 

கம்பீர நாட்டை ராகத்தில் இயற்றப்பட்ட அந்தப் பாடல், ராகத்தின் பெயருக்கு ஏற்ற வகையில் மிடுக்குடன் இசைக்கப்படவேண்டியதாகும்.

கலாசாரப் பதக்கம் பெற்றுள்ள கானவினோதன் ரத்னத்தின் வழிநடத்துதலில் குழற்குழு மயிலாப்பூரிலுள்ள பாரதிய  வித்யா பவனில் இன்னிசை நிகழ்ச்சி படைத்தது.
கலாசாரப் பதக்கம் பெற்றுள்ள கானவினோதன் ரத்னத்தின் வழிநடத்துதலில் குழற்குழு மயிலாப்பூரிலுள்ள பாரதிய  வித்யா பவனில் இன்னிசை நிகழ்ச்சி படைத்தது. - படம்: பாஸ்கர் ஆர்ட்ஸ் கலைக்கழகம்

கண்ணனும் பெருநாகமான காளிங்கனும் எதிர் எதிரே ஒருவரையொருவர் உற்று விழித்தவாறு வட்டமிடுவதுபோல மிருதங்கமும் ஜதியும் ஒன்றுக்கொன்று ஈடுகொடுத்து அனைவரையும் ஈர்த்தது. 

அரவம் சீறும் சத்தமும் கிருஷ்ணரின் சலங்கை ஒலியும் பாடல் வரிகளிலும் தாளக்கட்டுகளிலும் எதிரொலிப்பதாக இசை மேதைகள் கூறுவர்.

எதுகை மோனை நிறைந்த பாடல் வரிகள் என்பதால் நாக்குப் பிறழாத வகையில் பாடவேண்டியது கட்டாயம் என்றார் பாஸ்கர் ஆர்ட்ஸ் கலைப்பள்ளி நடன வடிவமைப்பாளர் திருவாட்டி மீனாக்‌ஷி பாஸ்கர். 

இலங்கையின் கொழும்பு, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களிலும் பின்னர் சென்னையிலும் அந்தக் குழு மேடையேறியது. போருக்குப் பிறகு அங்கு சென்ற முதல் இசைக்குழுவினர் தாங்கள்தான் என்று யாழ்ப்பாணத்தில் தங்களுக்குச் சொல்லப்பட்டதாக டாக்டர் கானவினோதன் கூறினார். 

அச்சுவேலியில் ஆதரவற்றோர்க்கும் வசதி இல்லாதோருக்குமான பள்ளி ஒன்றில் புதிதாகத் திறக்கப்பட்ட கலையரங்கில் முதன்முதலாக மேடையேறிய படைப்பை  கிராமத்தினர் அனைவரும் கண்டு களித்தனர். 

“மொத்தம் 800 பேர் அரங்கில் குழுமினர். அங்குள்ள பிள்ளைகளுக்குச் சிங்கப்பூரிலிருந்து எடுத்துச்சென்ற புத்தகங்களை நன்கொடையாகத் தந்தோம். இசைக்கருவிகளையும் தந்தோம். வண்ணம் தீட்டும் நூல்களை ‘கிருஷ்ணா நம் வழிகாட்டி’ அமைப்பு வழங்கியது,” என்று டாக்டர் கானவினோதன் கூறினார். 

பாஸ்கர் ஆர்ட்ஸ் கலைக்கழகம்  வழங்கிய இசை, நடன நிகழ்ச்சி அச்சுவேலி மத்தியக் கல்லூரியில் டிசம்பர் 14 நடைபெற்றது.
பாஸ்கர் ஆர்ட்ஸ் கலைக்கழகம்  வழங்கிய இசை, நடன நிகழ்ச்சி அச்சுவேலி மத்தியக் கல்லூரியில் டிசம்பர் 14 நடைபெற்றது. - படம்: லலீசன்

சென்னையின் மயிலாப்பூர் பகுதியிலுள்ள பாரதி வித்யா பவன் மண்டபத்தில் டிசம்பர் 18ல் அக்குழு மீண்டும் மேடையேறியது. 

அங்குத் தம் தாயார் நடனம் கற்ற இடத்திற்கு அருகே நிகழ்ச்சி மண்டபம் அமைந்திருந்ததைத் திருவாட்டி மீனாக்‌ஷி உருக்கத்துடன் குறிப்பிட்டார்.

இந்தியாவுக்கான சிங்கப்பூரின் துணைத் தூதர் எட்கர் பாங் உள்ளிட்ட தூதரக அதிகாரிகள் கலந்துகொண்ட அந்நிகழ்ச்சியில் புகழ்பெற்ற பாடகர் ஓ எஸ் அருண், குழலிசைக் கலைஞர் பி வி பாலசாய், இசையமைப்பாளர் ராதா விஜயன் முதலியோரும் கலந்துகொண்டனர்.  

“நிகழ்ச்சி இலவசமாகப் படைக்கப்பட்டது. எங்கள் மாணவர்களின் கடின உழைப்பு அவர்களுக்குப் பாராட்டுகளை ஈட்டித் தந்தது,” என்று டாக்டர் கானவினோதன் கூறினார். 

‘காளிங்க நர்த்தனா’ பாடலைத் தனிச்சிறப்புடன் பல்வேறு பெரிய மேடைகளில் படைத்திட விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்