கலைஞனின் வாழ்வை எடுத்துக்காட்டும் நாட்டிய நாடகம்

1 mins read
c6e12c0c-7fee-40db-8e2f-ed72b51e7b4a
இந்நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ள பத்துக் கலைஞர்கள். - படம்: லிஜே‌ஷ்

ஒரு நிகழ்த்துக் கலைஞர் மேடையில் அடையும் பெருமை, மரியாதை, அவரே தனி வாழ்வில் அனுபவிக்கும் புறக்கணிப்பு என இரு வேறு வாழ்வை உணர்வுபூர்வமாகச் சொல்லும் ‘ஃபசாட்’ (FAÇADE - The Two Parallel Lives) எனும் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

‘பாஸ்கர் ஆர்ட்ஸ் அகாடமி’ சார்பில் செப்டம்பர் 14ஆம் தேதி விக்டோரியா அரங்கில் நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சியில் பத்து உள்ளூர்க் கலைஞர்கள் பங்கேற்று நடனமாட உள்ளனர்.

2017ஆம் ஆண்டு நீவின் ஹெர்ஷல் எனும் உள்ளூர்க் கலைஞரின் கருத்தாக்கம், நடன அமைப்பில் சிங்கப்பூரிலும் சென்னையிலும் நடைபெற்ற இந்நிகழ்ச்சி, ஏழு ஆண்டுகளுக்குப் பின் புதுப்பொலிவுடன் மீண்டும் அரங்கேற்றப்பட உள்ளது.

கடந்த முறை தனி ஒருவரால் நிகழ்த்தப்பட்ட இந்நாட்டிய நாடகம், தற்போது பத்து கலைஞர்களுடன் மேலும் சிறப்பாக நடத்தப்பட உள்ளதாகக் கூறினார் ‘பாஸ்கர் ஆர்ட்ஸ் அகாடமி’ நிறுவன மேலாளர் தவ ராணி.

தனிப்படைப்பாக முதன்முறை திரையிடப்பட்டபோது பெரும் வரவேற்பைப் பெற்ற இந்நாட்டிய நாடகத்தை, அதன் சுயத்தை இழக்காமல் ஒரு குழுப் படைப்பாக மாற்றியமைத்துள்ளனர் குழுவினர்.

மேலும், படத்தொகுப்பும் காணொளி விளக்கக் காட்சிகளும் பார்வையாளர்களின் அனுபவத்தை மேம்படுத்தும் வண்ணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இந்நாட்டிய நாடகத்திற்கு இசையும் வலுச்சேர்க்கும் என்றனர் குழுவினர்.

“சமகாலத்தில் அனைவராலும் தொடர்புபடுத்திக் கொள்ளக்கூடிய வகையில் அமைந்த ஒரு முழுமையான நாட்டிய நாடகத்தை ரசிக்க விரும்பும் யாவருக்கும் இந்நிகழ்ச்சி விருந்தாக அமையும் என நம்புகிறோம்,” என்றார் தவ ராணி.

நுழைவுச்சீட்டுகளை இந்த இணைப்பில் பெறலாம்: https://www.sistic.com.sg/events/facade0924

குறிப்புச் சொற்கள்