கடற்கரை கனவுகள்: செந்தோசா தீவுக்கு ஓர் இனிய பயணம்

2 mins read
868323f2-4984-417b-99bd-d14635f1b57e
2.3 கிலோமீட்டர் நீளமுள்ள மவுண்ட் இம்பியா இயற்கைப் பாதையிலிருக்கும் அருவிக்குமுன் புகைப்படம் எடுத்துக்கொண்டோம். - படம்: த. கவி

நாட்டின் பிரதான சுற்றுலாத் தலங்களுள் ஒன்றாக மட்டுமின்றி, உள்ளூர் மக்களுக்கும் வெளிநாட்டவர்களுக்கும் வாழ்வில் ஒருமுறையாவது சென்று அனுபவிக்க வேண்டிய இடமாகவும் திகழ்கிறது செந்தோசா தீவு.

இளம் வயதில் குடும்பத்தோடு கடற்கரையில் அமர்ந்து உரையாடிக்கொண்டிருந்த மகிழ்ச்சியான நினைவுகள் இன்றும் எனக்குத் தெளிவாக நினைவிருக்கின்றன.

பல்கலைக்கழகத்தின் முதல் ஆண்டில் அதே கடற்கரையில் நடந்த அறிமுக முகாமில் பங்கேற்றேன். பல ஆண்டுகள் கழித்து மீண்டும் அதே இடத்தில், என் நெருங்கிய தோழி நூர் ஷபீகாவுடன் ஓர் ஆடம்பரமான விடுமுறைக்காக நான் சொந்தமாக ஈட்டிய பணத்தைச் செலவிட்டேன்.

இவ்வாறு என் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் முக்கியத் தருணங்களைக் கொண்டாடவும் நினைவுகூரவும் செந்தோசா சிறந்தவோர் இடமாக இருந்து வந்துள்ளது.

நான் வளர்ந்ததுபோலவே இத்தீவும் வளர்ந்துள்ளது.

யூனிவர்சல் ஸ்டூடியோஸ் சிங்கப்பூர், ரிசார்ட்ஸ் வேர்ல்ட் செந்தோசா, மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகம் என காலப்போக்கில் இங்கு உருவாகியுள்ள பெரும் சுற்றுலாத் தலங்கள் இதற்கு ஆதாரம்.

செந்தோசாவுக்கு மேற்கொள்ளப்படும் ஒரு நாள் பயணம் இன்று விலையுயர்ந்ததாக மாறிவிட்டது எனத் தோன்றினாலும், நிதர்சனத்தில் பல இலவச நடவடிக்கைகளை எளிதில் அனுபவிக்கும் வாய்ப்பும் உண்டு.

செந்தோசாவின் இணையத்தளத்தின் இலவச நடவடிக்கைகள் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு, நானும் என் சக ஊழியர் பிரியா வாசுதேவனும் செந்தோசா தீவிற்கு சுற்றுலா சென்றோம்.

தீவின் இம்பியா நிலையத்தில் எங்கள் பயணம் தொடங்கியது. செந்தோசா தீவுக்குள் ரயில் பயணம் இலவசம் என்பதால், ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு சுலபமாகச் செல்ல முடிந்தது.

‘செந்தோசா நேச்சர் டிஸ்கவரி’ இலவசக் காட்சிக்கூடம்.
‘செந்தோசா நேச்சர் டிஸ்கவரி’ இலவசக் காட்சிக்கூடம். - படம்: த. கவி

இம்பியா நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள ‘செந்தோசா நேச்சர் டிஸ்கவரி’ என்ற இலவசக் காட்சிக்கூடம், தீவில் வாழும் விலங்குகளையும் தாவரங்களையும் அறிமுகப்படுத்துகிறது.

அணில்கள் மரங்களுக்கு இடையே தாவிச் செல்லும் காட்சியைப் பார்க்க முடிந்தது. குரங்குகள், சிறிய பறவைகள் போன்ற உயிரினங்களையும் கண்டுகளிக்கும் வாய்ப்பும் உண்டு.

இரண்டாம் உலகப் போர் நடந்த காலகட்டத்தில் அமைக்கப்பட்ட பதுங்கு குழியின் மாதிரியாக உருவாக்கப்பட்ட ‘ஸ்விஃப்ட்லெட் பங்கர்’ இக்கண்காட்சியின் சிறப்பம்சம். இன்று 250க்கும் மேற்பட்ட பறவைகளின் கூடுகளை உள்ளடக்கி, பறவைகளின் குடியிருப்பாக விளங்குகிறது இப்பதுங்கு குழி.

மங்கலான ஒளியில், பறவைகளின் கீச்சலை கேட்டவாறு இங்கு நடந்து செல்லும்போது பார்வையாளர்களை ஓர் ஆய்வாளராகவே உருமாற்றுகிறது இவ்வனுபவம்.

அழிவின் விளிம்பிலுள்ள இப்பறவைகளைப் பாதுகாக்கவும் ஆய்வு செய்யவும் செந்தோசா நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கண்காட்சியின் மறுபுறத்தில், மவுண்ட் இம்பியா இயற்கைப் பாதை தொடங்குகிறது. 2.3 கிலோமீட்டர் நீளமுள்ள இப்பாதை, மரத்தடியில் அமைதியான நடைப்பயணத்தையும் பசுமைக் காட்சிகளையும் வழங்கியது.

அதன்பின், 11 மாடி உயரமுள்ள ‘ஃபோர்ட் சிலோசோ ஸ்கைவாக்’ பாலம் வழியாக கடலையும் சிங்கப்பூரின் அழகையும் ரசித்தோம்.

நாளின் இறுதியில், செந்தோசாவின் இலவசப் பேருந்துச் சேவைவழி பலவான் கடற்கரையைச் சென்றடைந்தோம்.

செந்தோசா தீவின் அமைதியான கடற்கரை.
செந்தோசா தீவின் அமைதியான கடற்கரை. - படம்: த. கவி

சூரியன் மெல்ல மறைய, மணலில் அமர்ந்த வண்ணம் வானம் ஆரஞ்சு நிறத்திலிருந்து ஊதா நிறத்திற்கு மாறும் காட்சியை ரசித்த அத்தருணம், குடும்பமும் நண்பர்களும் சுற்றியிருந்த என் இளமை பருவத்தை மீண்டும் நினைவூட்டியது.

குறிப்புச் சொற்கள்