தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பிளாஸ்டிக் பொருள்களைச் சிதைக்கும் புழுவில் உள்ள நுண்கிருமி

2 mins read
02a3b9bb-6796-490e-8f07-907e71d11fc6
பிளாஸ்டிக் பொருள்களைச் செரிக்கும் ஆற்றல் கொண்டவை ஸொபோபாஸ் அட்ராட்டஸ் புழுக்கள். அவற்றின் குடலில் உள்ள நுண்கிருமி பிளாஸ்டிக்கைச் சிதைக்கிறது. - படம்: பிக்சாபே

பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்க சிங்கப்பூரில் பல முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. அப்படி ஒரு முயற்சியாக, பிளாஸ்டிக் பொருள்களை வேகமாகச் சிதைக்கும் ஆற்றல்கொண்ட நுண்கிருமிகளை நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

அதிகமாகவும் பொதுவாகவும் மூன்று பிளாஸ்டிக் வகைகள் பயன்படுத்தப்படுகின்றன. ஒன்று, மிகவும் அடர்த்தியான பாலிஎத்தலீன் (High-density polyethylene). மற்றொன்று, பாலிபிரொப்பலீன் (Polypropylene). இறுதியாக, பாலிஸ்டிரீன் (Polystyrene).

இந்த மூன்று பிளாஸ்டிக் வகைகளையும் ஸொபொபாஸ் அட்ராட்டஸ் (Zophobas atratus) என்ற வகை புழுக்களுக்கு உணவாகக் கொடுத்தனர் ஆய்வாளர்கள். அந்தப் புழுக்கள் பிளாஸ்டிக்கைச் செரிக்கும் ஆற்றல் கொண்டவை என்பது ஆய்வில் தெரியவந்தது.

அதற்குக் காரணம், பிளாஸ்டிக்கைச் சிதைக்கும் நுண்கிருமிகள் ஸொபொபாஸ் அட்ராட்டஸ் புழுக்களின் குடலில் உள்ளன. அந்தக் கிருமிகள், பிளாஸ்டிக்கை மட்டும் உண்டு உயிர்வாழ புழுக்களுக்கு உதவுகின்றன.

பிளாஸ்டிக்கை உண்ட புழுக்களின் குடலிலிருந்து நுண்கிருமிகளை ஆய்வாளர்கள் பிரித்தெடுத்துச் சோதித்தனர். அந்தக் கிருமிகளுக்கு ஊட்டச்சத்து போன்றவற்றைக் கொடுத்து புழுவின் குடலில் உள்ளதைப் போன்ற நுண்கிருமியை ஆய்வாளர்கள் உருவாக்கினர்.

இருப்பினும், புழுக்களின் குறைவான எண்ணிக்கை, மக்காத சில கடினமான பிளாஸ்டிக் வகைகள் போன்றவற்றால் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் கணிசமாகக் குறைப்பது இப்போதைக்குச் சிரமம் என்றார் முதுநிலை ஆய்வாளர் சக்சியம் பரோலியா, 32.

“தற்போது பிளாஸ்டிக்கைச் சிதைப்பதற்கான வழிகளைப் புரிந்துகொள்வதுதான் எங்கள் குறிக்கோள்,” என்றார் அவர்.

ஒருமுறை பயன்படுத்திய பின் வீசப்படும் பிளாஸ்டிக் பொருள்களை அதிகம் பயன்படுத்தும் நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று.

சென்ற ஆண்டு ஒரு தனிநபர் 87 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை ஏற்படுத்தியதாக மதிப்பிடப்பட்டது.

“முறையான ஆய்வுமூலம் பிளாஸ்டிக்கைச் சிதைப்பதற்கான செயற்கை நுண்கிருமிகளை உருவாக்க முடியும். எப்படியும் ஐந்திலிருந்து 10 ஆண்டுகளுக்குள் அதை உருவாக்க முயல்கிறோம்,” என்றார் திரு சக்சியம்.

கடந்த சில ஆண்டுகளில் பேரளவிலான பிளாஸ்டிக் கழிவுகளை உயிரியல் முறையில் சிதைக்கும் வழிமுறைகள் மேம்பட்டுள்ளன. 

அத்தகைய உயிரியல் முறைகள் பிளாஸ்டிக் பொருள்களுக்கு மறுவடிவம் கொடுக்க உதவுகின்றன. அதன்மூலம் பசுமையான சுற்றுச்சூழலை ஏற்படுத்த முடியும் என்று நம்புகிறார் திரு சக்சியம்.

குறிப்புச் சொற்கள்