சிங்கப்பூர்த் தமிழர்களின் மொழி, இசை உணர்வு வியப்பளிக்கிறது: சின்மயி

3 mins read
c12c613b-048c-4925-a6cc-b489334e612c
‘சுவாரே’ நிறுவனம் வழிநடத்தும் ‘முத்தமழை’ இசை நிகழ்ச்சியில் (இடமிருந்து) ஸ்ரீகாந்த் ஹரிஹரன், சின்மயி ஸ்ரீபாதா, ஆனந்த் அரவிந்தாக்‌‌ஷன். - படம்: த. கவி

மொழிமீதும் இசை உள்ளிட்ட பாரம்பரியக் கலைகள்மீதும் சிங்கப்பூர்த் தமிழர்களுக்குள்ள ஆர்வமும் அர்ப்பணிப்பும் தம்மை எப்போதும் வியப்பில் ஆழ்த்துவதாகச் சொல்கிறார் பாடகி சின்மயி ஸ்ரீபாதா.

நிலம் வெவ்வேறாக இருந்தாலும், மொழிமீதான பற்றும் இசையை முறையாகக் கற்க வேண்டும் எனும் உணர்வும் உள்ளூர்க் கலைஞர்களிடத்தில் மேலோங்கியிருப்பதாக அவர் தெரிவித்தார்.

“சிங்கப்பூர் குறித்தும் திரு லீ குவான் யூ குறித்தும் நிறைய படித்திருக்கிறேன்,” என்ற சின்மயி, சிங்கப்பூரின் பல்லினப் பண்பாடும் அவர்களுக்கிடையிலான புரிந்துணர்வும் அதன் சிறப்பம்சம் என்றார்.

‘சுவாரே’ நிறுவனம் வழிநடத்தும் ‘முத்தமழை’ இசை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காகச் சிங்கப்பூருக்கு வருகையளித்துள்ள சின்மயி, உள்ளூர் இசைக்கலைஞர்கள், சிங்கப்பூர் ரசிகர்களின் தன்மை, தமது இசைப்பயணம் போன்றவை குறித்து தமிழ் முரசிடம் பகிர்ந்துகொண்டார்.

உணவு, ஒன்றுகூடலுடன் கூடிய மாறுபட்ட நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ள அவர், “உள்ளூர்க் கலைஞர்கள் சிலர் பாடுவதைக் கேட்க நேரிட்டது. அவர்களின் திறமை வியக்க வைக்கிறது. அவர்களுக்கும் என்னைப் போலக் கற்றல் வாய்ப்பும், திறமையை வெளியுலகிற்கு வெளிச்சம்போட்டுக் காட்டும் மேடையும் கிடைத்தால் அவர்களும் உலக அளவில் புகழ்பெறுவர் என்பதில் ஐயமில்லை,” என்றார் சின்மயி.

சிங்கப்பூரில் மட்டுமல்லாமல், இந்தியாவிலும் திறமையான கலைஞர்கள் பலர் வெளியுலகிற்குத் தெரிவதற்குக் காத்திருக்க வேண்டியுள்ளதாகவும் அவர் சொன்னார்.

பழைய பாடல்கள் பலவற்றைச் சிறப்பாகப் பாடும் மாலதி லக்‌ஷ்மணைக் குறிப்பிட்டுப் பேசிய சின்மயி, “அவரது திறமை அலாதியானது. ஆனால், ‘மன்மத ராசா’ பாடலைப் பாடும்வரை அவரைப் பலரும் அறிந்திருக்கவில்லை. வாய்ப்பும் சரியான தருணமும்தான் காரணம்,” என்றார்.

“எனது இசைப்பயணத்தில் ‘96’ திரைப்படத்தில் பாடியது மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என நினைத்த வேளையில் எனக்குத் தடை விதிக்கப்பட்டது. தற்போது முத்தமழை வந்தபிறகு, நான் பாடிய பல பாடல்கள் பிரபலமடைந்து வருகின்றன,” என்றார் அவர்.

தமது இசைப்பயணத்தை ‘முத்தமழைக்கு’ முன், பின் எனப் பிரித்துவிடலாம் எனக் குறிப்பிட்ட அவர், “நான் பாடிய பல பாடல்களைப் பாடியது நான்தான் என ரசிகர்கள் பலருக்குத் தெரியாமல் போனது ஒருவிதத்தில் நல்லது. ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத பலவிதமான பாடல்களைப் பாடியிருப்பதாக நினைக்கிறேன்,” என்றார்.

தமிழ் மட்டுமன்றி, மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி மொழிகளில் பாடும் சின்மயி, அந்த மொழிகளில் பேச, எழுத, படிக்கத் தெரிந்தவர்.

“இசைக்கு உணர்ச்சிகள் மிகவும் முக்கியம். ஒவ்வொரு சொல்லுக்கும் அர்த்தமும் ஆழமும் உண்டு. ஒரு மொழியில் பாடும்போது அதே மொழியில் எழுதி வைத்து, படித்துப் பாடுவேன். அதே மொழியில் சிந்திப்பேன். அது எனது தனித்துவமாகவும் அமைவதாக நம்புகிறேன்,” என்று சின்மயி குறிப்பிட்டார்.

தம்மைச் சுற்றி எழுந்த பல்வேறு பிரச்சினைகளைக் குறிப்பிட்ட அவர், “நான் யார் என்பது எனது இசை, பாடல் ஆகியவற்றில் வெளிப்படுவதில்லை. எனது இசைப்பயணம் வேறு, சொந்த கருத்துகள் வேறு. ஒன்றில் மற்றொன்று தாக்கம் ஏற்படுத்துவதில்லை,” என்றார்.

கலைஞர்கள் மனிதநேயத்தைத் தொடர்ந்து தூக்கிப்பிடிப்பதாகக் கூறும் சின்மயி, “இந்த உலகில் கொண்டாடப்படுவதற்கு இடம் நிறைய இருக்கிறது. கலைஞர்கள் அனைவரும் கொண்டாடப்பட வேண்டும் என நினைக்கிறேன்,” என்றும் தமது விருப்பத்தை வெளிப்படுத்தினார்.

தாம் பங்கேற்கவுள்ள நிகழ்ச்சியைக் குறிப்பிட்டுப் பேசிய அவர், பெண்கள் வழிநடத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்பது, குறிப்பாக புதுமையான அனுபவமாகத் திகழும் நிகழ்ச்சியில் பங்களிப்பது மனமகிழ்ச்சி தருவதாகச் சொன்னார்.

“பெண்களின் முன்னேற்றத்திற்காக என்னால் இயன்ற பங்களிப்பை வழங்குவதில் மகிழ்ச்சி,” என்கிறார் சின்மயி.

குறிப்புச் சொற்கள்