ஆழ்ந்த உறக்கத்தின்போது மூளையில் உருவாகும் மெதுவான, ஒத்திசைவு கொண்ட ‘டெல்டா’ மின் அலைவரிசை நினைவுகளின் உருவாக்கத்தை ஆதரிக்கின்றன.
ஆய்வு ஒன்றின்படி, மூளையின் நீண்டகால நினைவாற்றலுக்கான ‘நியோகார்ட்டெக்ஸ்’ (neocortex) பகுதியின் தகவல் சேர்க்கும் ஆற்றலை இந்த மெதுவான மின்னலைகள் மேம்படுத்துகின்றன.
நினைவாற்றல் சார்ந்த சிகிச்சை முறைகளுக்கு இந்தக் கண்டுபிடிப்புகள் பயனுள்ளதாக இருக்கலாம்.
நிலையான நினைவுகள்
நாம் உறங்குகின்ற நேரத்தில், நாள் முழுவதும் நிகழ்ந்தவற்றை நம் மூளை நினைத்துப் பார்க்கும்.
அந்த எண்ணவோட்டமானது குறுகிய காலத்திற்கான நினைவுகளைக் கொண்டுள்ள மூளையின் ‘ஹிப்போகேம்பஸ்’ (hippocampus) பகுதியிலிருந்து ‘நியோகார்ட்டெக்ஸ்’ பகுதிக்குச் செலுத்தப்படுகிறது. இந்த முறைக்கு மெதுவான அலைவரிசை உதவுகிறது.
ஜெர்மனியின் செரித்தே மருத்துவமனைப் பல்கலைக்கழக நரம்பியல் துறை இயக்குநர் பேராசிரியர் ஜோர்ஜ் கெய்கரின் தலைமையில், 45 நோயாளிகளின் பங்களிப்பில் இந்த ஆய்வு வெளியிடப்பட்டது.
ஆழ்ந்த உறக்கத்தால் நினைவாற்றல் வலுவாகிறது. எனவே நல்ல உறக்கம், முதுமைக்கால மறதி நோய்க்கான சிறந்த தடுப்பு அரணாகத் திகழ்வதாகக் கூறுகிறது இந்த ஆய்வு.
ஆழ்ந்த உறக்கத்திற்கான வழிமுறைகள்
வயது ஏற ஏற, ஆழ்ந்த உறக்கம் பலருக்குக் குறைந்து வருவதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. குறிப்பாக, வயதாகும்போது பெண்களைக் காட்டிலும் ஆண்களுக்கு ஆழந்த உறக்கம் குறைகிறது.
உறங்கப் போவதற்கு ஏறத்தாழ 90 நிமிடங்களுக்கு முன்னர் குளிப்பது நல்ல உறக்கத்தைத் தரும். குளிரூட்டப்பட்ட அறையும் நல்ல உறக்கத்திற்குப் பங்களிக்கலாம்.
மெலடோனின் (Melatonin) மாத்திரைகளும் உறக்கத்திற்குத் துணைபுரியக்கூடும். உரிய ஆலோசனை பெற்று அம்மாத்திரையை உட்கொள்ளலாம். பெரும்பாலும் இரண்டு மாதங்களுக்குப்பின் அதனை நிறுத்திக்கொள்ளலாம். அம்மாத்திரையைப் பயன்படுத்துமுன் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.
உறங்குவதற்குமுன் மூன்று, நான்கு மணி நேரத்திற்கு காப்பி, மதுபானம் ஆகியவற்றைக் குடிப்பதைத் தவிர்ப்பதால் உறக்கம் மேம்படும்.
தியானம், இறைவழிபாடு, மெல்லிசை கேட்பது ஆகிய வழிகளின்மூலம் மனத்தை அமைதிப்படுத்தி உறங்குவது நீண்டகால மனநலத்திற்கும் நினைவாற்றலுக்கும் உறுதியாக நன்மை பயக்கும்.


