தீபாவளியும் எண்ணெய்க் குளியலின் நன்மைகளும்

2 mins read
015c7c38-81b6-4d16-8d6e-a4f7b78d6534
தீபாவளித் திருநாளன்று அதிகாலையில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது சிறப்பாகக் கருதப்படுகிறது. - படம்: பின்ட்ரஸ்ட்

தீபாவளித் திருநாளன்று நாம் தொன்றுதொட்டு கடைப்பிடித்து வரும் பாரம்பரிய பழக்கங்களில் ஒன்று எண்ணெய்க் குளியல். இது வெறும் சடங்கன்று. நம் உடல் மற்றும் மனநலத்திற்கு நன்மை பயக்கும் ஒரு சிறப்பான மருத்துவ முறையாகும்.

தீபாவளிப் பண்டிகையன்று அதிகாலையில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது சிறப்பாகக் கருதப்படுகிறது. தீபாவளியன்று எண்ணெய் தேய்த்துக் குளிப்பதன் மூலம் பாவங்கள் நீங்கி, புத்துணர்ச்சி கிடைக்கும் என்பது ஆன்மிக நம்பிக்கை.

உடலுக்கு நன்மை தரும் மருத்துவ முறை

எண்ணெய்க் குளியல் என்பது ஆயுர்வேத, சித்த மருத்துவத்தில் சிறப்பான இடம்பிடித்துள்ள ஒரு முறையாகும். இது உடலின் வாதத்தையும் பித்தத்தையும் சமநிலைப்படுத்த உதவுகிறது.

உடல் சூட்டைக் குறைக்கும்: நல்லெண்ணெய் இயற்கையாகவே குளிர்ச்சித் தன்மை கொண்டது. மாறிவரும் பருவநிலையால் உடலின் அதிகப்படியான வெப்பத்தைத் தணிக்க உதவுகிறது.

இரத்த ஓட்டம் சீராகும்: எண்ணெய்யை உடல் முழுவதும் மென்மையாகத் தேய்ப்பதன்வழி இரத்த ஓட்டம் சீராகிறது. இதனால், உடல் உறுப்புகள் புத்துணர்வுடன் செயல்படத் தொடங்குகின்றன.

தோல்நலம்: எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் சருமத்தின் வறட்சி நீங்கி மிருதுவாகவும் பளபளப்பாகவும் மாறும். எண்ணெய் தோலின் ஆழத்தில் ஊடுருவி ஊட்டமளிக்கிறது; நச்சுகளை நீக்கி இறந்த உயிரணுக்களை அகற்ற உதவுகிறது.

மன அழுத்தம் குறையும்: வெதுவெதுப்பான எண்ணெய்யைத் தேய்த்து குளிக்கும்போது மன அழுத்தம் குறைந்து, மனம் அமைதியடைகிறது. இது நல்ல தூக்கத்திற்கு வழிவகுக்கும்.

பார்வைத் திறன்: எண்ணெய்க் குளியல் கண்களுக்குக் குளிர்ச்சி அளித்து, சோர்வைப் போக்கி, பார்வையை வலுப்படுத்த உதவும் என்று நம்பப்படுகிறது.

மூட்டு, தசை நெகிழ்வுத்தன்மை: உடல் முழுவதும் எண்ணெய் தேய்ப்பது தசை மற்றும் மூட்டுப் பகுதிகளில் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்க உதவுகிறது.

தீபாவளி நாளன்று அதிகாலையில் எழுந்து உச்சி முதல் உள்ளங்கால் வரை நல்லெண்ணெய்யைத் தேய்க்க வேண்டும். சிறிது நேரத்திற்குப் பிறகு, சீயக்காய் பயன்படுத்தி குளிப்பது சிறந்தது. தீபாவளியன்று எண்ணெய்க் குளியல் எடுத்து, புத்துணர்ச்சியுடன் நலமானதொரு புதிய தொடக்கத்தை வரவேற்போம்!

குறிப்புச் சொற்கள்