‘எல்லாம் மின்னிலக்கமயம்’ என்றாகி வரும் இக்காலத்தில், நிஜ உலகிற்கும் மெய்நிகர் உலகிற்கும் இடையிலான எல்லைகளும் வரையறைகளும் அருகி வருகின்றன என்றால் அது மிகையாகாது.
தொழில்நுட்ப வளர்ச்சி ஒருபுறம் சாதகமாக இருந்தாலும், இக்காலத்தில் அனைத்துத் தரப்பினரின் முக்கியமான கவலைகளில் மின்னிலக்கத் தளம் வாயிலாக அன்றாடம் அரங்கேறும் வன்செயல்கள் பற்றிய கவலையும் அடங்கும்.
மின்னிலக்க வன்முறை மெய்நிகரானதன்று மெய்யான பிரச்சினை
தனிநபர்கள், பெண்கள், சிறார், மூத்தோர், சமூகம் என ஒட்டுமொத்த சமுதாயத்தின் மீதும் மாறாத வடுக்களை விட்டுச்செல்லும் இவ்வகை வன்முறை நிழலுலகில் மட்டும் தென்படுவதன்று. அது எதார்த்த உலகில் மெய்யான விளைவுகளை மாந்தர்கள் மத்தியில் விதைத்துச் செல்கிறது.
தொலைத் தொடர்புக் கருவிகள், தொழில்நுட்பச் சாதனங்களைத் தளமாகப் பயன்படுத்தி இணையவெளியில் மின்னிலக்க வன்முறைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்த அணுகுமுறையைப் பின்பற்றி உடல், உள்ளம், சமூகம், அரசியல் பொருளியல் சார்ந்த தீங்குகளை விளைவித்தல், இணையவெளியில் அத்துமீறிய இணையச் சீண்டல், அனுமதி இல்லாமல் இணையத்தில் ஒருவரைப் பின்தொடர்தல் எனப் பல வடிவங்களில் அந்த வன்முறைகள் நிகழ்த்தப்படுகின்றன.
இதற்கிடையே, இத்தகைய துன்புறுத்தல்கள் அண்மையில் அதிகரித்து வருவதாக ஐக்கிய நாட்டு நிறுவனம் (ஐநா) ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளது.
அதன் கூற்றுப்படி, அனைத்துலக அளவில் பெண்கள் மூவரில் ஒருவர் இணையவெளி வன்முறைக்கு ஆளாகியுள்ளனர். இது உடனடி கவனம் தேவைப்படும் முக்கியப் பிரச்சினை என்று ஐநா சுட்டியது.
மின்னிலக்க வன்முறையின் தாக்கம்
இணையம்வழி பகடிவதை, அச்சுறுத்தல், ஒருவரின் தனிப்பட்ட தகவல்களை அவர்களுடைய ஒப்புதல் இல்லாமல் இணையத்தில் வெளியிடுவது (டாக்ஸிங்), கேலி செய்தல் எனப் பலவிதங்களில் செய்யப்படும் இந்த வன்முறைகள் ஏற்படுத்தும் தாக்கம் பன்முகம் கொண்டது.
தொடர்புடைய செய்திகள்
இவற்றால் பாதிக்கப்படுவோர் பதற்றம், சோர்வு, அச்சம், உயிரை மாய்த்துக்கொள்ள எண்ணுதல், இழிவுபடுத்தப்படுதல் என எண்ணற்ற இடர்களைச் சந்திக்க நேரிடுகிறது என்று ஐநாவின் அறிக்கை விவரிக்கின்றது.
மெய்நிகர் தளத்தில் புரியப்படுவதால் அது வன்முறையன்று என்று கருத இயலாது என்று அது தெளிவுபடுத்தியுள்ளது.
புள்ளிவிவரங்கள் காட்டும் நிலவரம்
- பதின்ம வயதுப் பிள்ளைகளில் 59 விழுக்காட்டினர், இணையத் துன்புறுத்தல்கள், சீண்டல்களுக்கு ஆளானதாக அமெரிக்காவின் ‘பியூ’ ஆய்வு நிலைய அறிக்கை கூறுகிறது.
- இணைய அச்சுறுத்தல் ஆய்வு நிலையம் மேற்கொண்ட ஆய்வில், 34 விழுக்காட்டிற்கும் மேற்பட்ட பதின்ம வயதினர் இத்தகைய அச்சுறுத்தல்களுக்கு ஆளாகியுள்ளனர்.
- மின்னிலக்கம் சார்ந்த வன்முறை மனநலத்தில் தாக்கம் ஏற்படுத்துவதை உலகச் சுகாதார நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. இது பேரளவிலான மன அழுத்தம், பதற்றம் ஆகியவற்றிற்கு வழிவகுக்கும் என்றும் அது கூறியுள்ளது.
- ஐநாவின் நீடித்த வளர்ச்சிக்கான ‘பிராட்பேண்ட் ஆணையம்’ இணையவெளி வன்முறை, துன்புறுத்தல்கள் முற்றுப்பெற வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளது.
- சமூகத்தில் பலதரப்பினரின் நலனைப் பாதிக்கும் இத்தகைய செயல்களுக்கு எதிரான நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தபட வேண்டியதன் அவசியத்தையும் அது வலியுறுத்தியுள்ளது.
மேற்கொள்ள வேண்டிய பணிகள்
அறிவார்ந்த சமுதாயத்தை நோக்கிய பயணத்தில் பரவலாகக் காணப்படும் மின்னிலக்க வன்முறையைத் தடுக்கவும் பதிலளிக்கவும் அரசாங்கங்கள், தொழில்நுட்ப நிறுவனங்கள், சமூகம் ஆகிய தரப்புகள் ஒன்றிணைந்து செயல்பட ஐநா அழைப்பு விடுத்துள்ளது.
கல்வி, கையேடுகள், மதியுரைகள் எனப் பல்வேறு தளங்கள் வாயிலாக இத்தகைய துன்புறுத்தல்கள் குறித்த விழிப்புணர்வு அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் அது கேட்டுக்கொண்டுள்ளது.
விழிப்புணர்வுடன் அந்தத் துன்புறுத்தல்களைத் தடுப்பதும் மிக முக்கியமானது என்று சுட்டிய ஐநா, இத்தகைய வன்செயல்களின் அபாயங்கள், விளைவுகள் குறித்த புரிதலை விளக்கும் பிரசாரங்கள், ஆரோக்கியமான இணையவழிச் செயல்பாடுகள், நன்னடத்தைகளை ஊக்குவிக்க உதவும் கற்றல் வளங்கள் ஆகியவை இன்னும் தீவிர செயல்பாடு காணவேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும், இத்தகைய பாதிப்புக்கு ஆளாவோருக்கு உறுதியான ஆதரவை நல்கும் திட்டங்கள் களம்காண, தொடர் முயற்சிகள் எடுக்கப்பட்ட வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
நாடுகள் மின்னிலக்கமயமாகி வரும் வேளையில், அதன் பாதுகாப்பு, இணையம் சார்ந்த கல்வியறிவு, பொறுப்புமிக்க இணையவெளி நடத்தை குறித்த கொள்கைகளை வகுப்பதில் ஐநா கடப்பாட்டுடன் செயலாற்றி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்னிலக்க வெளியில், தொலைத்தொடர்புச் சாதனங்கள் வாயிலாகச் செய்யப்படும் இத்தகைய துன்புறுத்தல்கள் பெரும்பாலான நேரங்களில் உடல் சார்ந்தவையாக இல்லாவிட்டாலும், இவை ஏற்படுத்தும் மெய்நிகர் வடுக்கள் நிரந்தரமானவை என்பதை மறுப்பதற்கியலாது.
மன ரீதியாக, உணர்வுபூர்வமாக அவை விட்டுச்செல்லும் பாதிப்புகள் எளிதில் மறைவதில்லை என்பதும் உண்மை.
நாளுக்குநாள் கூடிக்கொண்டே போகும் இப்பிரச்சினை உடனடி கவனமும் நடவடிக்கையும் தேவைப்படும் முக்கியமான அம்சமாகும்.
இதைத் தடுக்க உலக அமைப்புகள் முதல் உள்ளூர் மன்றங்கள் வரை முயற்சி எடுத்தாலும் தனிநபர் மனப்போக்கில் ஏற்படும் மாற்றம், குறிப்பிடத்தக்க மறுமலர்ச்சியை உண்டாக்கும் என்று துறைசார்ந்த வல்லுநர்கள் கருதுகின்றனர்.
இவை உலக அளவில் தனிநபர்களையும் சமூகங்களையும் பாதுகாப்பதற்கு மிக முக்கியமானவை என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

